சாதனாவின் வீட்டு ஹாலில் அஸிஸ்ட்டன்ட் கமிஷனர் ஹில்பர்ட், இன்ஸ்பெக்டர் பாஷா மற்றும் காவலர்கள் ஆஜராயிருந்தனர். எல்லாம் தோஸ்துகள் தான். டீ தோஸ்த், சிகரெட் தோஸ்த், பிரியாணி தோஸ்த்.
குழந்தை அனுராதா கலவரம் தோய்ந்த முகத்துடன் ஒரு மூலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. விக்ரமும் கிஷோரும் போலீஸோடு தனித்தனியாய் சம்பாஷணையில் இருந்தார்கள்.
மதுவும் நானும் உள்ளே நுழைந்ததும் விக்ரம் என்னைப் புதிராயும் எதிரியாயும் பார்த்தான்.
குழந்தையை நான் விசாரிக்க ஏஸியிடம் அனுமதி கோரினேன்.
"எத்தனையோ தடவ விசாரிச்சாச்சு" என்று பாஷா ஒப்புக்கு ஆட்சேபித்தார். அவரை மீறி எனக்கு அனுமதி கொடுத்து ஏஸி தன்னுடைய ஆளுமையை நிலை நாட்டினார்.
பீதியிலிருந்த குழந்தை தயங்கித் தயங்கிப் பேசியது.
"டாடி எனக்கு ஒரு ட்டாய் கன் வாங்கிக் குடுத்தாங்க அங்க்கிள். என்னோட டெடிபேரும் நானும் அந்த கன்ன வச்சு வெளயாடிட்டிருந்தோம். மம்மி அந்த ஸோஃபால ஒக்காந்து புக் படிச்சிட்டிருந்தாங்க. மம்மி, டெடி பேருக்கும் எனக்கும் பசிக்குது மம்மின்னு நா சொன்னேன். மம்மி சொன்னாங்க, ஒன் டெடிபேரும் நீயும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, நா இந்த புக்க முடிச்சிட்டு வர்றேன். அப்டின்னு சொன்னாங்க. இப்ப ஒடனே நீங்க தரலன்னா நாங்க ஒங்கள ஷூட் பண்ணிருவோம்னு நா சொன்னேன். சீ போடின்னு சிரிச்சிட்டு மம்மி புக் படிச்சிட்டிருந்தாங்க. நா ஷூட் பண்ணேன். மம்மி நெத்தில புல்லட் பட்டுச்சு. மம்மி அப்படியே ஸோஃபால பின்னால சாஞ்சுட்டாங்க. எனக்கு பயம்மாயிருந்தது அங்க்கிள். அப்பறந்தான் டாடி வந்தாங்க. போலீஸ்காரங்க வந்தாங்க. அது ட்டாய் கன் இல்லியாம். டாடியோட நிஜத் துப்பாக்கியாம். எங்கையில ரேகை எடுத்தாங்க. மம்மிய ஹாஸ்பிடலுக்குக் கொண்டுபோயிருக்காங்க. மம்மி எப்ப வருவாங்க அங்க்கிள்?"
அந்தத் தாயில்லாக் குழந்தையைப் பார்க்கப் பாவமாயிருந்தது.
இது தனக்குப் பிறந்த குழந்தையில்லையென்று விக்ரம், இதையும் ஒரு வழி பண்ணிவிட சதித்திட்டம் தீட்டியிருக்கிறான். கிஷோர் சொன்ன மாதிரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். ஆனால், கிஷோருக்குப் புலப்படாத ஒரு விஷயம் என்னுடைய துப்பறியும் மூளைக்கு எட்டியது.
குழந்தை அனுராதாவின் கையில் விளையாட்டுத் துப்பாக்கியைக் கொடுத்தேன்.
"பாப்பா, மம்மிய நீ ஷூட் பண்ணப்ப நீ எங்கயிருந்த?"
"நானும் என்னோட டெடிபேரும்."
"அதான். நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்தீங்க?"
அனுராதா பொஸிஷனுக்கு வந்தாள்.
"இந்த டீப்பாய் பக்கத்துலதான் ரெண்டு பேரும் ஒக்காந்து வெளயாண்டுட்டிருந்தோம் அங்கிள். டீப்பாய் மேல கன் இருந்தது. நா அத எடுத்து, நின்னுக்கிட்டு மம்மிய ஷூட் பண்ணேன். மம்மி அந்த ஸோஃபால இருந்தாங்க."
மதுபாலாவின் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து புஸ்தகம் வாசிக்கிற மாதிரி ஸோஃபாவில் அமரச் செய்தேன்.
"இப்டித்தான் மம்மி ஒக்காந்திருந்தாங்க" என்று உறுதி செய்தது குழந்தை.
இன்ஸ்பெக்டர் பாஷா முணுமுணுத்தார். "நீங்க ஏன் நடுவுல புகுந்து குட்டயக் கொழப்பறீங்க பாண்டியன். கொழந்தயோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் மாட்ச் ஆகுது, புல்லட் மாட்ச் ஆகுது. விக்ரம் அஜாக்கிரதையா விட்டுப்போன துப்பாக்கி கொழந்த கையில மாட்டிக்கிச்ச, அம்மா கத முடிஞ்சி போச்சு, அவ்ளோ தான் மேட்டர்."
நான் பாஷாவிடம் என் கேள்வியை வைத்தேன். "அது எப்படி சார் இந்தக் கொழந்த குறிபாத்து நடு நெத்தியில சுட முடியும்?"
பாஷா சர்வ அலட்சியமாய் பதில் சொன்னார். "நடு நெத்தி இல்ல பாண்டியன். இடது பக்க நெத்தி."
"அப்படி வாங்க வழிக்கி" என்று நான் பாய்ன்ட்டைப் பிடித்தேன்.
"கொழந்த ஸோஃபாவுக்கு வலது பக்கம் நிக்கிது. இந்த பொஸிஷன்லயிருந்து ஷூட் பண்ணா, புல்லட் நெத்தியில வலது பக்கம்தான் பாயும். இடது பக்க நெத்தியில புல்லட் பாயச் சான்ஸே இல்ல."
ஏஸி சுவாரஸ்யமானார். "பாண்டியன், நீங்க என்ன சொல்றீங்க?"
"விளையாட்டுத் துப்பாக்கி இருந்த எடத்துல நெஜத் துப்பாக்கி வந்தது. தற்செயலோ, அஜாக்கிரதையாலேயோ இல்ல, அது திட்டமிட்டுச் செய்யப்பட்டது."
"இருக்கலாம், ஆனா தான் தான் சுட்டதாக் கொழந்த சொல்லுதே பாண்டியன்?"
"கொழந்த ட்ரிகர அழுத்தியிருக்கலாம். புல்லட் எங்கேயாவது சுவர்ல பட்டுத் தெறிச்சிருக்கலாம், இல்லாட்டி ஸோஃபாக்குள்ள போயிருக்கலாம்."
"அப்ப விக்ட்டிம்மோட நெத்தியில இருந்த புல்லட்?"
"வேற ஒரு இதே மாடல் துப்பாக்கியால இடது பக்கம் மறைவா இருந்து வேற ஒருத்தர் ஷூட் பண்ணியிருக்கார்."
"வேற ஒருத்தர்ன்னா?"
"இந்தத் துப்பாக்கியோட சொந்தக்காரர்தான். இதே மாடல் துப்பாக்கி அவர் ரெண்டு வாங்கியிருக்கார்."
"இல்லியே ரிஸீப்ட்டக் காட்டினாரே விக்ரம், ஒண்ணுதான வாங்கியிருக்கார்!"
"ரெண்டு துப்பாக்கிக்கி ரெண்டு ரிஸீட் வாங்கியிருக்கலாம். இல்லாட்டி, வேற வேற சந்தர்ப்பத்துல வாங்கியிருக்கலாம்."
ஏ.ஸி. யோசனையிலாழ்ந்தார்.
நான் தொடர்ந்தேன்.
"கொழந்தயோட விளையாட்டுத் துப்பாக்கி இருந்த எடத்துல, கொழந்தயோட கண்ணுல படற மாதிரி, கைக்கு எட்ற மாதிரி ஒரு நிஜத்துப்பாக்கிய ரெடி பண்ணி வச்சிட்டான் விக்ரம். கொழந்த ட்ரிகர அமுக்கினா அம்மா க்ளோஸ். இருந்தாலும் அது மிஸ்ஃ பயர் ஆயிருச்சின்னா என்ன பண்றதுன்னு எச்சரிக்கையா தானும் இன்னொரு துப்பாக்கியோட மறஞ்சிருந்திருக்கான். அவன் பயந்த மாதிரியே கொழந்த சுட்டது மிஸ்ஃபயர் ஆயிருச்சு. இவன் வேலய முடிச்சிட்டான். கொழந்த தான் தான் சுட்டேன்னு கன்ஃபஸ் பண்ணும்னு விக்ரமுக்குத் தெரியும்."
"யூ ஆர் ரைட் பாண்டியன்!"
அங்கேயிருந்து மெல்ல நழுவ யத்தனித்த விக்ரமை பாஷாவும், ரெண்டு காவலர்களும் ஒரே அமுக்காய் அமுக்கிப் பிடித்தார்கள்.
குழந்தையை நோக்கிக் கிஷோர் ஓடினான்.
"அனு, என் அனு. என்னோட கொழந்த!" என்று அதை வாரியெடுத்துக் கொண்டு முத்த மழை பொழிந்தான்.
இன்னும் ஸோஃபாவில் ஜம்மென்று உட்கார்ந்திருந்த மதுபாலாவைப் பார்த்து நான் கண்ணடித்ததை ஆமோதித்து அவள் அழகாய்ச் சிரித்தாள்.
அந்தக் கோணத்தில் அவளுடைய அங்க லட்சணங்களை அவதானித்தபோது, வளைவுகளைப் பற்றிக் கிஷோர் சொன்ன ஆங்கில வாக்கியம் நினைவுக்கு வந்தது.
(குங்குமம், 14.11.2003)