அரவிந்தனைப் பார்த்த சாந்தி வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தாள். என்றாலும் உடனே சமாளித்துக் கொண்டாள்.
சாந்தி மிகவும் இயல்பாக "எப்படி இருக்கீங்க?" என்று கேட்க, அரவிந்தனுக்கு தான் வந்த வேலை சுலபமாக முடியும் அறிகுறி தெரிந்தது.
"நல்லாயிருக்கேன் சாந்தி! நீ எப்படி இருக்கே?"
"அதான் பார்க்கறீங்களே, அப்படியே தான் இருக்கேன்" என்றவள் ஆயாவை அழைத்தாள்.
"ஆயா, இராத்திரி சமையல் ஸ்பெஷலா இருக்கணும். ரஞ்சனியையும் கூட்டிட்டுப் போய் வேண்டிய காய்கறி வாங்கிட்டு வாங்க" என்று பணத்தைக் கொடுத்தாள்.
கடைக்குப் போக ரஞ்சனி உற்சாகமாய்க் கிளம்பினாள்.
"அப்பா, நீங்களும் வர்றீங்களா?"
"இல்லைம்மா. இப்ப நீ போயிட்டு வா. இன்னொரு நாள் நான் வரேன்."
அவர்கள் இறங்கிச் செல்வதற்காகவே காத்திருந்த அரவிந்தன் பேசத் தொடங்கினான்.
"சாந்தி! நாம தனியாப் பேசறதுக்கு அழகான ஒரு வாய்ப்பை உண்டாக்கிட்டே. யூ ஆர் வெரி ஸ்மார்ட்! இப்ப நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும். பிறகு நீ உன் முடிவைச் சொல்லலாம். ப்ளீஸ், அந்த சோபாவில் உட்கார்."
சாந்தி உண்மையிலேயே திகைத்துப் போனாள். தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கத் துடித்துக் கொண்டிருக்க, இவர் இப்போது சொல்ல என்ன இருக்கிறது? ஒருவேளை மறுமணம் செய்து கொண்டு விட்டாரா?
குழப்பத்தில் உள்ளம் நொந்து போக, மௌனமாய் அமர்ந்தாள்.
அரவிந்தன் ஜன்னலருகில் சென்று நின்று கொண்டான். தோட்டத்தில் காற்றுக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கும் செடிகளைப் பார்த்தபடியே பேசத் தொடங்கினான்.
"சாந்தி! நமக்கு நடுவிலே சில வேண்டாத சம்பவங்கள் நடந்து போயிடுச்சு. அதுக்குக் காரணமா இருந்ததை நினைச்சு நான் ரொம்ப வேதனைப்படறேன்.
பெண்கள் எல்லா நிலையிலும், எல்லா வேலையிலும் இருக்காங்கன்னு நான் நேரடியாப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். ஆண்களுக்குச் சமமான திறமையும், தகுதியும் அவங்களுக்கும் இருக்குன்னு அனுபவபூர்வமா புரிஞ்சுக்கிட்டேன். என் எண்ணம் மாறிடுச்சு. நாம மறுபடியும் சேர்ந்து வாழணும்னு ஆசைப்படறேன், சாந்தி! உனக்கும் இதில விருப்பம் இருந்தாத்தான்!"
சாந்தியின் விசும்பல் ஒலி அரவிந்தனின் பேச்சை நிறுத்தியது. அரவிந்தன் திரும்பிப் பார்க்க, சாந்தியின் கண்களிலிருந்து அருவியாக நீர் பெருகிக் கொண்டிருந்தது.
"ஐயோ சாந்தி! ஏன் இப்படி அழறே? உனக்கு விருப்பம் இல்லைன்னா, நான் இதைப் பத்தி பேசவே மாட்டேன், என்னை மன்னிச்சுடு, ப்ளீஸ்…"
அரவிந்தன் பதறிப் போனான்.
"என்னங்க, இப்படிப் பேசறீங்க? இது என் பாவத்துக்குப் பிராயச்சித்தமா வர்ற கண்ணீர். தொலைஞ்சு போன வாழ்க்கை மறுபடி வீடு தேடி வந்தது நான் செய்த புண்ணியம். தயவு செஞ்சு நீங்க தான் என்னை மன்னிக்கணும்…பளீஸ்"
அரவிந்தனுக்கு சாந்தியின் மனமாற்றம் மகிழ்ச்சி அளித்தது.
"பரவாயில்லை, விடு சாந்தி! ஏதோ நேரம் சரியில்லை."
"இல்லைங்க..எனக்கு மூளை தான் அப்ப சரியில்லாம போயிடுச்சு. எல்லாம் அந்த கல்பனா கொடுத்த ஐடியாவால வந்த வினைங்க"
"ஓஹோ!! ஏதுடா, நம்ம சாந்தி இப்படியெல்லாம் செய்ய மாட்டாளேன்னு அப்பவே சந்தேகமா இருந்தது. எல்லாம் கல்பனா உபயமா?"
"ஆமாம். அதை இப்ப சொல்லுங்க..உங்களுக்கு பிரமோஷன் வந்ததே, அதை ஏன் என்கிட்டே சொல்லாம மறைச்சீங்க?"
"ரொம்ப ஆசையாய் பிரமோஷனோட வீட்டுக்கு வந்தா, நீ உங்ககூட வரமாட்டேன்னு பிடிவாதம் செய்தே. அந்தக் கோபத்துல நான் அதைச் சொல்லலே. அப்புறம் லீவ் போட்டு வந்தபோது, உனகிட்டே எடுத்துச் சொல்லி, உன்னையும் சென்னைக்கு கூட்டிட்டுப் போகலாம்னு நினைச்சு வந்தேன். நீ என்னன்னா, நான் ஊரிலேர்ந்து வந்ததும், விவாகரத்து பத்திரத்தை எடுத்து நீட்டினே. சரி, உனக்கு என்கூட வாழப் பிடிக்கலைன்னு நானே முடிவு செய்துட்டேன்."
"நீங்க தானே முதல்ல டைவர்ஸ் செய்துடலாம்னு சொன்னீங்க?"
"அது ஏதோ கோவத்துல சொல்லிட்டேன். அதுக்காக அப்படியே செய்துடணுமா, மக்கு?"
அரவிந்தன் செல்லமாய் சாந்தியின் தலையில் தட்டினான்.
"அதுவும் கல்பனாவோட முடிவுதாங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்காததால தான் டைவர்ஸ் கேட்டீங்க. அதனால நீயே டைவர்ஸ் வாங்கிடுன்னு அவதான் சொன்னா."
"நீ பேசுவேன்னு நானும், நான் பேசுவேன்னு நீயும் காத்துக் காத்து கடைசியிலே இப்படி ஆயிடுச்சு பாரு சாந்தி!"
"ஆமாங்க; எப்படியோ இப்பவாவது உண்மை புரிஞ்சுதே! ஆமாம், எப்படி எங்களைக் கண்டுபிடிச்சு வந்தீங்க?"
"உங்க பழைய ஆஃபீஸ்லே விசாரிச்சு உன் அட்ரஸை வாங்கிக்கிட்டேன். ரஞ்சனி படிக்கிற ஸ்கூலைத் தெரிஞ்சுக்கிட்டேன். நேரா உன்னை வந்து பார்க்கத் தயக்கமா இருந்தது. அதுதான் முதல்லே ரஞ்சனியைப் பார்க்கப்போனேன். எப்படியோ எல்லாம் நல்லவிதமா முடிஞ்சாச்சு, சாந்தி! நீ வேலைக்குப் போறதுல் இப்ப எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லே."
"ஆனா எனக்கு இப்ப வேலைக்கு போறதுல இஷ்டம் இல்லைங்க"
"ஏன் சாந்தி?"
அரவிந்தன் புரியாமல் விழிக்க, சாந்தியே தொடர்ந்து பேசினாள்.
"மத்தவங்க கிட்டே கொள்ளையடிக்கிறது மட்டும் திருட்டு இல்லை. நம்ம தேவைக்கு மேல அதிகமா சேர்த்து வைக்கறதும் திருட்டுதான்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். உங்களைப் பிரிஞ்சிருந்த காலத்துல உங்களை நினைச்சு எவ்வுளவு நாள் அழுதிருக்கேன், தெரியுமா? நீங்க சொன்னதை எல்லாம் யோசிச்சுப் பார்த்து அதில் இருந்த உண்மையைப் புரிஞ்சுக்கிட்டேன். நம்ம குடும்பத்துக்கு உங்க சம்பளமே போதும். நான் என் வேலையை ராஜினாமா பண்ணிடறேன். தகுதியான, வேலை அவசியமா தேவைப்படற ஒருத்தருக்கு அது பயன்படறதுதான் முறை. நாளைக்கு என் ராஜினாமா கடிதத்தை நீங்களே என் ஆஃபிஸ்லே கொண்டுபோய் கொடுத்துடுங்க."
அரவிந்தனுக்கு விண்ணில் பறக்கும் உணர்வு ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் இணைந்து வாழத்தொடங்கினார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயாராய் இருந்ததால், பிரச்னைகள் அவர்களை விட்டு விலகிப் போயின. இனிய குடும்பத்தின் குட்டி தேவதையாய் ரஞ்சனி மகிழ்ந்தாள். அன்பும், இன்பமும் பொங்க, அரவிந்தன் – சாந்தியின் இல்லறம் செழித்தது.
மூன்று மாதங்கள் ஓடி விட்டன.
சூர்யாவின் வீடு.
சூர்யாவும் மலரும் அமர்ந்து சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்து கொண்டிருந்தனர்.
அழைப்புமணி ஒலிக்க, கதவைத் திறந்த சூர்யாவுக்கு ஆச்சரியம்!!
"அடடே சாந்தி! நீங்களா? என்ன திடீர் விஸிட்? வாங்க…உள்ளே வாங்க..!"
"திடீர்னு ஒருநாள் வேலையை விட்டுட்டு வீட்டோட செட்டிலாய்ட்டேன். ஆஃபீஸ்லே என்மேலே அக்கறை காட்டினது நீ மட்டும்தான் சூர்யா! அதான் உன்னை நேர்ல பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். பை தி பை, மீட் மை ஹஸ்பெண்ட், அரவிந்தன்! ரஞ்சனியை உனக்குத் தெரியும்தானே, ரஞ்சு, ஆன்ட்டிக்கு ஹலோ சொல்லு.."
சூர்யா ‘ஹலோ ஆன்ட்டி’ என்ற ரஞ்சனிக்கு பதிலளிக்க, அரவிந்தன் நேராய் சூர்யாவைப் பார்த்து வணக்கம் சொன்னான்.
சூர்யா அழகாய்ச் சமாளித்துக் கொண்டாள். அரவிந்தனுக்கு பதில் வணக்கம் சொல்லி, மெதுவாய் சில விஷயங்கள் பேசினாள். மலரும் தானும் அதுவரை அரவிந்தனைப் பார்த்ததே இல்லை எனும்படி நடந்து கொண்டாள்.
ரஞ்சனி போரடிப்பதாய் வெளியே சுற்றிப் பார்க்கச் சென்றாள்.
"சூர்யா! உங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அப்ப என்னால நம்ப முடியலை. இப்ப நேர்ல பார்த்த பிறகு தான் எல்லாம் புரியுது."
"என்ன சொல்றீங்க சாந்தி?"
"நீங்க நடிச்சது போதும்னு சொல்றேன்."
சூர்யாவும் மலரும் திடுக்கிட்டார்கள்.
"நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும். அவரைத் தெரியாத மாதிரி நீங்க நடிக்க வேண்டிய அவசியமில்லை."
சாந்தி உறுதியான குரலில் சொன்னாள்.
(அடுத்த இதழில் முடியும்….)
“