பிறகு ஜான்ஸன், ஆச்சர்யத்துக்கு சொல் வடிவம் கொடுத்தான்.
"ஒங்கள திருச்சில விட்டுட்டு கராச்சீல ஒங்க புருஷன் முப்பத்தாறு வருஷமா என்ன பண்ணிட்டிருக்கார் பெரியம்மா?"
"அவர் கராச்சில தான் இருக்காரோ வேற எந்த ஊர்ல இருக்காரோ, நா போய்த்தான் தேடணும் தம்பி" என்று ஆச்சர்யத்தின் நீள அகலங்களை இன்னுங் கொஞ்சம் பெரிதாக்கினாள் பாக்யலட்சுமியம்மா.
"ஹ்ம், அது ஒரு பெரிய சோகக் கத தம்பி" என்று தொடர்ந்து அந்த அம்மா சொன்னதையடுத்து, நாங்கள் ரெண்டு பேரும் கதை கேட்க சுவாரஸ்யமானோம்.
"அவர் மிலிட்டரில இருந்தார் தம்பி" என்று கதை ஆரம்பமானது.
"எழுபத்தியொண்ணாம் வருஷம் பங்களாதேச வெவகாரத்துல இந்தியா பாக்கிஸ்தான் சண்ட வந்துச்சே, அப்பத்தான் கடைசியா நா அவரப் பாத்தது. சண்டையில பாக்கிஸ்தான் காரங்க இவரக் கைதியாக் கொண்டு போய்ட்டாங்கன்னு சொன்னாங்க. இவரோட கைது பண்ணிட்டுப் போன பல பேர் விடுதலையாகி வந்துட்டாங்க. ஆனா இவர் மட்டும் வரவேயில்ல."
கண்ணீரில் தோய்ந்த ஓர் ஆழமான பெருமூச்சுக்குப் பின்னால், சோகக்கதை தொடர்ந்தது.
"நம்ம டில்லி அரசாங்கத்துக்கு நா லெட்டர் மேல லெட்டர் போட்டேன். ஒம் புருஷன் எந்த ஊர் ஜெயில்ல இருக்கார்ன்னு விசாரிச்சிட்டிருக்கோம்னுதான் பதில் வந்துச்சு. முப்பத்தாறு வருஷமா விசாரிக்கிறாங்க! அப்பறம், துணிஞ்சி பாக்கிஸ்தான் கவர்மெண்ட்டுக்கே எழுதிப் போட்டேன். பத்து நாளக்கி முன்னால தான் பதில் வந்துச்சு. நீயே வந்து தேடிப்பாத்துக் கன்னு பதில் வந்துருக்கு. அதோட, அவங்க நாட்டுக்கு வர்றதுக்கு அனுமதிக் கடிதமும் அனுப்பியிருக்காங்க. நா போய் அவர் எந்த ஊர்ல இருந்தாலும் தேடிப்புடிச்சிக் கையோட கூட்டிக்கிட்டு வந்துருவேன். தம்பி, நீங்க மட்டும் எனக்கு ஒத்தாச பண்ணுங்க தம்பி. பெரிய மனசு பண்ணுங்க தம்பி."
ஜான்ஸன் தலையைச் சொறிந்தான். "இந்த சமாச்சாரமெல்லாம் நீங்க ஃபோன்ல சொல்லவேயில்லியே பெரியம்மா…. இப்ப டிக்கட் கையவுட்டுப் போயிருச்சே…."
"அப்படிச் சொல்லாதீங்க தம்பி. அந்த டிக்கட் எடுத்தவங்க விலாசத்தக் குடுங்க. இந்தியாவுல அவங்க எங்க இருந்தாலும் தேடிப்புடிச்சி அவங்க கால்ல விழுந்து டிக்கட்ட நா மாத்தி வாங்கிக்கிறேன். விலாசத்தக் குடுங்க தம்பி."
ஜான்ஸன் சங்கடமாய் என்னைப் பார்த்தான். அந்தத் தாயின் சோகக்கதையில் அவன் நெகிழ்ந்து போனதும், எப்படி உதவுவது என்று புரியாமல் தவிப்பதும் தெரிந்தது.
"ஜான்ஸன், இந்த அம்மாட்ட நா ஒரு கேள்வி கேக்கட்டுமா" என்று அவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தயக்கத்தோடு என் கேள்வியை முன் வைத்தேன்.
"பெரியம்மா… வந்து… முப்பத்தாறு வருஷம் ஆயிருச்சே, ஒங்க புருஷன் பாக்கிஸ்தான்ல உயிரோட இருப்பார்னு நம்பிக்கை இருக்கா?"
"அப்படியெல்லாம் அசம்பாவிதமாப் பேசாதீங்க தம்பி" என்று திரும்பவும் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
"என்ன வுட்டுட்டு அவர் போகவே மாட்டார். நாந்தான் அவருக்கு முந்தி பூவும் பொட்டுமா போய்ச் சேருவேன். அவர் கட்ன தாலி என் கழுத்துல கெடக்கு. அந்தத் தாலியோட பெலம் ஒங்களுக்குத் தெரியாது தம்பி. ஒங்கள மாதிரியே தான் எங்க ஊர்ல ரெண்டு மூணு பேர் சந்தேகப்பட்டாங்க. சாமிக்கு முன்னால பூப்போட்டுப் பாக்கச் சொன்னாங்க. அதையும் பாத்தாச்சு. அவர் மகாராசனா இருக்கார். நாம் போய்த்தான் அவரக் கூட்டிக்கிட்டு வரணும்."
"போர்க் கைதியாப் போன ஒருத்தர, வெளிநாட்ல போய் என்னமாத் தேடிக் கண்டுபிடிப்பீங்க பெரியம்மா?"
"கண்டு பிடிச்சிருவேன் ராசா, கண்டு பிடிச்சிருவேன். சாமி தொணையோட கண்டு பிடிச்சிருவேன்."
அந்தத் தாயின் நம்பிக்கையும் உறுதியும் எனக்குள்ளேயும் ஒரு உறுதிக்கு வித்திடுவதை உணர்ந்தேன்.
"சாமி மட்டுமில்ல பெரியம்மா. நானும் ஒங்களுக்குத் தொணையா இருக்கேன்" என்றேன்.
நான் என்ன சொல்கிறேன் என்று புரியாமல் அந்தத் தாயும், ஏதோ அரைகுறையாய்ப் புரிந்த குழப்பத்தில் ஜான்ஸனும் என்னைப் புதிராய்ப் பார்க்க, நான் புதிரை அவிழ்த்தேன்.
"ஜான்ஸன், எங்க அம்மாவுக்கு டிக்கட் எடுக்க வேண்டாம்."
"அப்ப…. நீ…. புனிதப் பயணம் போகலியா?"
"போறேன். எங்க அம்மாவோட இல்ல. இந்த அம்மாவோட. இது கூட ஒரு புனிதப் பயணம்தான்."
"யூ ஆர் கிரேட் டா" என்று நெகிழ்ந்து போன ஜான்ஸன், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த பாக்யலட்சுமியம்மாவுக்கு விளக்கினான்.
"பெரியம்மா, இவன் என்னோட ஃப்ரண்ட். ஒங்க டிக்கட்டுக்கு வேற பாஸஞ்சர் வந்தாச்சுன்னு சொன்னேனே, அது இவனும் இவங்கம்மாவுந்தான். இவங்கம்மாவ இங்கேயே விட்டுட்டு, ஒங்களுக்குத் தொணையா பாக்கிஸ்தான் வர்றேன்னு சொல்றான்."
"அப்படியா, ரொம்ப சந்தோஷம் தம்பி. ரொம்ப ரொம்ப சந்தோஷம்" என்று பூரித்துப் போன பாக்யலட்சுமியம்மா என்னிடம் ஒரு சந்தேகங் கேட்டாள்.
"ஆனா தம்பி, ஒங்கம்மா இதுக்கு ஒத்துக்குவாங்களா?"
ஒரு புன்னகையோடு அந்த சந்தேகத்தை நான் போக்கினேன். "நிச்சயமா ஒத்துக்குவாங்க பெரியம்மா. உலகம் பூரா அம்மாக்கள் ஒரே மாதிரிதான் இருக்காங்க பெரியம்மா."
ஜான்ஸன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"இந்தப் பெரியம்மாவ நா எங்க வூட்டுக்குக் கூட்டிட்டுப் போறேண்டா" என்றேன் அவனிடம்.
"அம்மா பாத்தா சந்தோஷப்படுவாங்க. எங்க ரெண்டு பேருக்கும் டிக்கட், விஸா ஃபீஸ் எல்லாம் எவ்வளவு ஆகுதுன்னு பாத்துச் சொல்லு, பணம் தர்றேன்.’
நான் பான்ட் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்த என்னுடைய வாலட்டைப் பிடுங்கி, ஜான்ஸன் என்னுடைய சட்டைப் பையில் திணித்தபடி, "நீ பெரிய சுயநலக்காரண்டா" என்றான்.
"இந்தப் புனிதப் பயணத்துல எல்லா புண்ணியத்தையும் நீ ஒருத்தனே தட்டிட்டுப் போயிரலாம்னு பாக்கற. அத நா அலவ் பண்ண மாட்டேன். ஒங்க ரெண்டு பேருக்கும் டிக்கட் செலவு, விஸா ஃபீஸ் எல்லாம் என்னுது."
ஜான்ஸன் அடித்த அதிரடியில் அசந்து போய், அவன் என்னைக் குறித்துச் சொன்ன வார்த்தைகளை மெருகூட்டித் திருப்பிச் சொன்னேன்.
"ஜான்சன், யூ ஆர் தி கிரேட்டஸ்ட்."
எங்கள் ரெண்டு பேரையும் நோக்கிக் கரங்கூப்பினாள் பாக்கியலட்சுமியம்மா. "நீங்க ரெண்டு பேரும் எனக்குப் புள்ளைங்க மாதிரியிருக்கீங்க ராசா. எனக்குப் புள்ளை இல்லங்கற கொறை இன்னியோட தீந்து போச்சு. நீங்க நல்லாயிருக்கணும்யா. ஆமா தம்பி, ஒங்களுக்குப் பாக்கிஸ்தான் பாஷை தெரியுமா?"
"என்ன அப்படிக் கேட்டுட்டீங்க பெரியம்மா. இவன் ஒரு உர்து ஸ்பீக்கிங் முஸ்லிமாக்கும்!"
"பெரியம்மாட்ட பொய் சொல்லாத ஜான்ஸா."
"புனிதப் பயணத்துக்காகப் பொய் சொன்னா தப்பில்லடா."
ரெண்டு பேரும் சிரித்தோம்.
பாக்யலட்சுமியம்மா சிரிக்கவில்லை. அவள் தன்னுடைய சிரிப்பைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள், கணவனுடன் பகிர்ந்து கொள்வதற்காக. நம்பிக்கைகளோடும், கனவுகளோடும்.
(கல்கி, 19.08.2007)
Superb story.