வெயில், மாசு போன்றவற்றால் நம் முகம் பொலிவிழந்து, பலவிதமாக பாதிப்படைவது நாம் அனைவரும் அறிந்ததே. இவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய நல்லதொரு முகப்பூச்சு மிகவும் அவசியமானது. முகப்பூச்சுக்களில் பலவகை உண்டு. நம்முடைய சருமத்தின் தன்மை அறிந்து, அதற்கேற்ற முகப்பூச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முகம் பொலிவடைவது மட்டுமில்லாமல் சருமப் பாதிப்பையும் தவிர்க்க இயலும். வறண்ட சருமம் உடையவர்களுக்கான சில முகப்பூச்சுக்களின் தயாரிப்பு, செய்முறை விவரங்கள் கீழே உங்களுக்காக.
வாழைப்பழப் பூச்சு
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1 சிறியது,
தேன் – 1 மேஜைக்கரண்டி.
செய்முறை:
வாழைப்பழத்துடன் தேனை நன்றாகக் கலந்து மசித்துக் கொள்ளுங்கள். மசித்த கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். வாழைப்பழப் பூச்சு தரும் பலனைப் பாருங்கள்!
பப்பாளிப் பூச்சு
தேவையான பொருட்கள்:
பப்பாளி – 1 பெரிய துண்டு
செய்முறை:
பப்பாளித் துண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு, பப்பாளிக் கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவுங்கள். பப்பாளி தரும் மென்மையை உணருங்கள்!
கோதுமை மாவுப் பூச்சு
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 மேஜைக்கரண்டி
பால் – 1 மேஜைக்கரண்டி
பன்னீர் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
கோதுமை மாவில் பால் மற்றும் பன்னீரைச் சேர்த்து, கட்டி தட்டாமல் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். சருமத்தின் மாற்றத்தை உணருங்கள்!
தேன் முகப்பூச்சு
தேவையான பொருட்கள்:
தேன் – 1 மேஜைக்கரண்டி
வெள்ளைக் கரு – சிறிதளவு
கிளிசரின் – 1 மேஜைக்கரண்டி
கோதுமை மாவு – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் தேன், வெள்ளைக் கரு மற்றும் கிளிசரின் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். பின்பு அதில் கோதுமை மாவைச் சேர்த்து, கட்டியில்லாமல் நன்றாகக் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். உங்கள் மேனி அடைந்திருக்கும் மாற்றத்தை உணருங்கள்!
பாதாம் முகப் பூச்சு
தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 10
பன்னீர் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
இரவு முழுவதும் ஊற வைத்த பாதாம் பருப்புக்களின் தோலை நீக்கி, பன்னீர் சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவுங்கள். நன்றாகக் காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். பாதாம் தரும் பளபளப்பைப் பாருங்கள்!
குறிப்பு:
வறண்ட சருமம் உடையவர்கள்,
* எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவ வேண்டும்.
* முகப்பூச்சுக்களில் தண்ணீருக்குப் பதிலாக எப்பொழுதும் பன்னீர் பயன்படுத்த வேண்டும்.
Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல.
“
மிகவும் பயனுலதாக இருந்தது.இன்னும் சில குரிப்புகல் தேவை