மேலிருந்து தொங்கும் ஒரு கறுப்பு நிறப் பட்டுச் சேலையைப் போல இருள் மெல்லிய காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. தூரத்தே நின்று கொண்டிருந்த கப்பல்களிலிருந்து மினுக்கிக் கொண்டிருந்த விளக்குகளைத் தவிர, அந்தக் கடற்கரைப் பிரதேசத்தில் வேறு வெளிச்சம் இல்லை. மெல்ல நடந்து கொண்டிருந்த நிலவையும் மேகங்கள் மூடத் தொடங்கியிருந்தன. வெவ்வேறு திசைகளிலிருந்து வந்து சேர்ந்த கறுப்பு மேகங்கள், தங்களின் கனத்த வயிறுகளுடன், ஒருவித மிரட்டலுடன், அதிகாரத்துடனும் கூடத் திரிந்து கொண்டிருந்தன. அவ்வப்போது மின்னல் பாம்புகள் நெளிந்து நெளிந்து மறைந்தன. அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
"இன்று மழை வரப்போகிறது!"
மெல்ல ஒரு மகிழ்ச்சி அவள் உடலில் பரவத் தொடங்கியது. குடிசையிலிருந்து ஓடி வந்தபோது கொப்பளித்துக் கொண்டிருந்த கோபம், மெல்ல அடங்குவது போலத் தெரிந்தது. ஒருவிதமான மகிழ்ச்சி கலந்த ஆவல் அவளை மெல்லச் சூழத் தொடங்கியது.
"இது விசேஷமான இரவுதான்! கும்மிருட்டு… தூரத்து விளக்குகள்… சீறும் அலைகள்! மெல்லிய தூறல்…! ஆஹா!" என்று எண்ணிக் கொண்டாள் அவள். இரவும் மழையும் அவளுக்கு மிகவும் பிடித்தவை. அதுவும், இரவும் மழையும் சேர்ந்து கொண்டால் பின் கேட்கவா வேண்டும்? கடற்கரை மணல் அவள் வேகத்தைக் கட்டுப்படுத்த, மெல்ல, ஆனால் உறுதியாகக் கடலை நோக்கி நகரத் தொடங்கினாள் அந்தச் சிறுமி. மழையை எதிர்பார்த்திருந்த மக்கள், கடற்கரைக்கு வராதது அவளுக்கு மிகவும் சாதகமாக அமைந்து போயிருந்தது.
"அப்படியே வந்திருந்தாலும் இந்த இரவு நேரத்தில், மழை நேரத்தில், ஊதல் காற்றில் மக்கள் இங்கு இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை" என்று எண்ணிக் கொண்டாள் அவள். நேரம் செல்லச் செல்லக் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. உப்புக் காற்றின் ஈரம் அவள் மேல் பரவி ஒரு கசகசப்பை ஏற்படுத்தியது. அந்தக் காற்றின் சலசலப்பு அவளுடைய மனப் புண்ணுக்கு மருந்திட்டதைப் போலவும் இருந்தது. சடக்கென்று அவள் நின்றாள். தன்னுள் அடர்ந்து பரவி இருந்த கோபம் குறைந்து விடுமோ என்று ஒரு கணம் அஞ்சினாள். அவள் மனம் சஞ்சலப்பட்டது.
"கூடாது!… கூடாது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டே, விடாமல் கடலை நோக்கி நடந்தாள். குறைந்து போன ஆத்திரத்தை மீண்டும் வலிய வரவழைத்துக் கொண்டாள்.
திடீரென ஒரு மின்னல் வெட்டி மறைந்தது. சட்டென்று அவள் வானத்தை நிமிர்ந்து நோக்கினாள். கண்களைக் குவித்துக் கொண்டு உற்றுப் பார்த்தாள். சரிதான்! அங்கே அவள் தந்தை தெரிந்தார். அதே சிரித்த முகத்துடன்… அவளையே பார்த்தபடி… அவள் திடுக்கிட்டாள்.
"அப்பா வேணாம்!… பார்க்காதே!… இப்பிடிக் கீழே பார்க்காதே! உனக்குத் தாங்காது!"
படபடக்கும் இதயத்துடன், மரத்தின் மேலிருக்கும் பறவையை விரட்டுவதைப் போலத் தந்தையை ஆகாயத்திலிருந்து விரட்டினாள். போகச் சொல்லி மன்றாடினாள். அங்குமிங்குமாக ஓடினாள். இருளையும் காற்றையும் தவிர அவளைப் பார்த்துச் சிரிக்க அங்கே யாரும் இல்லை.
காற்று மிகவும் வலுக்கத் தொடங்கியது. அவள் உடைகளோடு மூர்க்கமாக விளையாடியது. தட்டுத் தடுமாறி மீண்டும் கடலை நோக்கி நடை போட்டாள். இருட்டு கனத்து விட்டிருந்தது. நட்சத்திரங்களும் நிலவும் ஒரேயடியாக மறைந்து விட்டிருந்தன. சூல் கொண்ட மேகங்கள், வெறியுடன் பூமியைத் தாக்கத் தயாராயிருந்தன. ஓரிரண்டு தூறல்கள் விழுந்து விட்டதையும் அவள் உணர்ந்தாள். அவளது உற்சாகம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
"இந்த இரவில்… கொந்தளிக்கும் கடலில் மழை பெய்வதைப் பார்க்க எப்படி இருக்கும்?" மழை பெய்யும்போது கடலைப் பார்க்க வேண்டுமென்பது அவளின் நீண்ட நாள் ஆசை. இன்று அது நிறைவேறலாம் போலிருக்கிறது. சற்று வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
"கடல் தண்ணீர் மேல் மழை நீர் பட்பட்டென்று விழும்பொழுது எப்படி இருக்கும்?" அவள் ஆசை பேராசையானது. இன்னும் வேகமாக நடந்தாள். அநேகமாகக், கடல் பரப்பிற்கு அருகில் வந்து விட்டாயிற்று. பின்னால், தூரத்தே அவளுடைய குடிசையிலிருந்து ஏதேதோ குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. யார் யாரோ நிறைய பேர் கூச்சலிடுவதைப் போல… தபதபவென்று ஓடி வருவதைப் போல… ஒரு காடா விளக்கின் ஒளிக்கற்றைத் துணையுடன்…
அந்தக் கும்மிருட்டில், பேய்க் காற்றில், காடா விளக்கின் ஒளி அப்படியும் இப்படியுமாக ஆடி ஒரு பயங்கரமான காட்சியை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு பெரிய சப்தத்துடன் மின்னல் ஒன்று வெட்டியது. காதுகளைப் பொத்தியவாறு அவள் ஆகாயத்தைப் பார்த்தாள். அவள் தந்தை அங்கேயேதான் இருந்தார். ஆகாயம் முழுவதுமாக அவருடைய சிரித்த முகம் நிரம்பி இருந்தது.
"சே! எப்பவும் இப்பிடி சிரித்துக் கொண்டேதான் இருப்பாயா! உனக்குக் கோபமே வராதா?" என்றெண்ணித் தலையைக் குனிந்து கொண்டவள், அலறியடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அண்ணாந்து பார்த்தாள். அங்கேயேதான் தந்தை இருந்தார். அவளைப் பார்த்துக் கொண்டே…
"ஐயோ அப்பா! சொன்னால் கேளேன்! போ! போய் விடு! இதையெல்லாம் நீ பார்க்காதே!" என்று வெறி பிடித்தவள் போலக் கத்தினாள். காற்று அவள் குரலை அப்படியும் இப்படியுமாகச் சுழற்றி அடித்து விளையாடியது.
மறு கணம், "என் கண்ணு! எங்கடி இருக்கே? கண்ணே!" என்ற தாயின் குரலை, தூரத்தே இருந்து அதே காற்று இழுத்து வந்து அவளிடம் போட்டது. அது அவளுடைய கோபத்தை, உறுதியை மேலும் அதிகரிக்கத்தான் செய்தது. ஒருவித அருவெறுப்பைக் கூடக் கொடுத்தது. கால்களை எட்டிப் போட்டாள் கடலை நோக்கி.
இதோ கடல்! அவளுக்கு ஒருகணம் மெய் சிலிர்த்தது. கண் முன் விரிந்த அந்த அற்புதக் காட்சி… இயற்கையின் பிரம்மாண்டம்… அவளைக் கொள்ளை கொண்டது. பேரோசையோடு ஆர்ப்பரிக்கும் அலைகள்… தூரத்தே அசையும் கப்பல்கள்… வெட்டி வெட்டி மறையும் சாட்டை மின்னல்கள்… சடசடவென்று வேகம் பிடித்து விழத் தொடங்கியிருந்த மழைத் துளிகள்! அடடா! அற்புதம்!… அற்புதம்!
அவளுக்கு மூச்சை அடைப்பதைப் போலிருந்தது. "என்ன அற்புதமான காட்சி இது! எதற்கெல்லாம் இதுநாள் வரை ஆசைப்பட்டேனோ, அவை அத்தனையும் ஒரே இரவில்…"
வெறியுடன் விழுந்த மழைத் துளிகள் அவளது உடையை அவள் உடலோடு ஒட்டச் செய்தன. சிரமப்பட்டு, ஆனால் கலங்காத உறுதியுடன் முன்னேறினாள்.
"என் கண்ணே! எங்கடி இருக்கே?" கனத்த சரீரத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு, மூச்சிரைக்க ஓடி வரும் தாயின் குரல் மீண்டும் மீண்டும் கேட்டது. இப்போது சற்று அருகில். ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையில் அந்தக் காடா விளக்கின் ஒளிக் கற்றை, காற்றால் அலைக்கழிக்கப்பட்டு, பூதாகாரமாக, வக்கீல்கள் சட்டத்தின் ஓட்டை உடைசல்களைத் தேடுவதைப் போல எதையோ துழாவிக் கொண்டிருந்தது.
சற்றுச் சந்தேகத்துடன் மீண்டும் மேலே பார்த்தாள் சிறுமி. அங்கேயே தந்தை இருந்தார். அதே சிரித்த முகம்! மீண்டும் "ஐயோ!" என்று தலையில் அடித்துக் கொண்டாள். "வேண்டாமப்பா! பார்க்காதே! உன்னுடைய இடத்திற்கே போய் விடு! உனக்குத் தாங்காதப்பா! நான் பார்த்ததை நீ பார்த்து விட்டால் நீ தாங்க மாட்டாய்! மீண்டும் மரிப்பாய் நீ! போ! போய் விடு" என்று மனநிலை பேதலித்தவளைப் போலக் கத்திக் கொண்டே, கடலை நோக்கி வெறியுடன் ஓடினாள் அந்தச் சிறுமி. கடலன்னை மெல்ல எழுந்து அவளை அணைக்கத் தொடங்கினாள்.
கூச்சல்களுடன் அவளை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தது அந்தக் கும்பல். எல்லாருக்கும் முன்னால் அவள் தாய்! கூடவே அந்த ஆளும்தான்!