பண்டைக் காலத்திலே, அதாவது, பல்லவர் காலம் வரையில் (கி. பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு), திருமால், சிவபெருமான், கொற்றவை முதலிய தெய்வங்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. திருவுண்ணாழிகை (கருவறை)யும் அதைச் சார்ந்து அர்த்த மண்டபமும் மட்டும் அக்காலத்தில் இருந்தன. வேறு மண்டபங்களோ துணைக்கோயில்களோ அக்காலத்தில் இல்லை.
பிற்காலத்தில், அர்த்த மண்டபத்தைச் சார்ந்தாற்போல் கோயில் முன்புறத்திலே முகமண்டபம் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
பரிவார ஆலயங்கள்
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, பிற்காலச் சோழர் ஆட்சியில் சிவன் கோயில்களில் அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் கட்டப்பட்டன. இக்காலத்துக்கு முன்பு சிவன் கோயில்களிலே அம்மனுக்கென்று தனி ஆலயங்கள் இருந்ததில்லை. தேவாரத்திலே அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய நாயன்மார்கள் சிவபெருமானையும் தேவியையும் பாடியது உண்மையே. ஆனால், அக்காலத்தில் தேவிக்கென்று சிவன் கோயிலில் தனியாக ஆலயம் இருந்ததில்லை. தேவிக்கென்று தனி ஆலயம் இருந்தால், அது சிவபெருமான் ஆலயத்துடன் சேர்ந்து இராமல் தனியாக இருந்தது. உதாரணமாக, காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மை ஆலயத்தைக் கூறலாம். நாயன்மார்கள் இந்தத் தேவி ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இந்த ஆலயம் சிவன் கோயிலில் சேராத தனி ஆலயம் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், சோழ அரசரால் அம்மன் ஆலயங்கள் சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டன. அம்மன் ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டதைக் கல்வெட்டுச் சாசனங்களினாலும் அறியலாம்.
சோழர்கள் காலத்திலே அடியார், நாயன்மார்களுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டன. இந்த அடியார்கள், நாயன்மார்களின் உருவங்கள், திருவுண்ணாழிகையின் வெளிப்புறத்தில், அதைச் சூழ்ந்துள்ள சுற்றாலை மண்டபங்களில் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவுண்ணாழிகைக்கு வெளியே சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்ட படியால், மூலக்கோயில்கள் கட்டட அமைப்பு மறைக்கப்பட்டது. அன்றியும், சுற்றாலை மண்டபத்தில் சாளரங்கள் அமைக்காதபடியால், பட்டப் பகலிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. மூலக்கோயிலின விமானம் மட்டும் தூரப்பார்வைக்குத் தெரியும்.
மூலக் கோயிலின் அதிஷ்டானத்திலும் (அடிப்புறம்), சுவரிலும் சிற்ப வேலைகள் அமைந்து, அப்பகுதிகளே கட்டடத்தின் அழகான பகுதிகளாக விளங்குபவை. அப்பகுதியைச் சுற்றிலும் மண்டபம், அமைத்து மறைத்துவிட்டதல்லாமல், இருள் சூழும்படியும் செய்துவிட்டார்கள். இப்படிச் செய்தது மூலக்கோயிலின் அழகையே கெடுத்துவிட்டது. இப்பொழுது உள்ள மூலக்கோயில்களில் பெரும்பான்மையும் மூலக்கோயிலின் கட்டட அழகு மறைக்கப்பட்டவையே. சுற்றாலை மண்டபங்களால் மறைக்கப்படாத மூலக்கோயில்கள் மிகச்சிலவே இக்காலத்தில் உள்ளன.
அண்மையில், மிகப் பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஒரு கோயிலுக்கு, அக்கோயிலின் அமைப்பை ஆராய்வதற்காகச் சென்றேன். மூலக்கோயிலின் முன்புறத்தில் மிகப்பெரிய முகமண்டபமும், அதனைச் சார்ந்து மூலக்கோயிலைச் சூழ்ந்து சுற்றாலை மண்டபங்களும் அமைந்து அக்கோயிலை மிகவும் இருளுடையதாக்கி விட்டது. இது எல்லாக் கோயில்களிலும் உள்ள சாதாரண நிலை. நான் இக்கோயிலுக்குச் சென்றது பகல்வேளை. அந்த நேரத்திலும் இக்கோயில் மிகமிக இருளடைந்து காணப்பட்டது. மீண்டும் வெளியே வந்த போது, மறுபிறப்புப்பிறந்தவன்போல உணர்ந்தேன். அவ்வளவு இருள் அடர்ந்து அச்சமாக இருந்தது.
பெரிய சிவன் கோயில்களிலே பிள்ளையார் கோயிலும் முருகன் ஆலயமும் இப்போது காணப்படுகின்றன. இக்கோயில்களும் பிற்காலத்தில் ஏற்பட்டவை. முருகனுக்கும் கணபதிக்கும் தனித்தனியாகப் பண்டைக் காலத்தில் கோயில்கள் இருந்தது உண்மையே. ஆனால், சிவன் கோயிலுக்குள் பரிவார ஆலயங்களாக முருகன், கணபதி, அம்பிகை முதலியவர்களுக்குத் தனித்தனியே பண்டைக்காலத்தில் ஆலயங்கள் இல்லை.
பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் முதலிய மண்டபங்களும் சோழர் காலத்திலும் அதற்குப் பிற்காலத்திலும் ஏற்பட்டவையே.
கோயில்களின் வாயில்களில் இப்போதுள்ள முகப்புக் கோபுரங்கள் பண்டைக் காலத்தில் இல்லை. இக்கோபுரங்கள் பிற்காலத்திலே, விஜயநகர அரசரான கிருஷ்ண தேவர் காலத்திலே ஏற்பட்டவை. இவற்றிற்கு இராய கோபுரம் என்று பெயர் உண்டு. சிவன் கோயில்களிலே சனீசுவரன் கோயில், நவக்கிரகக் கோயில் என்பவை மிகப் பிற்காலத்திலே புதிதாகச் சேர்க்கப்பட்டவை.
பெருமாள் கோயில்களிலும் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ‘தாயார் சந்நிதி’ இருந்ததில்லை. சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனி மதமாகப் பிரிந்த பிறகு, சைவர்கள் சிவன் கோயிலில் அம்மனுக்குத் தனியாக ஆலயம் அமைத்துக கொண்டதுபோல, வைணவர்களும் திருமகளுக்குத் ‘தாயார் சந்நிதி’ அமைத்துக் கொண்டார்கள். அன்றியும், ஆழ்வார்களுக்கும், ஆசாரியர்களுக்கும் மற்றும் தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைத்து வழிபட்டார்கள். ஆகவே, பெருமாள் கோயில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் புதிதாக அமைக்கப்பட்டன.
திருமால் கோயில்களில் ஆண்டாள் சந்நிதி என்று ஒரு கோயில் உண்டு. ஆண்டாள் ஆழ்வார்களில் ஒருவர். ஆனால், இவருக்கு மட்டும் சிறப்பாக ஒவ்வொரு பெருமாள் கோயிலிலும் தனியே ஆலயம் உண்டு. விஜய நகரத்து அரசனான கிருஷ்ணதேவராயன் மிகுந்த வைணவப் பற்றும் ஆண்டாள் பக்தியும் உடையவனாதலின், அவன் வைணவக் கோயில்களில் ஆண்டாள் சந்நிதியைப் புதிதாக அமைத்தான். அவன் காலத்திலும் அதற்குப் பிறகும் ஏற்பட்டவையே ஆண்டாள் சந்நிதிகள்.
இதுவே கோயிற் கட்டடங்களின் வரலாறு. மூலக்கோயிலைச் சூழ்ந்து சுற்றாலை மண்டபங்கள் அமைக்கப்பட்டபடியால், மூலக்கோயிலை அடிமுதல் முடிவரையில் ஒரே மயத்தில் பார்த்து மகிழ முடியாமலிருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். கோயிலுக்கு வெளியே சற்று தூரத்தில் சென்று மூலக்கோயிலின் மேற்புற அமைப்பைப் பார்த்து மகிழவேண்டியிருக்கிறது. முழு உருவத்தை ஒருமித்துப் பார்த்தால்தான் அக்கட்டடக் கலையின் அழகை நன்கு உணரலாம். மேற்பகுதி, அடிப்பகுதி இரண்டையும் ஒருமிக்கப் பார்த்து மகிழும் வாய்ப்பு வெகு சில கோயில்களிலேதான் அமைந்துள்ளது. ஆனால், பல்லவர் காலத்துக் கோயில்களில் இந்த அழகை முழுவதும் காணலாம்.
— கலை வளரும்…
“