நாமும் கதையை முடித்தோம்!
பணியாட்கள் ஏன்? துச்சாதனனே இந்தப் பணியில் இறங்குகிறான். "அச்சோ, தேவர்களே!" என்று அலறி விதுரன் மயங்கி வீழ்கிறான். திரெளபதி "Inner Self" உடன் ஒன்றிப் போய் உலகை மறந்து நிற்கிறாள் "ஹரி, ஹரி, ஹரி" என்கிறாள். "கண்ணா, அபயம் அபயம், அபயம் எனக்கு" என்கிறாள். கண்ணனின் புகழை எல்லாம், மெய்மறந்து பாடுகிறாள்
நிறைவாக அவள்,
வையகம் காத்திடுவாய்!கண்ணா!
மணிவண்ணா! என் மனச்சுடரே!
ஐய நின்பத மலரே-சரண்
ஹரி,ஹரி,ஹரி-என்றாள்!
என்ன ஆயிற்று அந்தக் கணமே?
கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வண்ணப் பொற் சேலைகளாம் – அவை வளர்ந்தன, வளர்ந்தன வளர்ந்தனவே!
எது போல?
பொய்யர் தம் துயரினைப் போல்! தையலர் கருணையைப் போல்! பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்தப் பெரு மக்கள் செல்வத்திற் பெருகுதல் போல்!
துன்னிய துகிற் கூட்டம் கண்டு தொழும்ப துச்சாதனன் வீழ்ந்து விட்டான்!
தேவர்கள் பூச்சொரிந்தார்! –ஓம்
ஜெய ஜெய பாரத சக்தி என்றே!
ஆவலோடெழுந்து நின்று-முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்!
சாவடி மறவர் எல்லாம் –ஓம்
சக்தி சக்தி சக்தி என்று கரம் குவித்தார்
காவலின் நெறி பிழைத்தான் -கொடி
கடி அரவு உடையவன் தலை கவிழ்ந்தான்!
பீமன் துரியோதனனையும் துச்சாததனனையும் பழி வாங்கச் சபதம் செய்கிறான்.
அர்ச்சுனன் சபதம் இது:
பார்த்தன் எழுந்துரை செய்வான் – இந்தப்
பாதகக் கன்னனைப் போரில் மடிப்பேன்,
தீர்த்தன் பெரும்புகழ் விஷ்ணு- எங்கள்
சீரிய நண்பன் கண்ணன் கழல் ஆணை;
கார்த்தடங்கண்ணி எம் தேவி-அவள்
கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை;
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய்-ஹே!
பூதலமே அந்தப் போதினில் என்றான்!
பாஞ்சாலியின் சபதம் இது:
தேவி திரெளபதி சொல்வாள்-ஓ
தேவி பராசக்தி ஆணை உரைத்தேன்
பாவி துச்சாதனன் செந்நீர்-அந்தப்
பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம்,
மேவி இரண்டும் கலந்து-குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் –இது
செய்யுமுன்னே முடியேன் என்று உரைத்தாள்!
பாரதி, காவியத்தை இவ்வாறு நிறைவு செய்கிறான்:
ஓமென்றுரைத்தனர் தேவர்-ஓம்
ஓமென்று உறுமிற்று வானம்!
பூமி அதிர்ச்சி உண்டாச்சு-விண்ணை
பூழிப் படுத்தியதாம் சுழற்காற்று
சாமி தருமன் புவிக்கே-என்று
சாட்சி உரைத்தன பூதங்கள் ஐந்தும்
நாமும் கதையை முடித்தோம்-இந்த
நானிலம் முற்றும் நல் இன்பத்தில் வாழ்க!
பின்னுரை: அருச்சுனன் பாஞ்சாலிக்கு நிகழ்ந்த கொடுமை கண்டு சினந்து சீறினான். பழி வாங்குவதாக சபதம் செய்தான். எதன் மீது? கண்ணன் கழல் மீது; மற்றும் காண்டிவத்தின் மீது. போர்த்தொழில் விந்தைகளை இந்தப் பூதலமே காணும் என்று உறுதிபட உரைத்தான். இந்த உறுதியெல்லாம் போர்க்களம் புகுந்ததும் என்ன ஆயிற்று? எந்தக் காண்டிவத்தின் மீது ஆணையிட்டானோ, அதுவே கை நழுவிப் போக, போரிட மாட்டேன் என்று கலங்கி நிற்க, யார் மீது ஆணையிட்டானோ அந்தக் கண்ணனே அவனுக்கு தர்மத்தையும் கடமையையும் உபதேசிக்க.. இதில் "வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க யாதேனும் சற்றே இடம்" இருக்கிறதோ?
(நிறைவுற்றது)
பாஞ்சாலி சபதத்தின் முக்கியமான காட்சிகளை விளக்கிய நிறைவான கட்டுரை.
I have been following this for all these weeks. It is really great.