4. யோகம் என்பது செயலில் திறமை
4.3 மனம் குவிந்து செயல் புரிக!
"யோக: கர்மஸு கெளஸலம்" (யோகம் என்பது செயலில் திறமை) என்ற கீதையின் உபதேசத்தைப் பற்றிச் சிந்தித்து வருகிறோம். கீதையும் சுவாமிஜியும், "செத்த பிறகு சிவலோகம்; வைகுந்தம்" என்று பேசுபவர்கள் அல்லர். அவர்கள் பேசுவது, அன்றாட வாழ்வியலில் செய்ய வேண்டியது எது, செய்யக்கூடாது எது என்ற விவேகத்தைப் பற்றி. ஏற்கனவே, இது பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அடுத்தபடி, குறிக்கோள் நிர்ணயம் பற்றியும் கூறினார். அதைத் தொடர்ந்து, குறிக்கோள் உயரியதாய் இருந்தாலும் வழிமுறைகளில் கருத்தும் கவனமும் தேவை என்றார். முன்பொரு இயலில், எந்த மகத்தான சாதனையாய் இருந்தாலும் அது பல சின்னச் சின்னக் காரியங்கள் அடங்கியது என்றும், ஒவ்வொரு சின்னச் செயலையும் நறுவிசாகச் செய்பவனே உயர்ந்தவன் என்றும் சுவாமிஜி சொன்னதை அறிந்தோம்.
இதற்கு முந்திய இயலில், குறிக்கோளை நிர்ணயித்துக்கொண்டு, வழிமுறைகளைத் தீர்மானித்துக்கொண்ட பிறகு, திட்டப்படி அந்தந்தக் காரியங்களை முறைப்படிச் செய்து கொண்டு வந்தால், இலக்கைப் பற்றி நினைக்கக் கூட வேண்டியதில்லை, அதுவாகவே கை கூடும் என்றும் அவர் சொன்னதைக் கண்டோம்.
சிறப்பாகப் பணி ஆற்றுவதற்கு மற்றுமொரு முக்கியத் தேவை ‘மனம் குவிந்து செயலில் ஈடுபடுவது’ (Concentration). இப்படி மனம் ஒன்றிச் செயல்படும்போது தன்னைப் பற்றிய உணர்வே இருக்காது. மெய்மறந்து செயல்படுவது என்பது இதுதான். மேல்நாட்டினர் பலருக்கு, தன் உணர்வே இல்லாவிட்டால் எப்படி வேலை செய்ய முடியும் எனும் சந்தேகம் எழும். ஆனால், நம்மில் பலரும் அந்த நிலையை அனுபவித்திருப்போம். நம்மை முற்றிலும் மறந்து வேலை செய்யும்போது அந்தப் பணி பன்மடங்கு சிறப்பாக அமைகிறது. ஓவியக்கலைஞனோ, சமையற்கலைஞனோ, கவிஞனோ யாராக இருக்கட்டும், மெய்மறந்து, மனம் குவிந்து தங்கள் பணியில் ஈடுபடும்போது, அவர்கள் கைவண்ணம், கற்பனை வளம் பல மடங்கு மெருகுடன் மிளிர்கிறது! மனம் குவிந்து பணிபுரிவதே யோகம்தான்! யோகத்தின் மூலம், இறைவனுடன் ஒன்றி, மனம் ஒன்றிப் பணியில் மூழ்கி விடுகிறவன் செய்யும் எந்தக் காரியமும் உலகுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.
(Ref.: C.W. 5 – Pages 247 – 248).
(பிறக்கும்)
“