எந்த ஜென்மத்திலோ, பள்ளியில் படிக்கும் சமயத்தில் ஜியாக்ரஃபி என்றொரு பாடப்பிரிவு இருந்தது – தமிழில் சொன்னால் பூகோளம். “பிள்ளைங்களா” என்று கத்திக் கொண்டே வாத்தியார் கையில் ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு வருவார். அதை “பூலோக உருண்டை” என்பார். ஆங்கிலத்தில் சொன்னால் Globe. ‘இந்தியா’ இங்க இருக்கு, இது “இந்தியப் பெருங்கடல்”, இது “அரேபியன் ஸீ” என்று என்னவெல்லாமோ சொல்லிக் காட்டுவார். இன்று பள்ளி அறைகளில் பூகோளம் நடத்த Globe எல்லாம் தேவையே இல்லை – ஒரு கம்ப்யூட்டரும் இணையமும் போதும். இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இணையம் மொத்தமும் தேவையில்லை, வெறும் Google மட்டுமே போதும்!
இம்மாதத்தோடு Google பிறந்து பதினோரு ஆண்டுகள் ஆகின்றன. ஒரு சிறு நிறுவனமாக ஆரம்பித்து இன்று இணையத்தையே ஆக்கிரமிக்கும் அளவிற்கு பெரியதொரு ஸ்தாபனமாக வளர்ந்து நிற்கிறது. Googleஐப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், மணிக்கணக்காகச் சொல்லலாம், பக்கம் பக்கமாக எழுதலாம். அப்படிச் செய்யாமல், கட்டுரை ஆரம்பித்த இடத்திற்கு செல்வோம்.
Globe எப்படி Googleஆக மாறியது? உண்மையைச் சொல்லப் போனால், Globe மட்டுமல்ல, எல்லாமே Google வசமாக ஆகிவருகின்றன. யாரும் புத்தகம் படிப்பதில்லை – இணையத்தில் Google செய்தால் எல்லாமே கிடைக்கிறது. “மாதா, பிதா, குரு தெய்வம்” என்ற காலம் போய், “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்ற காலம் வந்துவிட்டது. ஆராய்ச்சி செய்யும் நாங்கள் கூட, எதைப் பற்றியேனும் படிக்க வேண்டும் என்றால், முதலில் Googleன் உதவியைத்தான் தேடுகின்றோம். யாரும் பேப்பர் மேப்ஸ் (Paper Maps) உபயோகிப்பதில்லை, Google Maps வசதியைத்தான் நாடுகின்றார்கள். ஆ! இதோ வந்துவிட்டோம் Globeஐப் பற்றிப் பேசுவதற்கு!
ஆமாம், Mapsக்கும் Globeக்கும் அப்படி என்ன பெரிய வித்தியாசம், 3-D Globeன் 2-D Projectionதானே Map என்பது. ஒன்றுமே புரியவில்லையா? 3-D என்றால் மூன்று பரிமாணங்கள் உண்டு. 2-D என்றால் இரண்டுதான்.
வெளிநாடுகளில் இருக்கும் அநேகமானோர் Google Maps வசதியை நிச்சயம் பயன்படுத்தியிருப்பீர்கள். அவ்வசதி நம் ஊரிலும் வந்துவிட்டதென்று தெரியுமா? Maps.google.com என்ற இணையதளத்திற்குச் சென்று, “Guindy, Chennai, India” to “Mylapore” என்று தட்டச்சு செய்தேன்.
அட! நம்ம சிங்காரச் சென்னைதானுங்க அது!
சரி, சில அறிவுஜீவிகள் என்னிடம் கேட்பது புரிகிறது – “என்னப்பா, Globeன்னு சொன்ன, Mapன்னு சொன்ன, ரெண்டையும் போட்டு கொழப்பற – என்னதான் Projection அது இதுன்னு நீ சொன்னாலும், எப்படி ரெண்டும் ஒண்ணாகும்? Globe Globeதான்ப்பா!”
சரியே! என்னதான் சொன்னாலும் ஒரு Globe செய்வதை, ஒரு Map செய்ய முடியாது – நடுவில் உலகம் விரிந்து கிடப்பதையும், நுனிகளில் சுருங்கிக் கிடப்பதையும் ஒரு Map காட்டாது. இதற்கென்ன பதில் வைத்திருக்கிறது Google ?
Googleன் Policy ரொம்பவும் Simple. ஒன்று, மக்களுக்கு உபயோகப்படும் ஒரு மகத்தான விஷயத்தைத் தானே செய்ய வேண்டும். அல்லது, அப்படித் தான் ஒரு பொருளை தயாரிக்காமல், வேறு எவரேனும் செய்திருந்தால், காசு கொடுத்து அந்தத் தயாரிப்பாளரிடமிருந்து அதை வாங்கிவிட வேண்டும். இந்த Policy எப்படி இருக்கு?!
Keyhole Inc. என்றொரு கம்பெனி, 2001ல் Earth Viewer என்றொரு மென்பொருளைத் தயாரித்தார்கள். அதுதான் கம்ப்யூட்டரில் காணக்கூடிய Globe. ஒரு சிறு பகுதியை மட்டும் பெரிதாக்கி, நம் மானிட்டர் முழுவதும் காணலாம், அல்லது Zoom out செய்து, ஒரு பெரும் பகுதியைக் காணலாம். கடல், நிலம், இரண்டையும் இணைக்கும் பாலங்கள், நிலத்தில் இருக்கும் கட்டிடங்கள் என்று முழு பூமியையும் காணலாம். இப்படி ஒரு நல்ல மென்பொருளைக் கண்டால் Google விட்டு வைக்குமா என்ன? 2004ல் விலை கொடுத்து அம்மென்பொருளை வாங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், அதன் பெயரையும் Google Earth என்று மாற்றி வைத்து விட்டது. ஒரு சிறு மென்பொருள் கருவியாக ஆரம்பித்து, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மலை போல வளர்ந்து நிற்கிறது Google Earth.
திடீர் திடீரென்று Google இந்த மென்பொருளுக்கு update தரும். ஒவ்வொன்றுக்கும் ஒரு Version எண் உண்டு. Earth.google.com என்ற இணையதளத்திற்குச் சென்றால் இந்தக் கருவியின் சமீபத்திய Version Google Earth V.5ஐ தரவிறக்கலாம். இது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கின்றது. நானூறு அமெரிக்க டாலர் காசு கொடுத்தால், இந்தக் கருவியின் புரொஃபஷனல் Versionஐயும் வாங்கலாம்.
ஹலோ, ஹலோ! நான் Googleல் வேலை பார்க்கவும் இல்லை, அவர்களுக்காக விளம்பரம் செய்யவும் இல்லை. சமீபத்தில் இவர்கள் செய்த சில விஷயங்கள் என்னை வியக்க வைத்துள்ளன. அவற்றைச் சொல்வதற்காகத்தான் இத்தனை நேரம் கொடுத்த அறிமுகம்.
இப்பொழுது பூகோளம் மட்டுமல்ல, ஏன் சரித்திரம், கடலியல் (Oceanography) பற்றிய எத்தனையோ சமாச்சாரங்களை Google Earth மூலம் படிக்கலாம். தண்ணீரில் நீந்தத் தெரியாத என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகள், இதன் மூலம் கடலில் குதித்து அடியில் என்ன இருக்கின்றதென்று பார்க்கலாம். வானத்தை நோக்கி உயரும் சிகரங்களில் மௌண்ட் எவரெஸ்ட்தானே மிகவும் பெரியது. உங்களுக்குத் தெரியுமா – இதே போன்ற சிகரங்கள் கடலுக்கு அடியிலும் உண்டு. ஒரே வித்தியாசம், அவை கீழ் நோக்கி இருக்கின்றன. மரியானா ட்ரென்ச்தான் (இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள) உலகிலேயே அதிக ஆழமானது. கிட்டத்தட்ட பன்னிரெண்டு கி.மீ. ஆழம். (மௌண்ட் எவரெஸ்ட் எட்டரை கி.மீ. உயரம்தான்!) Google Earth மூலம் கடலின் ஆழங்களை அறியலாம். வேறென்ன? உலகின் சரித்திரத்தைப் பற்றியும் படிக்கலாம். ஆகா? அதெப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நகரம் எப்படி இருந்தது என்று தேடிப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, ரோம் நகரம் 320 ADயில் எப்படி இருந்திருக்கும் என்பதை 3Dயில் வடிவமைத்திருக்கிறார்கள். இது போன்ற எத்தனையோ சரித்திரச் சின்னங்களுக்கும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள்.
பொறுமை – சென்னை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என்ற யோசனைதானே? அப்பொழுது சென்னையே கிடையாது, வெறும் காடுதான். இருந்திருந்தால், பூம்புகார்தான் இருந்திருக்க வேண்டும். உங்களில் யாருக்காவது பொறுமை இருந்தால், சோழர்கால சரித்திரம் படித்துவிட்டு, யவனராணி போன்ற புதினங்களின் உதவிகொண்டு, உங்கள் மனதில் ஒரு கற்பனை பூம்புகாரை உருவாக்கலாம். பிறகு, அதை மென்பொருள் கருவிகளின் மூலம் வடிவமைக்கலாம். அதற்கும், Google உதவி செய்கின்றது – http://sketchup.google.com/ என்ற இணையப்பக்கத்தைப் பாருங்கள். இதனைக் கொண்டு, உங்கள் பூம்புகாரை வடிவமைத்து Googleடம் தந்தால், அதை அனைவரும் பார்த்து ரசிக்கும்படி Google செய்து விடும். ஹா, எப்படி என் யோசனை?
இப்படி ஒரு கருவி இருந்தால், வித்தை காட்டலாமே! ஆமாம், நீங்கள் நினைப்பது சரியே. உலகில் இருக்கும் அநேக நகரங்களை 3D மூலம் வடிவமைத்து விட்டார்கள். உங்கள் ஊரில், உங்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு முழு உலகத்தையும் சுற்றிப் பார்க்கலாம். அது மட்டுமல்லாமல், சில வருடங்களுக்கு முன் அந்த ஊர்கள் எல்லாம் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதையும் கண்டு களிக்கலாம். இது ஒரு கால இயந்திரம் போல இல்லை?! இவ்வளவு ஏன் – செவ்வாய் கிரகத்தின் 3D வடிவத்தைக் கூட இந்தக் கருவியின் மூலம் வடிவமைத்து விட்டார்கள். அதனையும் ரசித்துவிட்டு “நானும் செவ்வாய் பார்த்துவிட்டேன்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
இன்னும் ஒன்றுதான் மிச்சம், அது நடந்தாலும் ஆச்சரியமே கிடையாது. மூவாயிரத்து இருநூற்றி நாற்பத்தியேழில் நியூயார்க் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு அறிவு ஜீவி கற்பனை செய்து, தன் கற்பனைக்குத் 3D வடிவம் கொடுத்து, அதனை Googleல் தரவேற்றம் செய்யலாம். என்ன – அத்தனை காலம் யார் உயிருடன் இருக்கப்போகிறார்கள் என்ற தைரியம்தான்!!
“
வியக்க வைக்கும் செய்திகள்!
சூப்பர் சார்.
நரேன்!
கூகுள் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை. எனக்கும்கூட ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு போகணும்னா கூகுள் மேப்”பை பார்த்துட்டு போகும் பழக்கம் உண்டு.
“
கூகுள் பற்றிய விளக்கங்கள் அருமை.
Informative! Thanks.