3.5. நன்குபணி புரிய நான்கு நெறிகள்
உலக நன்மைக்காக நமது கடமைகளை இடையறாது புரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று சொல்லும் சுவாமி விவேகானந்தர், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறார். நன்றாகப் புரிந்து கொள்வோம்! உலகம் நாய்வால் போல. அதை நிமிர்த்த வேண்டும் என்று பலரும் பல காலமாகப் பயனின்றி முயன்று வந்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டால், பற்றின்றிக் கடமை ஆற்றுவது கைவரும்.எப்படி? நமது மேம்பாட்டுக்காக, நமது மனம் செம்மைப்படுவதற்காக, நமது கடமை எனக் கருதி உலக நலனுக்காகச் செயல்பட வேண்டுமே தவிர, இந்த உலகம் நம்மை எதிர்பார்த்திருக்கிறது, உலகம் ஒருநாள் சீராகி விடும் எனவெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்! இந்த நினைப்புகள் தீவிர வெறியாகி, "போச்சு, போச்சு, இந்த உலகம் நாசமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது!" எனக் கவலைப்பட்டு, தூக்கம் இழக்கத் தேவையில்லை. உலகத்தை லட்சிய பூமியாக்குவது என்பது யாராலும் ஒருநாளும் சாத்தியம் இல்லாத விஷயம். இதைப் புரிந்து கொள்பவன், விவேகம் உடையவன், அறிவிலே தெளிவும், சித்தத்தில் அமைதியும் உடையவன், மனதில் அன்பும் பரிவும் உள்ளவன்,பதற்றம் இன்றித் தன்கடமைகளைச் சிறப்பாகச் செய்துகொண்டு, உலக நன்மைக்காக உழைத்துத் தன்னையும் செம்மைப்படுத்திக் கொள்ள முடியும்.இது இல்லாமல், எல்லாவற்றையும் அடியோடு புரட்டிச் சரி செய்து விட முடியும், வேண்டும் எனத் தீவிர வெறி உள்ளவனுக்கு,அமைதி குலைவதும், செய்யும் பணிகளில் குழப்பமும்தான் மிஞ்சும்!
இதுவரை சொன்ன கருத்துகளை, சுவாமிஜியே நிரல்படத் தொகுத்துத் தந்துள்ளார். அதை,நல்ல பணி ஆற்ற நான்குநெறிகள் எனக்கொண்டு நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
முதலில், நாம்தான் இந்த உலகத்துக்குக் கடன்பட்டிருக்கிறோமே தவிர, இந்த உலகம் நமக்குக் கடன்பட்டில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! உலகுக்காக நாம் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருப்பது, நமக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை. உலகுக்கு உதவுவதன் மூலம் நாம் நமக்குத்தான் உதவிக் கொள்கிறோம்.
இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் வழி நடத்திக் கொண்டிருக்கிறான். இந்த உலகம் வழி தவறிப் போகிறது என்பதோ, நீங்களோ நானோ உதவ வேண்டும் என எதிர்பார்த்திருக்கிறது என்பதோ உண்மையில்லை. இறைவன் எங்கும் நிறைந்தவன், எதையும் செய்ய வல்லவன், சர்வக்ஞன், அழிவில்லாதவன், இந்தப் பிரபஞ்சத்தை அக்கறையுடன் கவனித்து இயக்கிக் கொண்டிருக்கிறான். உலகம் உறங்கினாலும், இறைவன் உறங்குவதில்லை! இந்தப் பிரபஞ்சத்தின் அத்தனை பரிணாமங்களும், வெளிப்பாடுகளும் இறைவன் சித்தமே!
மூன்றாவதாக, நாம் எவரையும் வெறுக்கக் கூடாது! உலகம் என்பது எப்போதும் நன்மையும் தீமையும் சேர்ந்து கலந்துகட்டியாகத்தான் இருக்கும். இந்த உலகம் என்பது நன்னெறிபயில்வதற்கான மாபெரும் பயிற்சிக்கூடம். அதில் தொடர்ந்து செயலாற்றுவதன் மூலம் மனப்பயிற்சி மேற்கொண்டு, ஆன்மிகரீதியில் மேலும் மேலும் வலிமை பெற்றுக்கொண்டே போக வேண்டும்! நம் பணி எளியவர்க்கு இரங்குதல், தவறு இழைப்பவனிடம் கூட அன்பு செலுத்துதல். "நான் பாவியை வெறுப்பதில்லை; பாவத்தைத்தான் வெறுக்கிறேன்" என்பதெல்லாம் வீண்பேச்சு. பாவத்துக்கும் பாவிக்கும் உள்ள திட்டவட்டமான வேறுபாட்டைக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படியிருந்தால், அவர்களைக்காண எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் சுவாமிஜி. ஒரு பொருளுக்கும் அதன் தன்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்றால் நாம் நிறைமனிதர்கள் ஆயிருப்போம்.
நான்காவதாக, முத்தாய்ப்பாக, நாம் எந்த அளவுக்கு அமைதியுடன் இருக்கிறோமோ, எந்த அளவு நமது நரம்புகள் பதற்றமின்றி இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நாம் ஆழ்ந்த அன்பு செலுத்துவோம். நமது பணி சிறப்பாக அமையும்!
(ஆதாரம்: C.W. Volume 1: Chapter 5-Pages 79-80).
— பிறக்கும்
“