நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
மூளையில் ஒரு பல்ப் மினுக்கென்றது.
"விக்ரம்?"
"யெஸ், யெஸ்" ஸென்று ஆச்சர்யப்பட்டான்.
"எப்படி சார் தெரியும் ஒங்களுக்கு? இந்தக் கேஸ் இன்னும் பேப்பர்ல வரலியே?"
பேப்பர் பாத்தா ஒரு டிடக்ட்டிவ் கேஸப்பத்தித் தெரிஞ்சுக்குவான்? பாவி விக்ரம் சாதனாவைக் கொலையே பண்ணிட்டானா!
"சாதனா" என்கிற பெயரை நான் உச்சரித்ததும் கிஷோர் நொறுங்கிப் போனான்.
"சாதனா, என் சாதனா" என்று அரற்றினான்.
"சாதானாவோட இனிஷியல் வி னா மிஸ்டர் கிஷோர்?"
"அதில்ல மிஸ்டர் பொற்கை. அவ என்னோட சாதனா. எனக்கே எனக்கான சாதனா. காலேஜ் டேய்ஸ்லயிருந்தே காதலிச்சோம் சார். உயிருக்குயிராக் காதலிச்சோம்."
ஒரு இன்ட்டர்வெல் விட்டான். கல்லூரிக் காதல் நாட்களை அசை போட்டிருந்திருப்பான்.
ஆச்சர்யமாயிருந்தது – பயல் மதுபாலாவின் பக்கம் பார்வையைத் திருப்பவேயில்லை.
உண்மையிலேயே சாதனாவை விசேஷமாய்க் காதலித்திருக்கிறான். விஸ்வாசமான காதல். பாசமுள்ள காதல்.
"அப்பறம்?" என்று நான் உசுப்பிவிட்டேன்.
"அப்பறம், இந்த வில்லன் விக்ரம் நடுவுல புகுந்தான். சாதனாவோட அப்பா மனசக் கெடுத்து, என்னோட சாதனாவக் கட்டாயக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா, கல்யாணத்துக்கப்பறமும் சாதனாவும் நானும் ரகஸ்யமா மீட் பண்ணிட்டுதானிருந்தோம். விக்ரமுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு. இதனால சாதனாவுக்கும் அவனுக்கும் அடிக்கடி சண்ட. சாதனாவுக்கு ஒரு பெண் கொழந்த பொறந்தது. அனுராதா."
"அனுராதா தனக்குப் பொறந்த கொழந்தயில்ல, அது கிஷோருக்கு, அதாவது ஒங்களுக்குப் பொறந்த கொழந்தன்னு விக்ரம் அபாண்டமாப் பழி சொமத்தினான்."
"அபாண்டமொண்ணுமில்ல பொற்கை, உண்மை அதுதான் (அடப்பாவி!). அனுராதாவுக்கு இப்ப நாலு வயசு. சரி, விஷயத்துக்கு வர்றேன். போன வாரம் ஒரு நாள் நான் சாதனாவோட ஒரு விவகாரமான வேலையில ஈடுபட்டிருந்தப்ப.."
"விகாரமான?"
"இல்ல. விவகாரமான."
"விவரமாச் சொல்லுங்க அந்த விவகாரத்த."
கிஷோர் தயங்கினான்.
"டாக்டர்ட்யும் டிடக்ட்டிவ்ட்டயும் எதயும் மறக்யக் கூடாது கிஷோர்" என்று கீ கொடுத்தேன்.
முதன் முறையாய்க் கிஷோர் மதுபாலாவைப் பார்த்தான், சங்கடத்துடன்.
"மதும்மா, கீழ போய் டீ சொல்லிவிட்டு வாயேன்." என்று அவளை அப்புறப்படுத்திவிட்டு, ஆவலோடு கிஷோரைப் பார்த்தேன்.
"பொற்கை, அந்த விவகாரத்த இங்கிலீஷ்ல சொன்னாத்தான் ரசிக்கும்" என்றான்.
"எனக்கு இங்கிலீஷ் தெரியும், சொல்லு" என்றேன். ஏகவசனம் இயல்பாய் வந்துவிட்டது.
"அதாவது, சாதனாக்கிட்ட when I was negotiating a curve, விக்ரம் பாத்துட்டான்" என்று கிஷோர் அனுபவித்துச் சொன்னான்.
காதலியை இழந்த சோகத்துக்கு மத்தியிலும் ரசனையோடு அவன் சொன்ன ஆங்கில வாக்கியத்தை நானும் ரசித்தேன்.
"அப்புறம்?"
"அப்புறமென்ன, அப்பவே ப்ளான் பண்ணிட்டான் சாதனாவ க்ளோஸ் பண்ணிர்றதுன்னு. ஆள வச்சு வேலய முடிக்க ட்ரை பண்ணியிருக்கான். அது சரியா வராமப் போகவும் அவனே ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்டான்."
"அதாவது?"
"கொழந்த அனுராதா கைக்கு எட்டற மாதிரி துப்பாக்கிய லோடு பண்ணி வச்சிருக்கான், கொழந்த விளையாட்டுப் போல துப்பாக்கிய எடுத்து சாதனாவப் பாத்து ட்ரிகர அழுக்கிருச்சு. நெத்தியில புல்லட் பாஞ்சு ஸ்பாட்லயே சாதனா க்ளோஸ்."
நான் சுறுசுறுப்பானேன். மது ஆர்டர் செய்த டீ சுறுசுறுப்பை மேலும் கூட்டியது.
"இதப் பாத்தது யார்" என்றேன்.
"கொழந்தயே சொல்லுது" என்றவன், திரும்பவும் புலம்ப ஆரம்பித்து விட்டான்.
"பொற்கை, அனுராதாவ என்ன பண்ணுவாங்க? ஜுவனைல் ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருவாங்களா பொற்கை? ஐயோ, என்னோட கொழந்த எனக்கு வேணும் பொற்கை, சாதனா தான் போய்ட்டா, கொழந்தயவாவது எனக்கு மீட்டுக் குடு பொற்கை."
நான் அவனைத் தேற்றினேன்.
"அதெல்லாம் அனுராதாவுக்கு ஒண்ணும் ஆகாது கிஷோர். எனக்கு ஒரு க்ளூ கெடச்சிருக்கு, அது சரியா ஒர்க் அவுட் ஆகும்னு நம்பிக்கை இருக்கு. பயப்படாத, நா பாத்துக்கறேன். நீ எனக்கு ஒரேயொரு உதவி மட்டும் செய்."
"செய்றேன் பொற்கை, சொல்லு."
"வாக்கியத்துக்கு வாக்கியம் பொற்கை பொற்கைன்னு கூப்புடாத. ஒண்ணு, முழுப்பேரச் சொல்லிக் கூப்புடு, இல்ல, பாண்டியன்னு கூப்புடு."
"சரி, இனிமே பாண்டியன்னே கூப்புடுறேன் பொற்கை" என்று முதன் முறையாய் சிரித்தான்.
அவனை ஸ்பாட்டுப் போய்க் காத்திருக்க அனுப்பி விட்டு, மதுபாலாவோடு பைக்கில் கிளம்பினேன்.
மதுவின் நெருக்கம் ஒரு மயக்கத்தைத் தந்தது. மதுபாலாவோடு பைக்கில் போவது வாழ்க்கையின் மிகச் சொற்பமான அற்ப சந்தோஷங்களில் ஒன்று.
(மீதி அடுத்த இதழில்)“