முட்களின் நடுவே
இருப்பதாய் உணர்கிறேன்
‘முகம்’ காட்டும் தன்மையை
உணராதவர்களுக்கு மத்தியில்
இருக்கும் நாட்களில்
பழகிய நிழலும்
பாலையாய்ச் சுடுகிறது!
முகத்தில்
தகிப்பு தாளாமல்
முகம் கறுத்த நேரங்கள்
என்னிடம் நிறைய உண்டு!
ஒப்பனை முகங்களை
பலரும்
வணங்கத் துவங்கிய பின்
முடிவெடுத்து விட்டேன்
இனி
யாரிடமும்
என் முகத்தைக்
காட்டுவதில்லையென!
பேருந்து
ஓட்டுநர் இருக்கையில்
அமரச் சொல்கிறார்கள்
அவர்கள்
இறங்க வேண்டிய
நிலையமோ
நிறுத்தமோ
வரும்வரை
தாங்கள் சுகமாய்ப் பயணிக்க.
வந்த பின்பு
ஓட்டுபவனைப் பயணியாக்கி
இறக்கிவிடுவதில்
முனைப்பாய் இருக்கிறார்கள்
ஊருக்கு
தன்னைத் தேர்ந்த ஓட்டுநராய்க்
காட்டிக்கொள்வதிலும்.
பாவமாய் இருக்கிறது
அவர்களை நம்பி
நாடு முழுவதும் வலம் வருகிற
அந்தப் பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்!
–தொட்டுத் தொடரும்…