திமிங்கலங்களின் (whales) சுவாசிப்பு:
தரைவாழ் பாலூட்டும் விலங்குகளை விடக் குறைவான அளவுக்குத்தான் திமிங்கலங்கள் மூச்சுக் காற்றை உள்ளிழுக்கின்றன; மேலும் அவை நீந்தும்போது அசாதரணமான கால அளவுக்கு மூச்சை வெளிவிடாமல் உள்ளே இருத்திக் கொள்கின்றன. ஒத்த அளவுக்கு உருவம் கொண்ட தரைவாழ் விலங்கினங்களின் நுரையீரலை விடத் திமிங்கலங்களின் நுரையீரல் பெரிதல்ல எனினும், இவை ஆழ்ந்து மூச்சை உள்ளிழுப்பதால், அதிக அளவுக்கான உயிர்வளியை அதாவது ஆக்சிஜனை காற்றிலிருந்து பெறுகின்றன. நீந்தத் துவங்கும் முன்னரே மூச்சை வெளிவிடும் (exhale) கடல்நாயைப் (seal) போலல்லாமல், திமிங்கலத்தின் நுரையீரல் ஓரளவுக்குக் காற்றை உள் வைத்திருக்கும். திமிங்கலத்தின் மூக்குகள் (nostrils) அதன் தலை மீது மூச்சு விடும் புழை (blowhole) போன்று அமைந்திருக்கும். இந்த மூச்சுப் புழையைச் சுற்றியுள்ள தோல் பல சிறப்புகளை உடைய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது; தண்ணீரைப் பிளந்து செல்லும் மூச்சுப்புழை கூருணர்வுத் திறனுள்ளதாக விளங்குகிறது. நீர்ப் பரப்புக்கு மேலே மூச்சுப்புழை இருக்கையில் திமிங்கலம் விரைந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகிறது. ஆனால் நீருக்குள் மூழ்கி இருக்கையில் மூச்சுப்புழை மூடியிருக்கும்; நீர்ப் பரப்புக்கு மேலே திமிங்கலம் வரும்போது மூச்சை வெளிவிடுவதால் நீர் பீய்ச்சி அடிக்கப்படுவதைக் காணலாம்.
மீன்கொத்திப் பறவை (kingfisher) இரை தேடுதல்:
மீன்கொத்தி என்பது உலகம் முழுவதும் காணப்படும் ஒரு பறவைக் குடும்பமாகும்; இப்பறவைகள் பெரிய தலை, நீண்ட, கனமான மற்றும் கூர்மையான அலகு, குட்டைக் கால்கள் மற்றும் குட்டையான துண்டு வால் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றின் வெளிப்புற மற்றும் நடுப்பகுதிக் கால்கள் வலிமையான சவ்வுகளால் ஒன்றிணைக்கப்பட்டு இருக்கும்.
மீன்கொத்திப் பறவை ஏரி அல்லது நீர்நிலைகளின் அருகிலுள்ள மரக் கிளையின் மீது அமர்ந்து நீர்ப்பரப்பின் மேல் நீந்தும் மீன்களுக்காக நீண்டநேரம் காத்துக் கொண்டிருக்கும். பின்னர், சில நேரங்களில் மீனைத் துரத்திக்கொண்டு நடுவானில் நிலைகொண்டிருக்கும். இவை வழக்கமாகத் தம் இரை மீன்களை நீண்ட அலகுகளால் பிடித்து, வெளியில் அவற்றைத் தூக்கிப்போட்டு, கவ்விப் பிடித்து, தலையை முதலில் விழுங்கும். மீன்கொத்திப் பறவைகள் நண்டு, தவளை, தலைப் பிரட்டைகள் (tadpoles), அரணைகள் (salamanders) மற்றும் பூச்சிகள் ஆகியவற்றையும் இரையாக விழுங்கும்.
“