பசித்த பூமி
மலைமுகடுகளில்
தன் பயணத்தைத் தொடர்கிறது பாம்பு.
வெளிச்சத்தை ஊதி அணைத்து
இருளை உடுத்தி நுழைகையில்
நெளிவதையுணரும்
பசித்த பூமி.
நகர்தலும், முன்னேறுதலும்
பூமிக்குத் தருகின்றன
புதுப்புது அனுபவங்களை.
பயணத்தின் விளிம்பில்
பூமியில் நஞ்சு கக்கி
களைப்போடு கிடந்தது பாம்பு
பூமியின் வலியை உணராமலும்
பயணத்தின் சுவடு தெரியாமலும்.
மனைவி
வெப்பம் நிறைந்த பகலை
ஒருவழியாய்
அனுப்பிவிட்டு
இரவு வீடு திரும்பியபோது
எதிர்கொண்டு வரவேற்றாள்
மனைவி
துளிப்பகலை
முகத்தில் வைத்துக்கொண்டு.
பரமபதம்
வாழ்க்கைப் பரமபதத்தில்
ஏணியில்
ஏழை ஏறும்போது மட்டும்
சொல்லி வைத்தது போல
எங்கிருந்தோ வந்து விடுகிறது
அந்தப் பாம்பு.
–தொட்டுத் தொடரும்…