பழங்கள் மனிதனுக்கு இறைவன் கொடுத்த சுவையான அற்புதங்கள் என்றே சொல்லவேண்டும். கண்ணுக்கு விருந்தளிக்கும் நிறங்களில், வாயில் நீர் ஊறவைக்கும் மதுரச் சுவைகளுடன், உடலுக்குக் கெடுதியில்லாத ஓர் உணவாக, பல்வேறு சத்துக்களை உடலுக்கு அள்ளி வழங்கும் இந்தப் பழங்களை யார்தான் வெறுப்பார்கள்? எவருக்குமே பிடித்தமானவை இந்தப் பழங்கள்.
கண்டத்திற்குக் கண்டம், காணப்படும் பழங்கள் வேறுபடுகின்றன. உதாரணத்துக்கு, தெற்கு ஆசிய நாடுகளில் தாராளமாகக் காணப்படும் மாம்பழங்கள், வாழைப்பழங்கள், அன்னாசிப் பழம் போன்றவை ஐரோப்பிய நாடுகளில் வளர முடியாதவை. அதே சமயம், இங்குள்ள ஸ்றோபெரி, றாஸ்ப்பெரி, ஆப்பிள் போன்ற பழங்கள் நமது நாட்டில் வளர்த்துப் பெறமுடியாதவை. அந்தந்த நாடுகளிலுள்ள வெப்பநிலைக்கு ஏற்பப் பழங்கள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன.
ஆப்பிள் பழம் சுவைமிக்க, சத்துள்ள ஒரு பழமாகும். ஐரோப்பிய மண்ணில், பல இனங்களில் தாராளமாகக் கிடைக்கும் பழங்கள் இவை. தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால், வைத்தியருக்கு வீட்டில் வேலை இல்லை என்று ஆங்கிலத்தில், இந்தப் பழத்தின் புகழ்பாடும் ஒரு பழமொழியும் இருக்கின்றது. ஆப்பிளை ஒழுங்காகச் சாப்பிட்டு வந்தால், பல பிணிகள் நம் வீடு தேடி வராது என்பது நிச்சயம்!
மேற்கு ஆசியாதான் ஆப்பிளின் பிறப்பிடம் என்கிறார்கள். காட்டில் வளர்ந்த அல்மா என்ற பெயர் கொண்ட ஆப்பிள் இனம்தான், ஆப்பிளின் மூதாதையர் என்று சொல்லப்படுகின்றது. இன்றும் இந்த அல்மா இனம் மேற்காசியாவில் காணப்படுகின்றது. சமைப்பதற்கும், அப்படியே சாப்பிடுவதற்கும் என்று 7500 வேறுபட்ட ஆப்பிள் இனங்கள் உலகில் உள்ளன.
2005இல் எடுத்த ஒரு கணிப்பீட்டின் பிரகாரம், உலகெங்கும் ஆயிரம் கோடி டாலர் பெறுமதியான ஆப்பிள் கனிகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறியப்பட்டிருந்தது. இந்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 35 வீதம்! இரண்டாவது இடம் வகிக்கும் அமெரிக்கா 7.5 வீதம். மூன்றாம் இடத்தை ஈரானும், அடுத்தடுத்த இடங்களை முறையே துருக்கி, ருஷ்யா, இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளும் பெற்றிருக்கின்றன.
கி.மு. 328இல் மாவீரன் அலெக்ஸான்டர், ஆசியக் கண்டத்திலுள்ள கஸகஸ்தானிலிருந்து, குட்டையாக வளரும் ஆப்பிள் மரமொன்றை மஸிடோனியாவிற்குக் கொண்டுவந்த பெருமையைப் பெறுகின்றார். மாரிகால ஆப்பிள் என்று சொல்லப்படும் ஓர் இனம், இலையுதிர் காலத்தின் பிற்பகுதியில் மரங்களிலிருந்து கொய்யப்பட்டு, பின்பு உறைநிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, ஆசிய, ஐரோப்பியக் கண்டங்களில் நல்லதொரு உணவாக நீண்ட காலம் உபயோகிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காவுக்கு ஆப்பிள் வந்த காலம் 17ஆம் நூற்றாண்டுதான்! முதன்முதலாக ஓர் ஆப்பிள் தோட்டம், அமெரிக்காவின் பொஸ்டன் நகர் அருகே 1625இல்தான் தோன்றியுள்ளது. 20ஆம் நூற்றாண்டில், நீர்ப்பாசனத் திட்டங்கள் வாஷிங்டன் நகரில் அறிமுகமாகியதால், பல கோடி டாலர் பெறுமதியான பழ உற்பத்தி தொடங்கப்பட்டது. இவற்றுள் ஆப்பிளுக்குத்தான் முதலிடம் என்கிறார்கள்.
20ஆம் நூற்றாண்டு வரையில், மேலதிகமான ஆப்பிள்களை நிலவறைகளில், மாரிகாலப் பாவனைக்காக அல்லது விற்பனைக்காகப் பாதுகாத்து வைக்கும் முறை இருந்து வந்துள்ளது. ஆனால், இக்காலக்கட்டத்துக்குப் பின்பு, தெருக்கள் நன்றாகச் செப்பனிடப்பட்டு விட்டதாலும், ரயில் சேவைகள் ஆரம்பமாகி விட்டதாலும், புதிய ஆப்பிள்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பும் நிலை தோற்றுவிக்கப்பட்டது.
ஆப்பிள் நிலைத்த இளமையைத் தரும் என்ற நம்பிக்கை முற்காலத்திலே இருந்திருக்கின்றது. 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்கான்டிநேவிய இதிகாசமொன்றில், பெண் தெய்வம் ஒன்றிற்கு ஆப்பிள்களைக் காணிக்கையாகக் கொடுத்துத் தமக்கு நிலைத்த இளமையைத் தரும்படிக் கோரியதாக எழுதப்பட்டிருக்கின்றது.
புராதனக் கிரேக்க மக்களின் நம்பிக்கையின்படி, ஒருவரை நோக்கி ஆப்பிள் ஒன்றை எறிந்தால், அவர் தன் காதலை வெளிப்படுத்த முயல்கின்றார் என்று அர்த்தமாம். எறியப்பட்ட ஆப்பிளை மற்றையவர் பிடித்துக் கொண்டால், காதலை ஏற்றுக்கொள்வதன் சமிக்ஞை.
ஏடன் தோட்டத்தில் ஏவாள் ஆதாமுக்கு உண்ணக் கொடுத்த பழம் எந்தப் பழம் என்று சொல்லப்படாவிடினும், கிரேக்க இதிகாசத்தில் தங்க ஆப்பிள்கள் பல இடங்களில் சொல்லப்படுகின்றன. இந்த அழுத்தம், ஏவாள் சாப்பிட்ட பழம் ஆப்பிள் என்றாக்கி விட்டது. இதன் எதிரொலியாக ஆப்பிள் என்றால் இறவாமை, அறிவு, சோதனையில் வீழ்தல், பாவம் செய்தல் போன்றவற்றைக் குறிப்பதாக இருக்கின்றது. இலத்தீன் மொழியில் தீங்கு, துரதிஷ்டம் என்பவற்றைக் குறிக்கும் சொல்லும் ஆப்பிளைக் குறிக்கும் சொல்லும் ஒன்றாகவே இருக்கின்றது. இதன் அழுத்தமும் பைபிளின் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்ற நிலையைத் தோற்றுவித்திருக்கலாம் எனக் கருதுகின்றார்கள்.
கொழுப்பிலாத, குறைந்த காலரிகளைக் கொண்டது ஆப்பிள் பழம். கொலாஸ்ரோல் இதில் கிடையாது. இந்தப் பழத்திலுள்ள நார்ச்சத்து, உடம்பில் கொலஸ்ரோல் தேங்குவதைத் தடுக்கும் திறன் கொண்டது. விட்டமின் சி சத்து இருப்பதால், இது நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றது.
பலவகைகளிலும் சிறந்து விளங்கும் இந்த ஆப்பிளை அன்றாடம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்! உடலை வருத்தும் பிணிகளை விரட்டியடிப்போம்!