Envy’s memory is nothing but a row of hooks to hang up grudges on.
– John Watson Foster
ஆர்த்திக்கு டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கி இருந்த நாள் நெருங்கிய போது பலரும் பதட்டம் அல்லது பரபரப்பில் இருந்தார்கள். சந்திரசேகர் சிவகாமியிடம் தயக்கத்துடன் வந்து கேட்டார். "அக்கா எல்லாம் சரியாயிடும் இல்லையா?" சிவகாமி தலையை மட்டும் அசைத்து விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
பவானி ஒருவித கலவரத்துடன் இருந்தாள். மூர்த்தி அதைக் கவனித்து விட்டுப் பாட்டியிடம் சொன்னான். "அத்தை ஆர்த்தியை விட அதிகமாய் பயப்படறாங்க பாட்டி".
"எல்லாம் என் தலையெழுத்து. இப்படிப்பட்டது என் வயித்துல பொறந்திருக்கு" என்று சலித்துக் கொண்ட பஞ்சவர்ணம் "அதை விடு. அந்த டாக்டர் என்ன கண்டுபிடிக்கறான்னு நாம தெரிஞ்சுக்க வழி பார்க்கச் சொன்னேனே என்னாச்சு" என்று கேட்டாள்.
"ஒருத்தனைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவன் இந்த மாதிரி விஷயத்துல எக்ஸ்பர்ட்டாம். ஆனா ரேட் எக்கச்சக்கமாய் கேட்பாங்கிறாங்க"
"பணத்தைப் பத்தி கவலைப்படாதே. பவானி கிட்ட வாங்கிடலாம். அவனைப் பார்த்து பேசி முடி. எனக்கு ஆர்த்தி மனசுல பதிஞ்ச அத்தனையும் தெரியணும்…. எனக்கே ஒரு பரபரப்பாய் தான் இருக்கு"
ஆகாஷ் ஆர்த்தியுடன் போவதில் விருப்பமில்லாமல் எரிச்சலுடன் இருந்தான். அந்த ஆரம்ப எரிச்சல் நாளுக்கு நாள் கூடி வந்திருந்தது. ஆர்த்திக்கு டாக்டரிடம் போவதில் பயமாக ஒரு புறம் இருந்தாலும் ஆகாஷ் கூடப் போவதில் ஒருவித இனிய எதிர்பார்ப்பு இருந்தது. அவன் பேசாவிட்டாலும் பரவாயில்லை, அவன் வெறுத்தாலும் பரவாயில்லை, அவன் உடன் இருப்பதே பெரும் மகிழ்ச்சியான விஷயம் என்று அவள் மனம் சொன்னது. இது பைத்தியக்காரத்தனம் என்று தெரிந்தாலும் இந்த பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மீள அவளுக்கு வழி தெரியவில்லை.
ஆர்த்தி கிளம்பிக் கொண்டிருந்த போது பார்வதியும் நீலகண்டனும் வந்தார்கள். நீலகண்டன் முகத்தில் கவலை ஆழமாகத் தெரிந்தது. பேத்தியிடம் சொன்னார். "பயப்படாதே. அன்னை உன் கூட இருப்பாங்க. நான் நேத்துல இருந்து உனக்காக வேண்டிகிட்டு இருக்கேன்."
பார்வதி தெளிவாக இருந்தாள். "பயப்பட என்ன இருக்கு. இந்தியாவுல நம்பர் ஒண்ணுன்னு அந்த டாக்டரை சொல்றாங்க. அவருக்கு இதெல்லாம் ஒரு பெரிய கேஸே இல்லைன்னு அமிர்தம் சொன்னாள்…."
"எல்லாம் சரி, அந்த ஆளை சிவகாமி தேர்ந்தெடுத்து இருக்கிறாள், அதுவும் ஆகாஷோட நண்பன் வேற. அது தான் கொஞ்சம் சந்தேகத்தைக் கிளப்புது"
"சந்தேகம்கிறதே ஒரு வியாதி. அது வந்துட்டா மனுஷன் தானும் நிம்மதியாய் இருக்க மாட்டான். மத்தவனையும் நிம்மதியா இருக்க விட மாட்டான்…."
நீலகண்டன் மனைவியை முறைத்தார். அந்த நேரத்தில் சந்திரசேகர் உள்ளே நுழைய அவர்கள் வாக்குவாதம் நின்றது. சந்திரசேகர் அவர்கள் இருவரும் அந்த அறையில் இருப்பதாக கவனித்தது போல் கூடக் காட்டிக் கொள்ளவில்லை. மகளிடம் சொன்னார். "ரெடியாயிட்டியா ஆர்த்தி. கீழே ஆகாஷும், அர்ஜுனும் காத்துகிட்டிருக்காங்க"
அர்ஜுனும் வருகிறான் என்பது ஏனோ ஆர்த்தியை சங்கடப்படுத்தியது. அவள் முகபாவனையில் இருந்து அதைக் கண்டுபிடித்த சந்திரசேகர் சொன்னார். "அர்ஜுன் சென்னைக்குப் போறான். கோயமுத்தூர்ல ஏரோடிராமில் இறங்கிக்குவான். அவனுக்கு முகத்தை சர்ஜரி செய்ய, அக்கா ஒரு பெரிய சர்ஜன் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கா. முதல் ப்ரிலிமினரி செக்கப்புக்கு அவன் போறான். அவனை ஏரோடிராமில் விட்டுட்டு நீங்க டாக்டர் கிட்ட போலாம். திரும்பி வர்றப்ப நீங்க ரெண்டு பேரும் தான் இருப்பீங்க"
அவர் சொன்ன போது புன்னகையை அடக்கிக் கொண்டது போல ஆர்த்திக்குத் தோன்றியது. ஆர்த்தி பேச்சை அர்ஜுன் பக்கமே மாற்றப் பார்த்தாள். "சர்ஜரிக்கு நிறைய செலவாகும் இல்லையாப்பா?"
"அக்கா எதையாவது முடிவு பண்ணிட்டா செலவு பத்தி பார்க்க மாட்டா. சரி கிளம்பு"
கீழே சிவகாமி நின்று கொண்டு இருந்தாள். மருமகள் இப்போதெல்லாம் அழகான விலை உயர்ந்த ஆடைகளில் மிக அழகாகவும் நளினமாகவும் தோன்றுவதைக் கவனிக்கையில் அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஆர்த்தியைக் கவனித்த ஆகாஷுக்கும் அப்படியே தோன்ற அவன் முகம் கடுகடுத்தது.
மகனிடம் சிவகாமி கேட்டாள். "என்னாச்சு?"
தன் தாய் தன் மனதில் ஓடும் எண்ணங்களைப் படித்து கிண்டல் செய்வதாக அவனுக்குத் தோன்றியது. "இது வரைக்கும் எதுவும் ஆகலை" என்று எரிச்சலுடன் பதில் சொல்லி விட்டு போர்டிகோவில் நின்று கொண்டு இருந்த காரின் முன்புறம் ஏறி அர்ஜுன் அருகே அமர்ந்தான்.
ஆர்த்தி அவன் முன்னிருக்கையில் அமர்ந்ததைக் கண்டு சற்று வாட்டமடைந்தாள். அமிர்தம் பூஜையறையில் இருந்து திருநீறு எடுத்து வந்து மருமகள் நெற்றியில் இட்டாள். "எல்லாம் சரியாகும் பார்"
மூர்த்தி அவளருகே நட்புரிமையுடன் வந்து காதில் சொன்னான். "டேக் கேர்"
சிவகாமி மருமகளைப் பார்த்து தலையசைத்தாளே தவிர எதுவும் சொல்லவில்லை.
ஆர்த்தி காரின் பின்னிருக்கையில் அமர அர்ஜுன் காரைக் கிளப்பினான். அவளிடம் எதுவும் பேசக்கூடாது என்று நினைத்திருந்த ஆகாஷுக்கு மூர்த்தி அவளிடம் அத்தனை நெருங்கி வந்து காதில் பேசியது பிடிக்கவில்லை. பொறுக்க முடியாமல் ஆர்த்தியிடம் திரும்பி சொன்னான். "அந்த மூர்த்தி கேரக்டர் அவ்வளவா சரியில்லை. அவன் கிட்ட ஜாக்கிரதையாய் இரு"
ஆர்த்திக்கு அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. மூர்த்தி இது வரை பழகிய விதம் எல்லாம் விகல்பமாக அவளுக்குப் படவில்லை. இவ்வளவு பவ்யமாகப் பழகும் நபர் ஆகாஷ் சொன்னபடி இருப்பானோ? அவனும் ஆகாஷின் நடத்தையைத் தப்பாகச் சொன்னானே….
ஆர்த்தியின் முகத்தில் தெரிந்த அவநம்பிக்கை ஆகாஷை மனம் கொதிக்க வைத்தது. ‘என் தாயைப் பற்றி யாரோ தவறாக சொன்னார்கள் என்ற போது சுலபமாக நம்பியவள் மூர்த்தியைப் பற்றி சொல்கிற போது மட்டும் நம்ப மறுக்கிறாளே. இது ஒரு அப்பாவிப் பெண்ணின் இயல்பாகத் தெரியவில்லையே’
முகம் கருங்கல்லாக இறுக, திரும்பியவன் பின் அவள் பக்கம் மறுபடி திரும்பவில்லை. அவன் கோபத்திற்கு ஆர்த்திக்குக் காரணம் விளங்கவில்லை. ‘நான் எதுவும் சொல்லவில்லையே. பின் ஏன் இவர் இப்படி கோபித்துக் கொள்கிறார்’.
காரை ஓட்டிக் கொண்டு சென்ற அர்ஜுன் இதைக் கவனித்துக் கொண்டு இருந்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. மூவரும் மௌனமாக அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருக்க காரில் லேசாக வயலின் இசை கேட்டுக் கொண்டு இருந்தது. கார் விமானநிலையத்தை அடைந்த பிறகு அர்ஜுன் இறங்கிக் கொண்டான். அவனிடமும் ஆகாஷ் பேசவில்லை. அவனைப் பார்த்து தலையை மட்டும் அசைத்து விட்டுக் காரைக் கிளப்பினான்.
கார் டாக்டர் ப்ரசன்னாவின் கிளினிக்கை அடைந்தது. ஆர்த்தி கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டாள். அவனுடைய அலட்சியம் அவள் இதயத்தைக் கிழித்தது.
காரில் இருந்து இறங்கும் போது அருகே ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்ததைக் கவனித்தாள். அப்போதைய அத்தனை சோகமும் திடீர் என்று மறந்து போனது. அந்தக் காரில் இருந்து தன்னை யாரோ பார்த்துக் கொண்டு இருப்பது போல் ஒரு உணர்வு அவளுள் எழ ஆரம்பித்தது. காரில் கறுப்புக் கண்ணாடி முழுவதும் ஏற்றப்பட்டு இருந்ததால் உள்ளே யாராவது இருக்கிறார்களா இல்லையா என்பதை அவளால் உறுதி செய்து கொள்ள முடியவில்லை.
கண்காணிக்கப்படுவது உண்மை தான் என்றால் அந்த நபருக்கு அவள் இங்கு இந்த நேரத்தில் வருவது முன்பே தெரிந்திருக்க வேண்டும். அவளுக்காகக் காத்திருந்து அவளைக் கண்காணிக்கும் அந்த நபர் யார்? ஏன் கண்காணிக்கிறார்கள்? அவள் அங்கு அப்போது வருவது எப்படி அந்த நபருக்குத் தெரிந்தது?
கேள்விகள் பிரம்மாண்டமாக அவள் மனதில் எழுந்து நின்றன.
(தொடரும்)“