செய்த தவறுகளைத்
திரும்பத் திரும்பச் செய்வதைவிட புதிதாய்
ஏதாவது செய்ய எத்தனித்துத்
தப்பாய்முடிந்தால் தப்பே இல்லை!
சரியானதைச் செய்யக்
காலம் பார்த்துக் காலம் பார்த்துக்
காலமாவதை விட
அடிக்கடி தவறுகள் செய்யலாம்!
ஏனெனில் எந்தத் தவறில்
சரியின் சந்தர்ப்பம் இருக்கிறதோ?
நடை மறந்த
நதியைவிடத் திசை மாறிய
ஓடையே
தேவலாம்!
பழுதே இல்லாதவை
பழுத்து விடுவதில்லை எடுத்த எடுப்பில்!
எனவே
பழுதுகளைச் செய்து
பழுது பார்த்துக் கொண்டிருப்பதே
இயங்கும் வாழ்க்கைக்கு
இலக்கணம்.