துஷ்டி

அம்மா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள்.

"சீக்கிரம் ஊருக்குப் போயிரணும். என்னக் கொண்டு போயி ஊர்ல விட்டிருங்க!"

நாளுக்கு நாள், அவள் அதுகுறித்துப் புலம்புபவளாக ஆனாள். சுயநினைவில்தான் புலம்புகிறாளா அல்லது தன்னையறியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாளா என்று தெரியவில்லை. அவள் உதடுகள் சிரிப்பை மறந்து மாதங்கள் ஆகின்றன. எப்போதும் வெளிச்சமிடும் சிறு விளக்கைப் போன்ற சிரிப்பொன்று முன்பெல்லாம் அவள் முகத்தில் ஒளிர்ந்தபடி இருக்கும். அவளைப் பார்க்கும் யாரையும் அந்தச் சிரிப்பு ஒரு வாசனையைப் போலப் பற்றிக் கொள்ளும். அதற்காக மெனக்கெட்டு வந்து அவளைப் பார்த்துவிட்டுச் செல்பவர்களும் உண்டு. அப்படியிருந்த அம்மா, இன்று வெறுப்பும் கடுகடுப்பும் நிறைந்தவளாகிவிட்டாள். அவளை யாரும் தேற்றவோ, தைரியப்படுத்தவோ இயலாத நிலைக்குப் போய்விட்டாள். மௌனம்… பெரும்பாலும் மௌனம். அவள் மழையில் நனைந்து கரைந்து கொண்டிருக்கிற ஒரு கோலத்தைப் போலச் சிதைந்து கொண்டிருக்கிறாள்.

நோய் குறித்து அம்மாவுக்குத் தெரிந்த நாளிலிருந்துதான் அவள் இப்படி ஆகிவிட்டாள். மரணம் அவளுக்குள் ஒரு சிறு செடியைப் போல வளர்ந்து, இன்று கிளை பரப்பி, அவளை முழுமையாகத் தனது வேர்களாலும் தழைகளாலும் பிணைத்து இறுக்கப் பார்க்கிறது. அதை டாக்டர் சொன்ன நாளிலிருந்து எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் இயல்பை இழந்துவிட்டது. ஒரு திருடனைப் போல அந்தச் செய்தி எங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த உற்சாகத்தைக் களவாடிக் கொண்டு போய்விட்டது. பிறந்த குழந்தைகளைப் போல, பேசும் வார்த்தைகள் அற்றவர்களாகி யார் எது பேச வந்தாலும் அழுகையே பீறிட்டு வந்தது. ஆனால், அம்மா அழவில்லை. மாறாக அவள் மௌனமாகி விட்டாள். நேற்று வரைக்கும் அவள் செய்துகொண்டிருந்த காரியங்களை அப்படியே நிறுத்திக் கொண்டாள். நிறையச் சாப்பிடத் தட்டில் எடுத்துக் கொள்வாள். ஆனால், அதில் கால் பங்கைக்கூடத் தின்னாமல் வீசியெறிவாள். குளிக்க, உடைமாற்ற என எல்லாவற்றையும் செய்ய அவள் அடம்பிடித்தாள். எப்போதும் மௌனமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது எங்களைப் பார்த்ததும் அவள் சொல்வது இதுதான்.

"சீக்கிரம் ஊருக்குப் போயிரணும். என்னக் கொண்டுபோயி ஊரில விட்டிருங்க. சாவுறதுல என்னயிருக்கு? ஆனா, இந்த ஊருல சாவக்கூடாது!".

அம்மா இதை ஏன் சொல்கிறாள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் இல்லை.

அம்மாவின் கைபிடித்துக் கொண்டு நகரத்திற்கு வந்தபோது எனக்கு வயது பதினைந்து. உடன் தங்கை வேறு. அவள் என்னைவிட மூன்று வயது சின்னவள். அப்பா ஈ.பி-யில் ஃபோர்மேன். வேலைபார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு நாள் நிதானம் தவறிக் கீழே விழுந்தவர் பின்பு எழுந்திருக்கவேயில்லை. அவர் போன கவலையிலேயே ஆயாவும் அடுத்த மாதமே போய்ச் சேர்ந்தாள். அம்மா போராடி அப்பாவின் வேலையைப் பெற்றுக் கொண்டாள். கிளர்க் வேலைதான். சென்னைக்கு மாற்றலாகி வந்தாகிவிட்டது. பதினைந்து வருடம். அம்மாவின் உழைப்பெல்லாம் எங்களை உயர்த்தும் எண்ணத்தோடே. அதைச் சரியாகச் செய்தும் முடித்துவிட்டாள். இப்பொழுது நான் அரசுப்பணியில்தான் இருக்கிறேன். தங்கையைக் கட்டிக் கொடுத்து அவள் பாம்பேயில் இருக்கிறாள். அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாளே ஒழிய உழைப்பை நிறுத்திவிடாமல்தான் இருந்தாள் சமீபகாலம் வரை. இப்பொழுதெல்லாம் அவள் ஊருக்குப் போகும் புலம்பலைத்தான் பெரிதாகச் செய்து கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு மரண பயம் வந்துவிட்டதென்று நான் நினைக்கவில்லை. மரணம் அவளை நிச்சயம் அதைரியப்படுத்தி விடமுடியாது. சாவு, வாழ்வில் ஒரு நிகழ்வு என்று வாழ்ந்து உணர்ந்தவள் அவள். ஆனால், சாவைச் சந்திக்க இந்நகரம் சரியான களம் இல்லை என நினைக்கிறாள். அது சரிதான் எனப்பட்டது.

நகரம் மரணத்தை ஒரு வேண்டாத விருந்தாளியாகப் பார்க்கிறது. தன் மரணத்தைத் தவிர வேறு யார் மரணத்துக்கும் நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வாழும் ஊர் இது. போன வாரம் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் சாவு விழுந்தபோது மணி இரவு 11. நடுத்தர வயதைத் தாண்டிய அந்தப் பெரியவர் மாரடைப்பால் இறந்து போனார். அவர் மனைவி லட்சுமி அம்மாள் பெருங்குரலெடுத்து அழுதாள். என்ன சத்தம் என்று பார்க்க வந்தவர்கள் இரகசிய விசாரிப்புகள் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு காலையில் பார்க்கலாம் என்று கலைந்து போனார்கள். எல்லா வீட்டின் சன்னல்களும் சாத்திக்கொண்டன. அம்மாவால் ஒரு கணம்கூட வீட்டில் இருக்க முடியவில்லை. அவர்கள் வீட்டுக்கு ஓடிப் போய்ப் பார்த்தாள். இப்போது அம்மாவின் அழுகைச் சத்தம் பெரிதாக இருந்தது. அந்த அம்மாளைக் கட்டிக்கொண்டு என் அம்மா அழுதாள். எனக்கு வேறு வழியில்லை. வீட்டைப் பூட்டிவிட்டு இரவு அவர்கள் அருகிலேயே இருந்துகொண்டேன். காலையில் யாரும் எழுந்திருக்கும் முன்பு கடையிலிருந்து காப்பி வாங்கிவரச் சொல்லி அந்த அம்மாளைக் குடிக்கவைத்தாள். இரவெல்லாம் அழுததில் அவள் குரல் கம்மிப் போயிருந்தது. அம்மா அழுது கொண்டிருந்தாள். இத்தனை நாட்களில் அம்மா அந்த அம்மாளோடு ரொம்பப் பேசிப் பார்த்ததில்லை. அவர்கள் வீடு எப்போதும் பூட்டியேயிருக்கும். எப்போதாவது பார்த்துச் சிரிப்பதோடு சரி. ஆனால், அன்று அம்மா அவர்களோடு நெருங்கிப் பழகியவளைப் போல அங்கு அழுது கொண்டிருந்தாள். விடியத் தொடங்கியது. உறவினர்களும் நண்பர்களும் வந்து சேரத் தொடங்கினர். வந்த நிமிடத்தில் சத்தம்போட்டு அழுதவர்கள் எல்லாம் சில நிமிடங்களில் அமைதியானார்கள் அல்லது யாருடனோ பேசத் துவங்கிவிட்டிருந்தனர். ஆனால், அம்மா அழுவதை நிறுத்தவேயில்லை.

எங்கள் குடியிருப்பில் வாழ்பவர்களில் ஆண்கள் முதலில் வந்தனர். சிறிது நேரம் நின்று விசாரித்துவிட்டு, சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிப் போயினர். நேரத்தோடு வேலைக்குக் கிளம்பும் அவசரம் அவர்களுடைய விசாரிப்பில் இருந்தது. பிள்ளைகள், சாவு வீட்டைப் பார்த்துவிடாதவாறு மறைத்தபடிக் கூட்டிச்சென்று, வண்டியில் ஏற்றிவிட்டு, தங்கள் கணவன்மார்களை அலுவலகம் அனுப்ப ஓட்டமும் நடையுமாகப் பெண்கள் கடந்து போனார்கள். அவர்கள் சமைக்கும் மணம் என் நாசியை அந்தச் சூழ்நிலைக்கு இடைஞ்சலாக வருடிப் போனது. சத்தம் அதிகமாக வைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பையனைத் திட்டி, சத்தத்தைக் குறைத்துக் கதவைச் சாத்தினாள் ஓர் அம்மா. கணவன்மார்கள் கிளம்பிப்போன பின்பு, பெண்கள் ஒவ்வொருவராக வந்து விசாரித்து விட்டுச் சென்றனர். ஒரு சிலர் மட்டும் அங்கேயே இருந்தனர். புறப்பாடு ஏற்பாடுகள் முடிந்து பிணத்தை எடுத்தபோது பெண்கள் கூட்டம் விம்மி வெடித்தது. அந்த அம்மாளையும், என் அம்மாவையும் தவிர, பிற பெண்கள் சில நிமிடங்களில் அழுகையை நிறுத்திக் கொண்டனர். அந்த வீட்டில் மட்டும் தீப்பற்றிக் கொண்டது போலவும், அந்த அம்மாள் மட்டும் களவு கொடுத்தவள் போலவும் அவள் அழுகையைச் சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தபடியிருந்தனர். நான் சுடுகாடு வரை போய் வந்தேன். சாலையில் ஊர்வலத்தைக் கடந்து சென்றவர்கள் யாருக்கும் இவர் யார் என்று தெரியாது. அவர்கள் எப்படியாவது முந்திச் சென்று விடும் ஆவலில் எங்கள் மீது உரசிக்கொண்டும், தங்கள் வாகனங்களில் சத்தம் எழுப்பியபடியும் சென்றார்கள். சுடுகாடு நகரின் மத்தியில் இருந்தது. வலப்புறம் பள்ளி, இடப்புறம் உணவகங்கள் என்று இருந்தன. டீக்கடையில் ஒருவன் பஜ்ஜியை மென்று கொண்டே எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

லெட்சுமி அம்மாள், அழ முடியாத அளவிற்குக் கண்கள் வறண்டு போனவளாக இருந்தாள். அம்மா அவளைக் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள். எல்லோரும் கலைந்து போய்விட்டார்கள். அம்மா அன்று வீட்டுக்கு வர மறுத்துவிட்டாள். எல்லோரும் இயல்பிற்குத் திரும்பி விட்டார்கள். லெட்சுமி அம்மாள், அம்மா, நான் தவிர.

வீட்டுக்குத் திரும்பியும் எனக்கு அம்மாவின் அழுகைதான் நினைவில் வந்தது. அம்மா அழுது பார்த்து நாட்கள் ஆகிவிட்டன. அப்பா செத்தபோதும், அப்பத்தா செத்தபோதும் அம்மா இதேபோல அழுது தீர்த்திருக்கிறாள். ஆனால், அவள் அதிலிருந்து மீண்ட வேகம் அநாயாசமானது. அப்பா செத்த அன்று செய்தியை அறிந்ததும் அம்மா மயக்கம் போட்டு விழுந்தாள். பின்பு, அவள் மயக்கம் தெளிந்து எழுந்தபோது அப்பாவின் உடல் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதற்குள் ஊர் மொத்தமும் எங்கள் வீட்டுமுன் கூடிவிட்டிருந்தது. அம்மாவைச் சுற்றி, குறைந்தது ஐம்பது பெண்கள் தங்கள் கூந்தலை அவிழ்த்துவிட்டு அழுது கொண்டிருந்தனர். அது அம்மாவைச் சுற்றிய பெண்களின் கோட்டைபோல இருந்தது. அழுகைகள் பெருக்கெடுத்ததும் அம்மா எங்கிருக்கிறாள் என்று குழப்பம் ஏற்படும்படிக்கு அங்கு ஒருவருக்கொருவர் வித்தியாசம் இல்லாதபடிக்கு அழுதுகொண்டிருந்தனர்.

நான் சிறு பிள்ளை இல்லை என்றாலும் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அம்மா அழுததால் நானும், தங்கையும் அழுவது அனிச்சையாக நிகழ்ந்தது. ஊரில் எல்லாரும் அங்கு கூடிவிட்டிருந்தனர். மறுநாள் காரியங்கள் குறித்து உறவினர்களோடு பேசி முடிவு செய்தனர். எல்லோருக்கும் தின்பதற்குப் பெட்டி நிறைய காராசேவையும், கடுங்காப்பியையும் அம்பலார் ஏற்பாடு செய்தார். இரவில் ஊர் மடத்திலிருந்து பாரதம் எடுத்துவரப்பட்டு அதைப் பூசாரி வாசிக்க, எல்லோரும் உறக்கம் சுழலும் கண்களோடு கேட்டபடியிருந்தனர். அந்த வேளைகளில் கொடிய துக்கத்தையும் மறந்து அம்மாகூட அவர் வாசிப்பிற்குத் தலையாட்டிக் கொண்டிருந்தாள். விடிந்ததும் மீண்டும் அழுகை ஒரு தீயைப்போலப் பற்றிக் கொண்டது. ஊரில் யாரும் எங்கும் செல்லவில்லை. அறுப்பு வேலைகளை ஒத்திப்போடுமாறு அம்பலார் சொல்லிச் சென்றார். நீர்மாலைக்குச் செல்லக் கிளம்பியபோது ஊர் ஆண்கள் எல்லோரும் என் பின்னால் வந்துகொண்டிருந்தனர். மெலிந்த கிழவர் ஊதி எழுப்பிய சங்குச் சத்தம் என் அடிவயிற்றைப் பிசைந்தது. அப்பா உடலைத் தூக்கியபோது அம்மா உட்பட எல்லோரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். கொஞ்ச நேரத்தில் அம்மா கொஞ்சம் நிலைக்கு வந்தவள் போல அழுகையின்றிக் கேவல்களை மட்டும் எழுப்பிக் கொண்டிருந்தாள். எல்லாம் முடித்துவிட்டு வந்தபோது அம்மா தனித்து அமர்ந்திருந்தாள். ஊர்க்காரர்கள் அவரவர்கள் வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர். இப்போது வீட்டில் அமைதி. அம்மா அவ்வப்போது அழுதாலும் அது நீண்டதாக இருக்கவில்லை. முந்தைய நாள் இந்நேரம் துக்கம் ஒரு புயலைப்போல எங்கள் வீட்டைச் சுற்றி வளைத்து வீசிக்கொண்டிருந்தது. இன்று அது இல்லை. அந்த நாளின் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கையில், கொட்டிக்கிடந்த துயரத்தை ஊரார் எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக அள்ளிக் கொண்டுபோய்விட்டார்கள் என்று தோன்றியது. அவர்களுடைய அழுகைகள் பிய்த்துத் தின்றது போக மிச்சமிருந்த துக்கத்தை அம்மா எங்கள் முகம் பார்த்து மறைத்துக் கொண்டாள். அதன்பின் அவள் எங்களுக்காக வாழப் பழகிக் கொண்டாள்.

நினைவுகள் விலகவும் அம்மா வீட்டுக்கு வரவும் சரியாக இருந்தது. அம்மா வீட்டுக்கு வந்து வெந்நீர் போட்டுக் குளித்தாள். ஈசிச்சேரின் பின்பகுதியில் கூந்தல் விழுமாறு படுத்துக்கிடந்தாள். நான் அவள் அருகே வந்தேன். அவள் என்னைப் பார்த்தாள். ஏதோ சொல்ல நினைப்பவளாகத் தோன்றியது.

"என்னம்மா, எதுனா பேசணுமா?"

‘ஆமாம்’ என்பதுபோல அவள் தலையசைத்தாள். அவள் கால்மாட்டில் நான் அமர்ந்து கொண்டேன். அவள் குரல் இயல்பு மாறிப்போய்க் கனத்திருந்தது. அதோடு அவள் பேசினாள்.

"ராஜா! அம்மா திரும்பத் திரும்பச் சொல்றேன்னு தப்பா நினைக்காத! சாவு எப்ப வேண்ணா மனுஷனாப் பொறந்தவனுக்கு வரும். அதுல ஒண்ணுமில்ல. செத்தவனுக்கு ஒரு கணம்தான். ஆனா, அவன்கூட வாழ்றவங்களுக்குக் காலம்பூரா அது ஒரு சும. செத்தப்பவே அழுது தீர்க்கலைன்னா அது ஆயுசுக்கும் அவங்க மனச விட்டுப்போகாது. இந்த ஊரில இருக்கிறவங்க சாவப் பாத்து பயப்படுறாங்க. அதனால அத மதிக்காம அலையுறாங்க. நேத்து வீட்டுல யாரையாவது சாவக் குடுத்தவங்ககூட மறுநாள் வாசல்ல யாரையாவது பார்த்தா சிரிக்கப் பார்க்கிறாங்க. காரணம், சிரிச்சாத்தான் இங்க பக்கத்து வீட்டுக்காரனோ எதிர்வீட்டுக்காரனோ பக்கத்துல வருவான். அழுதா, என்ன செய்றதுன்னு தெரியாம, பாக்காத மாதிரி போயிருவாங்க. துக்கம் இவங்க நெஞ்சுக்குழிக்குள்ளேயே ஒரு விஷத்தப்போல கட்டிக்கிட்டுயிருக்கு. அத என்ன செய்யன்னு தெரியாம அல்லாடுறாங்க. எம் பிள்ளைகள் அந்தக் கஷ்டத்தப் படக்கூடாது! சாவ அன்னயோட அழுது தீர்க்கணும். நம்ம ஊரு மிந்திமாரி இருக்காதுன்னு எனக்கும் தெரியும். ஆனாலும் இந்த அளவுக்குக் கொலஞ்சிபோயிருக்காது. தப்பா நினைக்காதடா ராஜா, ஊருல என்னக் கொண்டுபோயி விட்ருடா!"

அம்மாவின் பேச்சில் கெஞ்சல் இருந்தது.

ஊருக்குப்போகப் போவது பற்றிய சிந்தனையோடு வெளியே வந்தேன். லெட்சுமி அம்மாளின் பையன் வாசலில் நின்று கொண்டிருந்தான். என் வயதுதான் இருக்கும். என்னைப் பார்த்ததும் மெல்லச் சிரிக்க முயற்சி செய்தான். நான் எதையும் பார்க்காதவனைப் போலக் கடந்து போனேன் விரைவாக.

About The Author

1 Comment

Comments are closed.