மாலைமாற்று – 1
சம்ஸ்கிருத இலக்கியத்தில் காவ்யாதர்சம் மிகச் சிறந்த நூலாகக் கொண்டாடப்படுகிறது. இதை இயற்றியவர் பெரும் புகழ் பெற்ற தண்டி. இதே பெயரைக் கொண்ட தமிழ்க் கவிஞரான தண்டியும் தண்டியலங்காரம் என்னும் அழகிய இலக்கண நூல் ஒன்றை யாத்துள்ளார்.
நுட்பமான பல விஷயங்களை இந்நூலில் காண முடிகிறது. இதை இயற்றிய தண்டி கம்பனின் மகனான அம்பிகாபதியின் புதல்வர் எனக் கருதப்படுகிறார். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு. வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்ற தண்டி தனது அலங்கார நூலில் சுமார் 35 அணிகளின் இலக்கணத்தைச் சிறப்பாகத் தருகிறார். அத்துடன் சுமார் இருபது சித்திர கவிகளையும் சித்தரிக்கிறார். அதில் கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோபத்திரம் ஆகியவற்றை விளக்கும் செய்யுள்களையும் காணலாம். ஏற்கனவே இத்தொடரில் பரிதிமால்கலைஞரின் விளக்கமாக நாம் பார்த்துள்ள கோமூத்திரி, கூடசதுக்கம், சருப்பதோபத்திரம் ஆகியவற்றின் உதாரணச் செய்யுள்கள் தண்டியலங்காரத்தில் மேற்கோள் காட்டப்பட்டவையே!
சருப்பதோபத்திரம் (அத்தியாயம் 11இல் தரப்பட்டுள்ள "மாவா நீதா தாநீ வாமா" என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)
கூடசதுக்கம் (அத்தியாயம் 15இல் தரப்பட்டுள்ள புகைத்தகைச் சொற்படைக் கைக்கத என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)
கோமூத்திரி (அத்தியாயம் 17இல் தரப்பட்ட பருவ மாகவி தோகன மாலையே என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)
ஆகிய இவை தண்டியலங்காரம் தரும் செய்யுள்கள்.
மாலைமாற்று
ஒரு செய்யுளை கடைசி முதலாகக் கொண்டு படித்தாலும் அதே செய்யுள் வந்தால் அதுவே மாலைமாற்று எனப்படும்.
தண்டியலங்காரம் தரும் மூன்று உதாரணச் செய்யுள்கள் வருமாறு:-
"நீ வாத மாதவா தாமோக ராகமோ
தாவாத மாதவா நீ"
இதன் பொருள்:
நீ வாத மாதவா – நீங்காத பெரும் தவம் உடையோனே!
தா மோக ராகமோ தாவாது – வலிய மயக்க வேட்கையோ நீங்காது
அம் மாது அவா நீ – (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! (அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக)
"வாயாயா நீகாவா யாதாமா தாமாதா
யாவாகா நீயாயா வா"
வாயா யா – எமக்கு வாயாதன (கிடையாதவை) யாவை?
நீ காவாய் – நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்!
யாதாம் – (இன்றேல்) யாதாகும்?
மாது ஆம் மா தா – இம்மாது பெரும் வருத்தம் உறுவள்
யா ஆகா – (நீ விரும்பினால்) எவை முடியாதன?
ஆயா நீ வா – யான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக
தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்தியது.
"பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூ நீறு நாளைவா பூ"
பூவாளை நாறும் நீ – இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ
பூ லோகம் மேகமே – பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ!
பூ நீறு நாளை வா – பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாய்
பூ – இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்
பூ மேகம், லோக மேகம் என்று தனித் தனியாகக் கூட்டுக. பூவைச் சொரியும் மேகன் "புட்கலாவருத்தம்’ என்றும் பொன்னைச் சொரியும் மேகம் ‘சங்காரித்தம்’ என்றும் கூறப்படும்.
மணத்தல் – கலத்தல்
பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்குதற்கும், திருநீறு புனைதல் குற்றம் நீங்கிப் பரிசுத்தம் அடைவதற்குமாம்.
பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு பாங்கி வாயிலாக மறுத்து உரைத்ததாம் இந்தச் செய்யுள்.
பரிதிமால்கலைஞர் தண்டியலங்காரம் தரும் மூன்று செய்யுள்களுக்கும் இப்படி விளக்கம் அளித்துள்ளார்.
மாலைமாற்றைச் சித்திரமாகப் பார்த்தால் வரும் மாலை இது :-
(தொடரும்)
“