யாமிருக்க பயமேன்
எப்படி ஒரு எலும்பும் தோலுமான குழந்தையை தாய் இவ்வளவு நேசிக்கிறாளே, அப்போ கடவுள் எனக்கு கல்ப கோடி வருஷமாக தந்தை, தாய். எல்லா ஜென்மத்திலேயும் அவன்தான் அப்பா, அம்மா. அவன் ஏன் கெட்டது பண்ணப்போறான்? அவனுக்கு வேற வேலை இல்லை? நமக்கு நல்லது பண்ணுவதற்காக இந்த உலகத்தை படைச்சு, நாம் நல்லா இருக்கணுமுன்னு ஆகாசம், சந்திரன், சூரியன் எல்லாம் படைச்சு, நாம் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியே விட்டாலும் ஆக்ஸிஜனாக மாற்றிக் கொடுக்க செடி, கொடி எல்லாம் படைச்சு, சலசலத்து ஓடும் நீர், காற்று எல்லாவற்றையும் படைச்சு ஜம்மென்று வைச்சு இருக்கான். கவலையே படாதே. எது நடக்குமோ அது நடந்தே தீரும்.
ராமருக்கு விருப்பம் இருந்தாலும், இல்லைன்னாலும் வனவாசம் போயே தீருவார். அவருக்கு விருப்பம் இருந்தாலும் இல்லைன்னாலும் அந்த காட்டுல போவார், அவருக்கு விருப்பம் இருந்தாலும், இல்லையென்றாலும் அந்த கல்லுலதான் கால் படும். அவருக்கு விருப்பம் இருந்தாலும், இல்லையென்றாலும் அந்த கல் ‘டொய்’-னு அகலிகையாகி சாபத்திலிருந்து தப்பிச்சுடும். ஒரு சாபம் கொடுக்கப்பட்டபோதே, ஒரு நெகட்டிவான சம்பவம் நடந்தபோதே, அதுக்கான பாஸிட்டிவ் சம்பவமும் வந்தாச்சு. ஒரு வேர் இருந்தா முளைச்சு தானே ஆகணும். அதனால், நீ பார்க்கிற மரத்துக்கு அடியில் வேர் இருக்கு. நீ பார்க்கிற புத்தனுக்கு அடியில் சித்தார்த்தன் இருந்தான். சித்தார்த்தனுக்கு மேல ஒரு புத்தன் இருந்தான். இரண்டும் நிஜம் தானே. அதனால் இந்த உலகத்தில் எல்லாம் கடவுளுடைய சித்தத்தில் திட்டமிட்டு அழகாக செய்யப்படுகிற செயல்கள். உன் திட்டம் என்று ஒன்றுமில்லை.
There is nothing called as your plan. All plans are HIS plans. He is the only Master. So, all His plans are Master Plans and Master plans can never do you any harm. உனக்கு எந்த கெட்டதும் வர வாய்ப்பு கிடையாது. ஏனென்றால், இறைவன் "தாயிற் சிறந்த தயான தத்துவன். நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவன். பால் நினைந்தூட்டும் தாயினும் சால பாவிகளுக்கும் பரிந்து அன்பு காட்டக்கூடிய தயாபரன். பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். அது நாராயணா எனும் நாமம்."
அதனால் நீ கடவுளை சந்தேகமே படத்தேவையில்லை. நீ, இந்த உலகத்தில் பார்க்கிற கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் சக்திக்கு முன்னால் ஒரு சிறு தூசி. அதனால் நீ கடவுளை நேசித்தால், கடவுளை நெருங்கிவிட்டால் எதுவும் ஒன்றும் பண்ணாது. "இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே" கருடன் சொன்னது. அப்போ பரமசிவன் கழுத்துல நீ பாம்பு ஆகிவிடு. கருடனைப் பத்தி உனக்கென்ன? வெரி சிம்பிள். அப்புறம் கிரகங்களைப் பத்தி உனக்கென்ன? அதனால் இந்த ஜோசியக்காரன், தகடு, மோதிரம், வாஸ்து சாஸ்திரம், இவற்றின் பின்னால் எல்லாம் போய் நேரத்தை வீணாக்காதே. இதுக்கு எல்லாம் மேல ஒரு சக்தி இருக்கு அதுதான் கடவுள். அதை "யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன். எங்கெழுந்தருள்வது இனியேனு." கெட்டியா பிடிச்சுக்கணும். அதை பிடிச்சுக்கிட்டா இதை பத்தி எல்லாம் கவலைப் படத் தேவையில்லை.
மார்கண்டேயன் சாகணும். அவன் ஓடி வந்து சிவனை பிடிச்சவுடனே, சிவன் எமனை உதைச்சு அவனைக் காப்பாற்ற வில்லை? முதலை கடிச்சு ஒரு பையன் இறந்து விட்டான் அவினாசி குளத்துல. சுந்தர மூர்த்தி நாயனார் ஒரு பாட்டு பாடினதும், அந்த முதலையுண்ட பாலகன் மீட்கப்பட வில்லையா? நீ கடவுளைப் பிடிச்சால் எந்த கர்மா இருந்தாலும் மாத்திடுவான். உனக்கு இதில் கொஞ்சம்கூட சந்தேகமே வேண்டாம். இதை நாம் நம் அனுபவத்தினால் சொல்கிறோம். கிரகங்களுடைய ஆளுகை சரீரத்துக்கு மேல் இருப்பது உண்மை. ஆனால், அதெல்லாம் நல்லவர்களுக்கும், கடவுளை நேசிப்பவர்களுக்கும் இல்லை. மத்தவனுக்குக்கூட கொடுமைப்படுத்துவதற்காக இல்லை. அவனை உருப்பட வைக்கறதுக்காக, அவனை திருத்துவதறதுக்காக. இல்லைன்னா, அவன் கெட்டழிவான். நிறைய பேருக்கு ஒரு அகங்காரம் இருக்கு. எங்களால் எல்லாத்தையும் பார்த்துக்க முடியும். எங்களுக்கு சாமி, கோயில் எதுக்கு என்று சொல்றவன் எல்லாம் இருக்கான். அப்படி சொன்னவன் நிறைய பேர் இருக்கான். ராமாயணத்தில் லட்சுமணன் இருக்கான். தூரத்தில் பரதனோட சைன்யம் வருகிறது. இவன் ராமரிடம், காட்டுல இருந்தாலும் விடமாட்டேங்கறான். அழிக்க வந்திருக்கான்னு நினைச்சுட்டு சொல்றான், "அவனைப் பார். நான் என்ன பண்ணப் போறேன்னு." அதுக்கு ராமர் சொல்கிறார், "அப்பா! நீ தப்பா நினைக்கறே. அவனை ஏன் குறை சொல்றே? எது நடக்கணுமோ விதிப்படி நடக்கப் போவுது. நதியின் பிழையன்று நறும்புதல் இன்மை. இது விதியின் பிழை. நீ வெகுண்டது என்னை". ஆற்றில் தண்ணி இல்லைன்னா ஆகாசத்தை திட்டு. நதியை ஏன் குறை சொல்றே. அந்த மாதிரி பரதனுக்கு என்னைக் கொல்லணும் என்றால் அது விதியின் பிழை. அதனால் நீ அவனை குறை சொல்லக்கூடாது என்று சொல்றார்.
அதுக்கு இவன் தெனாவட்டா சொன்னான், "விதிக்கு விதியாகும் என் வில் தொழில் காண்டி" என்றான். விதியையே மாத்தக்கூடிய வில் கைல இருக்கு பார் என்றானாம். இது முதல் சீன். விதியைப் பற்றி வெகுண்டு பேசுகிற லட்சுமணன். ஆனால், பின்னால் மாரீசனை தேடிக் கொண்டு ராமர் போக லட்சுமணா என்று அலறும் சத்தம் போட்டு, மாரீசன் செத்துப் போக, சீதை சொல்றா, "அப்பா! என் கணவருக்கு ஆபத்து. போய் காப்பாத்தணும் என்று. லட்சுமணன் சொல்றான் என் ராமனுக்கு ஒன்றும் ஆகாது அப்படின்னு. அதுக்கு சீதை, ராமர் செத்துப் போனால் என்னோட குடும்பம் நடத்தலாம் என்று எண்ணமா? என்று சுடுசொல் சொல்கிற மாதிரி எல்லாம் வருது. அப்போ அவன் சொல்றான், "விதி நின்றது. பிடர் பிடித்து உந்த நின்றது" என்றான்.
அதுக்கு முன் சீனில் என்ன சொன்னான், "விதிக்கு விதியாகும் என் வில் தொழில் காண்டி" என்று. விதியை மாத்தற வில் வைச்சிருக்கேன் என்றான். அதே ஆள் அடுத்த சீனில் விதி என் கழுத்தைப் பிடிச்சு தள்ளுகிறது. போகாமல் இருக்க முடியுமா? என்றான். இது தான் வாழ்க்கை. எவனொருவன் கடவுளை நம்பாமல் இருக்கிறானோ அவன் வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் வந்து அந்த நிகழ்ச்சிகளே அவனை கடவுளை நோக்கி உந்திச் செல்லும்.
“
Very good concept well written and it is really true!