‘கெட் அவுட்..’
குரல் இங்கிதமின்றி பளீரென்று அறைந்தது. குரலுக்குரிய நபரின் தோற்றமே எந்த பாவங்களுக்கும் அஞ்சாதவர் என்று புலப்படுத்தியது.
‘என்ன… சொன்னே."
அப்பாவின் குரல் நடுங்கியது. வாழ்நாளில் இந்த மாதிரி அவமரியாதையை அவர் சந்தித்ததே இல்லை.
‘என்னைப்… என்னைப் பார்த்தா…’
‘பீளீஸ்… வாப்பா… போகலாம்."
காயத்ரிக்கு அவமானாய் இருந்தது. சுற்றி அத்தனை பேரும் வேடிக்கை பார்க்கிற மாதிரி . ஏன் இந்த அவலம். போயிடலாம்.
‘நீ இரும்மா. என்ன பேசறான் பாரேன்.’
‘வேணாம்பா… … போயிரலாம்’
நீ என்னம்மா நியாயம்… தர்மம்னு ஒன்னு இருக்கோல்லியா…’
‘அப்பா…’
சுந்ரேசன் முன்னேறி மறுபடி எதோ பேச முயற்சிப்பதற்குள் கதவு பளீரென மூடப்பட்டது.
மிருக உணர்வில் மனிதன் அழைக்க, உரிமையாளர் குரலுக்குக் கட்டுப்பட்டு ‘லொள் லொள்’ என்று விசுவாசத்தைப் புலப்படுத்தி நாலுகால் ஜீவன் ஓடி வந்தது.
‘வந்துருப்பா…’
காயத்ரி சுந்தரேசனைப் பற்றியிழுக்காத குறையாய் வெளியே தள்ளிக் கொண்டு வந்தாள்.
மூடப்பட்ட காம்பவுண்டு கதவின் மேல் கால்களை வைத்து எம்பி, அடிவயிற்றிலிருந்து குறைத்தது .
‘என்னை என்னன்னு நினைச்சுட்டான்… நீ அழிஞ்சு போவே. என் வயிற்றெரிச்சல் வீண் போகாது. நீ நன்னா இருக்க மாட்ட’
சுந்தரேசன் இயலாமை சாபமாய் வெடிக்க காயத்ரி இன்னும் கூசினாள்.
‘அப்பா… பேசாம இரேன்’
‘என்னம்மா நீயி.. பதில் சொல்ல வேணாமா… நியாயம்னு ஒண்ணு…’
‘நியாயம்…’ காயத்ரி பற்களைக் கடித்தாள். எங்கே இருக்கிறது அது. அவதிப்படுபவர் கூக்குரல் இடுவதும், கொடுமைப் படுத்துபவர்கள் எக்காளம் இடுவதும் அதன் செவிகளில் விழுகிறதோ என்னவோ, தன் பாட்டில் அது எப்போதும் நிச்சிந்தையாய் இருக்கிறது.
‘என்ன ஸார் கலாட்டா இங்கே’
வம்புக்கு ஆசைப்பட்டு பக்கத்து காம்பவுண்டில் இருந்து குரல் வந்தது.
‘ஸார்… நீங்களே நியாயத்தைச் சொல்லுங்கோ. கிளி மாதிரி இருக்கா… பாருங்கோ. நீங்களே பாருங்கோ. இவ்வளவு அழகான குழந்தையை… வேணாம்னு சொன்னா… தள்ளிவச்சா…
‘
அ.ப்பா..’ காயத்ரிக்கு ரோஷம் பீறிட்டது.
இது என்ன புலம்பல். சுய கெளரவம் பாதிக்கப் படும் விதமாய் கடைத்தெருவில் நியாயம்… கூவி விசாரிக்க… நான் என்ன உணர்வற்ற ஜடமா…
‘ஆட்டோ… பிளீஸ்’
வந்து நின்ற ஆட்டோவில் அப்பாவை வலுக்கட்டாயமாய் ஏற்றினாள். தானும் ஏறிக்கொண்டாள்.
‘அசோக் நகர் போப்பா…’
‘இரும்மா.. நாலுபேர்ட்ட சொல்லி…’
‘வேணாம்பா… போதும். இதுவரை சொன்னது போதும். இனிமேலும் என்னை அவமானப் படுத்த வேணாம்…’
‘என்ன பிரச்னைங்க’ என்றான் ஆட்டோ டிரைவர்
‘உனக்கு ஒண்ணுமில்லேப்பா…’ என்றாள் அழுத்தமாய்.
சுந்தரேசன் மனசுக்குள் குமுறிக் கொண்டிருந்தார்.
x x x
காயத்ரி ஹோம் ஒர்க் நோட்டுகளைத் திருத்திக் கொண்டிருந்தாள். இந்த பீரியட் அவளுக்கு ஓய்வு. அடுத்த வகுப்பு அவள் எடுக்க வேண்டும்.
ஆறுமுகம் கதவருகே வந்து நின்றாள்.
‘என்ன ஆறுமுகம்…’
புன்னகையுடன் அவள் பேசும்விதம் எல்லோரையும் கவரும்.
‘… உங்களைத் தேடிக்கிட்டு யாரோ வந்திருக்காங்க’
‘எ.. ன்னையா…’
‘..வெளியே நிக்கிறார்ம்மா…’
யாராக இருக்கும்… யோசனையுடன் வெளியே வந்தவள். வாசலில் நின்றவனைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.
‘நீ…ங்களா’!
‘நானேதான்’ என்று புன் முறுவலித்தான் அருண்.
‘என்ன அதிசயம். இந்தப் பக்கம் வர மாட்டீங்கன்னு நினைச்சோம்…’‘அப்படியா…’ என்றான் சிரிப்புடன்.
‘எப்படி என்னோட அட்ரெஸ் கிடைத்தது…’
‘வசந்தியைப் பார்த்தேன். அவதான் சொன்னா. அசோக் நகர் போனா… உங்கப்பா மட்டும் இருந்தார். உங்கம்மா தவறிப்போன விவரம் தெரிஞ்சு ரொம்ப வருத்தபபட்டேன். எத்தனை நாள் அவங்க சமையல் சாப்பிட்டிருப்பேன்… இப்ப கூட ஸ்டேட்ஸ்ல என்னிக்காவது வத்தக் குழம்பு வச்சா… உங்கம்மா ஞாபகம்தான் வரும்…’ பெருமூச்செறிந்தான் அருண்.
‘அப்பா இந்த ஸ்கூல் அட்ரெஸ் கொடுத்தாராக்கும்’
என்றாள்..
‘ம். உன்னைப் பார்த்தே ஆகணும்னு தோணிச்சு. போனா தடவை வந்தப்ப எவ்வளவோ ட்ரை பண்ணியும் முடியலே… இந்த தடவை ஒரு மாசம் ஸ்டே. நிச்சயம் உன்னைப் பார்த்துடணும்னு…
‘ஈவ்னிங் வீட்டுக்கு வரீங்களா…’ என்றாள்.
‘நிச்சயம். அதைச் சொல்லத்தான் வந்தேன். இப்ப உனக்கு கிளாஸ் எடுக்கணும் இல்லே.’
‘ம்..’
‘ஹெள ஈஸ் லைஃ ப்?
‘சல்த்தா ஹை…’
‘அப்பாகிட்டே பேசிக்கிட்டிருந்தேன். சொன்னார். என்ன காயத்ரி… என் அட்ரெஸ் உன்கிட்ட இருக்கில்லே. எதையுமே எனக்குத் தெரியபடுத்தலே. அம்மா போனது… இப்ப… உன்னோட…’
காயத்ரி அவசரமாய்க் குறுக்கிட்டாள்.
‘ப்ளீஸ்… இப்ப வேணாமே… எனக்கு டயமாச்சு’
ஈவனிங் யூ காண்ட் எஸ்கேப்… புரிஞ்சுதா…’
சிரித்தபடி கையாட்டி விட்டுப் போனான்.
முன்பிருந்ததைவிட இன்னும்.. இன்னும் சற்று பூசி உடல். மினு மினுப்பாய் இருந்தது கல்லூரி நாட்களின் போது இருந்த அதே நெருக்கம் காட்டும் குரல்.
காயத்ரி அவசரமாய் உள்ளே போனாள். இன்னும் இரண்டு நிமிடங்களில் வகுப்பு மணி அடித்துவிடும்.
வெளியே வரும்போது சங்கர் காத்திருந்தான். அவனை காயத்ரி எதிர்பார்க்கவில்லை. பஸ்ஸுக்காக சரியான சில்லறையைத் துழாவியபடி நடந்தவளை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.
‘காயத்ரி…’
பழக்கமான குரல். பழக்கமற்ற அந்நியத் தன்மையில். திரும்பினாள்.
‘நா..தான்… உன்னோட பேசணும்.’
‘எ..ன்ன’
‘வாயேன். ரோட்டுல வேணாமே..’
கண்களில் மிரட்சி தெரிந்தது. இவளும் ஏதாவது இரைச்சலிட்டு தன் மானத்தை வாங்கிவிடுவாளோ என்பது போல.
தலையசைத்தாள். மூலையாய் இரு இருக்கைகளைத் தேடி அமர்ந்தனர்.
‘…நேத்து நீயும் உங்கப்பாவும் வந்தீங்கலாம்.’
என்றான் மெல்ல.
காயத்ரி அவனை நன்றாக உற்றுப் பார்த்தாள்.
பார்வையை நேராகச் சந்திக்கும் திடமின்றித் தலை குனிந்தான்.
‘…அப்பா ரொம்ப வருத்தப்பட்டார். இப்படியா இன்டீசண்டா பிஹேவ் பண்ணுவாரு…அதுவும் ஸ்கூல் டீச்சர் வேலை பார்த்தவர். அத்தனை மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிச்சவருன்னு ஃ பீல் பண்ணாரு” என்றான்.
காயத்ரிக்கு சுர்ரென்று கோபம் கிளம்பியது.
‘… இப்போ என்னை எதுக்காக இங்கே அழைச்சுகிட்டு வந்தீங்க…’ என்றாள் பளிச்சென்று.
‘தப்பு ரெண்டு பேர் மேலயும் இருக்கு’ என்றான் அவசரமாக.
அவள் திடீரென்று எழுந்து போய்விடப் போகிறாள் என்ற நடுக்கம் வந்தது அவனிடம்.
‘அப்பாவும் இன்னும் அமைதியா பேசி இருக்காலாம்.
உங்கப்பாவும் ரோட்டுல சீன கிரியேட் பண்ணியிருக்க வேண்டாம்…’
‘உனக்குத் தெரியுமா… எங்க மேல நாயை அவிழ்த்துவிட்டது…’ காயத்ரிக்கு உள்ளுர சினம் பொங்கியது. வேண்டாம். எதுவும் கேட்க வேண்டாம். இவன் என்ன புத்தனா… முற்றிலும் நேர்மையான மாஹாத்மாவா… தன் பக்க நியாயத்தை வலியுறுத்த வந்தவனிடம் ஏன் இறைஞ்ச வேண்டும்…
‘…உனக்கே புரியும். நமக்குள்ளே இனிமேயும் சேர்ந்த வாழ முடியாதுன்னு. கோர்ட் கேசுன்னு அலையாம… சுமூகமா நாமே பேசித் தீர்த்து… செட்டில் பண்ணிரலாம்… அதை விட்டு இப்படி வீடு தேடி வந்து கத்தி… என்ன புண்ணியம்… ‘என்றான்.
சர்வர் கொண்டு வந்து காப்பி சீந்தப்படவில்லை. ஆறிக்கொண்டிருந்தது.
‘அவ்வளவு தானே…’என்றாள் எழுந்து கொண்டு.
"ப்ளீஸ். நீயாச்சும் விவேகமா முடிவு பண்ணி…’ என்றான் படபடப்புடன்.
திரும்பிக் கூட பாராமல் நடந்தாள்.
அவனை முதலில் பார்த்தும் ஒரு வேளை மனசு மாறித்தான் வந்திருக்கானோ என்று நினைத்தது தவறாகிப் போனது. பரிச்சயமான அவன் தோற்றம் இவ்வளவு அன்னியப்பட்டுப் போகிற அளவு இடைவெளி வந்துவிட்டதே…
‘வாம்மா… ஏன் லேட்டு’
அப்பா வாசலிலேயே வரவேற்றார்.
அப்பாவால் ஒரு நிமிஷம் பொறுக்க முடியாது. படபடப்பு. வாசலில் வந்து நின்று விடுவார். பத்து நிமிஷம் தாமதம் என்றால் பஸ் ஸ்டாப் புக்கே வந்து விடுவார். ‘அருண் வந்திருக்கான். அவனும் அப்ப பிடிச்சு உனக்காக காத்திருக்கான்’
உள்ளே அருண் துளிக்கூட பொறுமை சிதறாமல் இயல்பாய் அமர்ந்திருந்தான்.
‘ஸாரி… அருண்… வழியிலே…’
‘நோ… நோ… ரிலாக்ஸ்… மெதுவா வா. நான் ராத்திரி இங்கேதான் சாப்பாடு…’
‘நான் வேணா.. போய்… எதாச்சும்’ அப்பா விடம், மறுபடி பதற்றம் வந்துவிட்டது.
‘ஒண்ணும் வேணாம். என்ன இருக்கோ. தட்ஸ் இன்ஃப்…’ என்று தடுத்தான்.
‘இல்லே… தொட்டுக்க… கறி கூட…’
‘நோ பிராப்ளம்… அப்பளம் வில் டூ…’
‘வந்து…’
காயத்ரி குறுக்கிட்டாள்.
நீ பேசாம இரேன்பா… நான் பார்த்துக்கறேன்…’
சமையலறைக்குள் போனாள் . அருணின் குரல் கேட்டது.
‘பிளாஸ்க்குல உனக்கு காபி இருக்கு’
‘அவனே எனக்கும் காபி கொடுத்து… உனக்கும் எடுத்து வச்சிட்டான்…’ என்றார் பின்னாலேயே வந்து.
வெகு நாட்களுக்குப் பின் அப்பாவின் முகத்தில் சந்தோஷம். மாப்பிள்ளை என்கிற ஆண் மிருகத்தை மட்டுமே சந்தித்த கண்களுக்குப் புதிய வெளிச்சம். அனுசரனையான இளைன்ஞர்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வில் பூரிப்பு.
அப்பா அடிக்கடி சொல்லுவார்.
‘எனக்கு என்னவோ… ரொம்ப நம்பிக்கை இருக்கும்மா… இந்த இளைஞர்கள்… எங்க காலம் மாதிரி… அப்படியே பெரியவங்க சொன்னதைக் கேக்கற மூட ரகமில்லே… தெளிவா ஆராய்ஞ்சு… விவாதிச்சு… நல்ல முடிவு தேடுற புத்திசாலி ரகம்… வருங்காலம் இவங்களால பிரகாசமா இருக்கும்னு எனக்கு தோணுது…’
அருண் பெருமையாய்க் காத்திருந்தான்.
அப்பா முன்பே அவனைப் பற்றி சொல்லிருக்க வேண்டும். அப்பாவின் இயல்புக்குப் பேசாமல் இருப்பது முடியாத விஷயம். வெளி நபரிடமே புலம்புகிறவர் அருணிடம் எப்படிச் சொல்லாமல் விடுவார்…
என்னென்னவோ பேசினான்.சரியான அரட்டைக் கச்சேரி. துளிக்கூட சுவாரசியம் குன்றாமல்… இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.
‘வரட்டுமா’ என்றான் போகவே மனசில்லாதவன் போல.
‘பஸ் ஸ்டாப் வரைக்கும் வரேன்’ என்றாள்..
"சேச்சே… அதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டி’
‘பரவாயில்லே… அப்பா… அருணோட போயிட்டு வரேன்…’
சுந்தரேசன் தலையசைத்தார். நடந்தார்கள். அருண் பேசாமல் வந்தான்.
‘அப்புறம் மறுபடி எப்ப வரீங்க…’ என்றாள் என்ன கேட்பதென்று புலப்படாமல்.
"வரேன்… பங்களூர் போகணும். ஒரு வாரம் அங்கே ஸ்டே… அப்புறம் வில்லேஜ்ல ஒரு சின்ன பிரச்சனை… நிலம் விஷயமா. விற்க வேண்டியதுதான். பேசியாச்சு… ரெஜிஸ்தர் பண்ணனும்…’
சம்பந்தம் இல்லாத பேச்சு போலத் தோன்றியது. ஏன் ஏதேதோ பேசுகிறான்…
‘ஆகணும். அப்பா கூட பேசிக்கிட்டிருந்தேன். ரொம்ப ஷாக் ஆயிருச்சு காயத்ரி…’
‘ப்ச்…’
‘இல்லே காயத்ரி… உனக்குப் போயி… இந்த மாதிரி ஹஸ்பெண்ட்… அவன் என்னதான் சொல்றான்… ஸாரி… சொல்றார்…’
‘ப்ச்’ என்று அலுத்துக் கொண்டாள் மறுபடி.
‘என்ன காயத்ரி’
‘அவ்வளவுதான். ஃ புல்ஸ்டாப். முற்றுப்புள்ளி.தட்ஸ் த எண்ட் ஆஃப் காயத்ரிஸ் மேரீட் லைஃப்’
‘அவனைச் சும்மா விடக் கூடாது’
‘ம். அப்பாவும் இப்படித்தான் ஆத்திரப் படறார்.
ஃபோர்ஸ் பண்ணி இனிமே சேர்ந்து வாழ முடியாது. ஜீவனாம்சங்கிற பேர்ல அவன் தர பிச்சை எனக்கு வேணாம். எனக்குப் போட்ட ஜ்வேல்ஸ், மற்ற சாமான் திரும்பி வந்தாச்சு. அப்புறம் என்ன…’
‘என்ன காயத்ரி… உன்னோட எதிர்காலம்…’
‘இப்படியே… குழந்தைகளோட… ஒரு டீச்சரா…’
அருண் நிதானித்தான் . ஸ்டாப் சமீபித்துவிட்டது.
இன்னும் பத்தடி நடந்தால் ஸ்டாப். நின்றான். அவளை ஏறிட்டு பார்த்தான்.
‘…காயத்ரி… அந்த நாட்கள்ல… உன் மேல… ப்ச்.. எப்படி சொல்றது… டு பீ ஃ பிராங்க்… டோண்ட் மிஸ்டேக்… ஐயாம்… ஜஸ்ட்…’ சிரித்தான்.
சொல்லேன்… என்ன தயக்கம் என்பது போலப் பார்த்தாள்.
…யெஸ்.. மனசுவிட்டே சொல்றேனே… நீ என்ன அடிக்கவா போற
… அப்ப… உன் மேல எனக்கு பயங்கர கிரேஸ்… என்னவோ எனக்காகவே நீன்னு ஒரு ஃ பீலிங். நான் ஸ்டேட்ஸ் போனதும் நீ மேரேஜ் ஆனதும்.இப்ப…ஃ பெயிலியூர் ஆனதும்… கற்பனை கூட பண்ண முடியாத அளவு… ஃ பாஸ்டா காலம் ஓடுது…’
காயத்ரி மௌனமாயிருப்பது போல வெளியே தோன்றினாலும் உள்ளூர திமிறிக் கொண்டிருந்தாள்.
‘…யெஸ்… ஐ அட்மிட்… ஸ்டேட்ஸ் எல்லாம் போனாலும் பேஸிக்கா… நான் ஒரு இந்தியன். நம் பண்பாடு… கலாச்சாரம்… …இதுல… ரொம்ப நம்பிக்கை உன்னை மாதிரியே. நான் அதனாலேயே எதுவும் பேசலே. உன்னப் புண்படுத்த விரும்பலே. நம்ம நட்பைக் கொச்சைப்படுத்தக் கூடாது. என்னதான் கணவன் உதறினாலும் ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழறது தான் நம்ம பண்பாடு… இல்லியா… காயத்ரி…’
என்ன சொல்கிறான் இவன்… திடுக்கிட்டு நிமிர்ந்தாள். தூரத்தில் பஸ் வெளிச்சம் தெரிந்தது.
‘என்னோட இந்த முடிவு சரிதானா காயத்ரி.. நிமிர்ந்து பார்த்தாள். அருணாலும் அவள் பார்வையைச் சந்திக்க முடியவில்லை.
புரிந்தது. இவனும் எந்த விதத்திலும் சங்கருக்கு சளைத்தவன் அல்ல. கோழைத்தனத்திலும் சுயநலத்திலும் இவனும் சராசரி ஆண்மகன் தான். அப்பா இவனிடமும் கேட்டிருக்க வேண்டும். காயத்ரிக்கு நல்ல எதிர்காலம் தர முடியுமா என்று. அப்பா மறுபடியும் ஏமாந்து விட்டார். இனி இவன் இந்தப் பக்கமே திரும்பப் போவதில்லை.
‘காயத்ரி…’
காயத்ரி முதலில் மௌனமாய் விடை கொடுக்க நினைத்தாள். ஆனால் அவளையும் மீறி வெடித்தது.
‘சாரி அருண்… நீ என்னை ஏத்துக்கணும்னு வறபுறுத்த விரும்பலே. ஆனா உன் மனசுலயும் விசாலம் இல்லேன்னு புரியுது. அதுக்கு ஏன் போலித்தனமா நம்ம கலாச்சாராம், பண்பாடுன்னு ஒரு போர்வைல மறைஞ்சுக்கிட்டு… உன்னையும் ஏமாத்திக்கற. ஒரு நல்ல ஆண்மகனா இருக்கிறது பிறவியினால மட்டுமில்லே…பழக்க வழக்கங்களிலுந்தான்னு இப்ப எனக்குப் புரியுது… என்னோட மாணவிகளுக்குப் போதிக்க எனக்குப் புது விஷயம் கிடைச்சுது. அதுக்காக உனக்கு நன்றி. குட் பை…’ என்று கூப்பினாள்
.