சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

போன வாரம் நவராத்திரி கொலு வேலைகள் கொஞ்சம் நிறையவே இருந்ததாலே நாட்கள் போன விதமே தெரியலை. எங்க வீட்டு நவராத்திரி கொலுவினைப் பார்த்து ரசித்து மனோன்மணி பின்னூட்டம் அனுப்பியிருந்தாங்க. ரொம்ப நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்வீங்கன்னு நம்பறேன். அது மட்டுமில்லாம நீங்க அனுப்பவிருக்கும் உங்களுடைய கொலுவின் புகைப்படங்களுக்காக ஆவலுடன் காத்திட்டுருக்கேன்.

திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதென்ன புரட்டாசி மாசமா இல்லை சித்திரை மாசமான்னு? ஏன்னா வெயில் தாங்க முடியலை. வெயில் சும்மா கன்னாபின்னானு ஏகத்துக்கும் சுட்டெரிக்குது. ம்… ஹூம்… தாங்கவே முடியலை. ‘மற்றதெல்லாத்தையும் விட கோயமுத்தூர்ன்னு சொன்னா எல்லோருக்கும் மொதல்ல தட்பவெட்ப நிலைதான் ஞாபகத்துக்கு வரும். இப்போ என்னாடான்னா சென்னைக்கு சமமா வெயில் கொளுத்துது’ன்னு கோவைவாசிகள் பலரும் வருத்தத்தோட சொல்றாங்க.

இதெல்லாம் பத்தாதுன்னு சாலைகளை அகலப்படுத்தறோம், போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கிறோம்னு சொல்லி, சாலையோரம் இருக்கும் மரங்களையெல்லாம் வெட்டி, இருப்பது போதலைன்னு இதன் மூலமா இன்னும் கூடுதல் புண்ணியம் சேர்த்துக்கிட்டது நம்ம அரசு. பார்க்கப் பார்க்க மனசே ஆறலை எனக்கு. எவ்வளவு பெரிய பெரிய மரங்களை துண்டம் துண்டமா வெட்டி சாய்ச்சிருக்கிறதைப் பார்க்கும்போது ரொம்பவே மனசுக்கு கஷ்டமாயிருக்கு. வடவள்ளி பக்கத்துல, எந்த ஆலமரத்தின் பேரில் பஸ் நிறுத்தமிருந்ததோ, இப்போ அந்த இடத்துலே மரத்தின் காய்ந்த விழுதுகளும், இலைகளும்தான் இருக்கு. வெட்டப்பட்ட ஆலமரத் துண்டுகளை நீக்கி போக்குவரத்தை சரி செய்ய மட்டுமே 2 நாட்களுக்கு மேலாச்சு. இன்னமும் அந்த இடத்தை கடக்கும்போது மனசுக்கு ஏகத்துக்கும் கஷ்டமாயிருக்கு.

கடந்த வாரம் ஒளிபரப்பான விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகளிலே, ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை எதேச்சையாப் பார்க்க நேர்ந்தது. பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனங்களை நான் இங்கே எழுதப் போறேன்னு நினைக்கிறீங்க இல்லையா? அதுதான் கிடையாது. நமக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம்? ஏதோ நான் உண்டு என்னுடைய வேலையுண்டுன்னு சமத்தா இருக்கேன். சரி விஷயத்துக்கு வருவோம். நான் பார்க்கும்போது இயக்குனர் முருகதாஸ், தன்னுடைய ‘ஏழாம் அறிவு’ படத்தின் கதை பற்றியும், படம் உருவான விதம் பற்றியும் சொல்லிகிட்டிருந்தாரு. அவர் பேசும்போது நிறைய இடங்கள்ல போதி தர்மன் என்ற புத்த துறவியைப் பற்றி உணர்ச்சிப் பெருக்கோட சொல்லிக்கிட்டிருந்தாரு.

எப்பவுமே எனக்கு இயக்குனர் முருகதாஸ் மேல் ஒரு தனி மரியாதை உண்டு. அதனாலேயே என்னவோ போதி தருமரைப் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் கொஞ்சம் ஆர்வத்தோட கேட்டுட்டிருந்தேன். "’ஏழாம் அறிவு’ படம் பார்த்தப்புறம் போதி தர்மன் பற்றிநிறைய விஷயங்களை நீங்க எல்லோரும் தெரிஞ்சுக்க ஆசைப்படுவீங்கன்னு" சொன்னாரு. சரி இவ்வளவு தூரம் சொல்றாரே, போதி தருமரைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்னு இணையத்துல தேடினப்போ, ஷாலின் கோவிலின் வலைத்தளத்திலிருந்து நம்ம அருமை விக்கிப்பீடியா வரை பல விஷயங்கள் சுவாரஸியமாவே சொல்லப்பட்டிருக்கு. விருப்பமிருந்தா, நேரமிருந்தா நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

இயக்குனர் முருகதாஸின் இந்த உரையாடலின் மூலம் எனக்கு நான் பார்த்த முதல் ஆங்கிலப் படமான ‘The 36th Chamber of Shaolin’ நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில் சான் தே என்ற மாணவன் (வேற யாரு? நம்ம ஹீரோதான்!) அந்த நாட்டின் ‘மன்சு’ அரசை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியதால, அவருடைய குடும்பத்தாரையும், நண்பர்களையும் இழந்துடறார். அரசைப் பழி வாங்கிட தான் ‘குங் ஃபூ’ கற்க வேண்டும் என்று முடிவுக்கு வந்து, சீனாவில் உள்ள ஷாலின் கோவிலுக்கு போறாரு. ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டாலும், பிறகு கோவிலின் தலைமை குருவின் அனுமதியுடன் அந்த கோவிலில் ‘குங் ஃபூ’ பயில ஆரம்பிக்கிறாராம் நம்ம ஹீரோ. இந்தப் படத்திலே நான் ரசிச்ச விஷயம் என்னன்னா… இந்த ஷாலின் கோவிலில் குங்ஃபூ என்கிற தற்காப்புக் கலையை கத்துக் குடுக்கிறது மட்டுமில்லாம அங்கிருக்கும் 35 அறைகளின் மூலம் அவங்களை உடல் அளவிலும் மனதளவிலும் தயார் செய்வது மாதிரியும் படம் பிடிச்சிருந்தது நல்லாவேயிருந்தது. அந்த அறைகளிலே என்னை மிகவும் கவர்ந்தது, நீளமான இரு உலைகளுக்கிடையே மாணவன் நிற்கும் போது, எதிரில் இருக்கும் மிகப்பெரிய பெண்டுலத்தின் இயக்கத்திற்கேற்ப கண்களை மட்டும் அசைக்க வேண்டும். கண்களை தவிர முகத்தில் ஒரு சின்ன அசைவு ஏற்பட்டாலும் உலைகளிலின் தயவுல சூடு நிச்சயம். அங்கே இருக்கும் 35 அறைகளிலேயும் மற்ற மாணவர்களைக் காட்டிலும் விரைவாகவே பயிற்சி பெற்று தேர்ச்சியடைந்து அரசை பழிவாங்கறார் சான் தே. அது மட்டுமில்லாம தன்னைப் போன்ற சாதாரணமானவர்களும் எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில ஒரு புதுபாணியை 36வது அறையில் அறிமுகப்படுத்துவதோடு படம் முடிவடையிது. எல்லாமே கிடைக்கும் நம்ம யூடியூபில் இது முழுநீளவே கிடைக்குது. விருப்பமிருந்து பார்த்துட்டு சொல்லுங்க படம் எப்படியிருக்குன்னு!

அரசின் கேபிளின் தயவால தினம் ஒரு சேனலைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்குது. என்ன குழப்பமாயிருக்கா? இருங்க தெளிவாச் சொல்றேன். அரசு கேபிள் நடைமுறைப்படுத்தறதுக்கு முன்னாடி தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், விளையாட்டு, செய்தி போன்ற சேனல்களையெல்லாம் தனித் தனியா வரிசைப்படுத்தி வச்சிருந்தேன். அரசு கேபிள் நடைமுறைக்கு வந்தப்புறம் ஒரு நாள்கூட ஒரு சேனலும் சரியா ஒளிபரப்பில் இருக்கிறதில்ல. எந்த சேனல் எந்த எண்ணில வருதுன்னு தேடிக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே போதுமடா சாமிங்கிற எண்ணம் வந்துடுது. உள்ளாட்சி தேர்தல் முடிந்தப்புறம்தான் இதுக்கு முடிவு தெரியும்னு கேபிள் ஆபரேட்டரும் கையை விரிச்சுட்டாரு. அதனால நானும் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஒரு குட்டி தேடலுக்குப்புறம், சுவாரஸியமான விஷயங்கள் எந்தச் சேனலில் வருதோ அதைப் பார்க்கிறது. அந்த மாதிரி முடிவு செய்ததுக்கபுறம் நான் பார்த்த நிகழ்ச்சி தேசிய புவியியல் (National Geographic) சேனலில் வரும் ‘Don’t Tell My Mother’. Diego Buuel என்கிறவர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறார்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கும் Depilex அழகு நிலையம் ரொம்பவே புகழ்பெற்றது. இங்கு பணி புரியும் 132 பெண்களும் இன்னிக்கு சிறந்த அழகியல் வல்லுனர்களாக இருக்காங்க. அதுக்குக் காரணம் Depilex அழகு நிலையம்தான். அந்த நிறுவனமே அவங்களை பல்வேறு நாடுகளுக்கும் அழகுக் கலைப் பயிற்சிக்காக அனுப்பியிருக்காங்க. எதுக்காக இந்த அழகு நிலையத்தின் நிறுவனர் மஸரத் மிஸ்பா அந்த 132 பெண்களுக்கு மட்டும் உதவணும் அப்படீங்கிற கேள்வி உங்களுக்கு வருதில்லையா? சில வருஷங்களுக்கு முன்னால் புர்கா அணிந்த ஒரு பெண் இவங்ககிட்டே வேலை கேட்டு வந்திருந்தாங்களாம். அவங்க அந்தப் பெண்ணுக்கு வேலை தருவதாக முடிவான பிறகுதான் அந்தப் பெண்ணுடைய முகம் ஆஸிட் தாக்குதலுக்கு உள்ளானது தெரிய வந்துதாம். அதன்பிறகுதான் மஸரத் மிஸ்பா இது போன்ற பெண்களுக்கு உதவுவதுன்னு முடிவு செய்தாங்களாம். அந்தப் பெண்களுக்கான மருத்துவச் செலவிலிருந்து அவர்களுடைய பயிற்சி செலவு வரை எல்லாம் இவருடைய நிறுவனமே பார்த்துக்கொள்கிறதாம். நல்ல விஷயங்கள் எங்கே நடந்தாலும் பாராட்டலாம்.. தப்பில்லைன்னு எனக்குத் தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க?

சரி… கடைசி கட்டி மாம்பழத்துக்கு வருவோம். பாடகர்கள் தாங்கள் பாடும் பாடல்களிலே இது தன்னுடைய அம்மாவிற்குப் பிடிக்கும் / குருவிற்குப் பிடிக்கும் / நண்பர்களுக்குப் பிடிக்கும் அப்படீன்னு சொல்லி கேட்டிருக்கோம். சில சமயங்கள்லே சில பாடல்களை சிலருக்கு சமர்பிக்கிறதா சொல்லுவாங்க. ஆனா இந்த சின்னப் பசங்க எல்லாம் யாருக்காக, எதுக்காக இந்த பாட்டுப் பாடறாங்கன்னு கடைசி வரைக்கும் எனக்குப் புரியவேயில்லை. அதைவிட ஆச்சர்யமான விஷயம் என்னன்னா… எப்படித்தான் சிரிக்காம பாடினாங்களோ? தெரியலை!!

http://www.forwardedemails.com/2416-video-meow-meow

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

2 Comments

  1. கீதா

    மழை அருகிவரும் இந்தக் காலத்தில் மரங்களை வளர்க்க முனையாமல் இருக்கும் மரங்களையும் வெட்டுவது வேதனைக்குரியது. யஷ், நீங்க சொன்னதைக் கேட்டதும், சில வாரங்களுக்குமுன் நிலாசாரலில் வந்த சோமா அவர்களின் ஆலமரம் கவிதைதான் நினைவுக்கு வந்தது. மரங்களுக்கும் கருணை காட்டாத மனிதர்களுக்கு மத்தியில் பாவப்பட்ட பெண்களுக்கு கருணை காட்டும் மஸரத் மிஸ்பா மிகவும் பாராட்டுக்குரியவர்தான். சந்தேகமே இல்லை. அப்புறம் அந்த மியாவ் பாட்டு… சூப்பர்.

  2. maleek

    மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டு
    நிமிர்ந்து நிற்கிறது
    பென்சில்”__ எப்பவோ படித்தது.”

Comments are closed.