ஒரு மிகை யதார்த்தக் காலக்கட்டம் (1)

மலையில் இருந்து இறங்கி வந்தான் அவன். வயது 50. குதிரைவாலாட்டம் பின்முடிக் குஞ்சம், தாடி. நல்ல உயரம். திடகாத்திரம். அவன் முதுகில் ஒரு மூட்டை. கூட ஒரு உக்கிரமான பெரிய பழுப்பு நாய்.

குண்டுவெடிப்புகள் கேட்டபடியிருந்தன. அதைச் சட்டை செய்யாமல் கிளம்பியிருந்தான். மலையின் அந்தப் பக்கம் அவன் போனதே கிடையாது. இப்போ, இந்தச் சமயம் அங்கே தனியாய்ப் போகிறாயா, வேண்டாம் என்று நிறையப்பேர் அவனை எச்சரித்தார்கள். ஒரு சிலர் அவனோடு துணைக்கு வரவும் முன்வந்தபோது புன்னகையுடன் மறுதலித்து விட்டான்.

"பாரப்பா! யுத்தம்ன்றது நம்ம வாழ்வின் ஓர் அங்கமா ஆயிட்டது. எது எப்படின்னாலும் கவலைப்படாதீங்க! எனக்கு அங்கே தெரிஞ்சாட்கள் உண்டு" என்றான் அவன்.

பாதுகாப்பில்லாத அந்த இடம் வரை இப்போது அவன் கிளம்பிப் போகவேண்டிய காரணம் என்ன?… அவன் சிரித்து, வேடிக்கைபோலப் பேசினான். ஆ! அது ஒரு ரகசியக் காரியம்!

அவன் போகும் பகுதியில், மலைவாழ் மக்களின் ஒரு பிரிவுக்கும் மற்ற பிரிவுக்குமாய் வகுப்பு மோதல்களும், நாட்டுப் படைகளுக்கு எதிரான கலவரங்களும் அடிக்கடி நிகழவே செய்கின்றன. என்றாலும் அவன் போயாக வேண்டும்.

சமவெளியை அடைந்ததும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து காலை நீட்டிக்கொண்டான். கடுமையான பயணம்தான். காலை ஆறு மணிக்குக் கிளம்பியது, மலையிறங்கி வர மூணு மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. அந்த நாயும் அவன் அருகிலேயே படுத்துக்கொண்டது. பழைய நினைவுகளின் அலைபுரட்டலுடன் திரும்பி மலையைப் பார்த்தான். சிறிது தண்ணீர் குடித்தான். நாய்க்கு பிஸ்கெட்டுகளை எடுத்துப்போட்டுவிட்டு, ஒரு புத்தகத்தை வெளியே எடுத்துச் சிறிது வாசித்தான். சில வரிகளைக் கூட வாசிக்க முடியவில்லை. களைப்பாய் இருந்தான். மரத்திண்டில் அப்படியே சாய்ந்தபடிக் கண்ணை மூடிக்கொண்டான். எங்கோ குண்டுகள் வெடிக்கும் சத்தத்தில் திரும்பக் கண்ணைத் திறந்தபோது, எதிரே ஒரு இளம் பெண். வயது இருபத்தைந்து இருக்கலாம். சைக்கிளில் வந்திருந்தாள். அவன் பக்கமாய்க் காலை ஊன்றி அவனையே வெறித்தபடியிருந்தாள். புன்னகைத்தான். "குழந்தே! இந்தப் பக்கம், தங்க விடுதி எதுவும் இருக்கா?"

பிரியமான அந்தக் குரல்… பரிவான பார்வை… அவள் யோசித்தாள். கைக்கடிகாரத்தை ஒருதரம் பார்த்துக்கொண்டாள். "எங்கருந்து வர்றீங்க நீங்க?"

புன்னகையுடன் அவன் தனக்குப் பின்னால் மலையைக் காட்டினான்.

"மலைக்கு அந்தப் பககத்து மனுசர்கள் ரொம்ப நல்லவங்க, அப்டின்னு எங்க அம்மா சொல்லுவாள்." அவனது மூட்டையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டாள். "வாங்க!"

பாம்பு போல் வளைந்து நெளிந்து போன பாதை சகதியாய்க் கிடந்தது. அதிக சனம் இல்லாத ஊரின் மக்கள் அவனைப் புருவத்தூக்கலுடன் பார்த்தார்கள். நம்ம பேட்டையில் இன்னொரு சக ஜீவனா எனத் தெரு நாய்கள் சில இவனது நாயைப் பார்த்துக் குரைத்தன. அந்த ஊர் அவனுக்குப் பிடித்திருந்தது. லேசாய், என்னவோ கிராமிய மெட்டு வாயில். ஒரு வீட்டின் முன்னால் அவள் நின்றாள்.

ஒரு காலத்தில், பார்த்துப் பார்த்து அருமையாய்க் கட்டியிருப்பார்கள். இப்போது காலத்தாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் சோபையிழந்திருந்தது அந்த வீடு. வெளி முற்றமே கூடப் புதர் மண்டி, உயரமாய்க் காட்டுச் செடிகள் மறைத்துக் கிடந்தது. அவள் கதவைத் திறந்தாள். வெளியே பார்க்க, உள்ளே பரவாயில்லை என்றாலும் சுத்தம் இல்லை. விறுவிறுவென்று அவனை எல்லா அறைகளுக்கும் அழைத்துக் காட்டினாள் அவள். குளியல் அறை, சமையல் அறை, கூடம், சாப்பாட்டு அறை, படுக்கை அறைகள், உக்கிராணம்… இத்தியாதி.

"இது உங்க வீடு. வசதி பண்ணிக்கிடுங்க! நான் மதியம்தான் வருவேன்…" சொன்னபடியே வெளியேறி, சைக்கிளில் ஏறிப் போய்விட்டாள்.

******

வீடே ஒரே குப்பைக் கூளமாய், முடை நெடியடித்துக் கிடந்தது. ஜன்னல்களை மறைத்தவாக்கில் இருந்த அலமாரிகளை நகர்த்திச் சன்னல்களைத் திறந்துவிட முயன்றான். சூரிய வெளிச்சத்தில், வீடெங்கும் தொங்கும் சிலந்தி வலைகள் கண்ணில் பட்டன. சமையல் கூடத்தில், நிறைய பயன்படுத்தப்படாமலேயே வீணாய்ப்போன சாமான்கள். அழுக்காய்ப் பாத்திரங்கள். அவற்றைத் தொட்டே பலநாட்கள் ஆகியிருக்கும். ஒரு பாடாவதிக் குளிர்பதனப் பெட்டி. குளிர்விக்கும் தன்மையை அது எப்பவோ இழந்திருக்கும். சாப்பிட வகைவகையாய் அடைத்திருந்தது. என்றாலும், இப்போது அவற்றை வாயில் வைக்கக் கொள்ளாது. அவனுக்கு அவளையிட்டுப் பாவமாய் இருந்தது. இங்க எப்பிடித்தான் இவ இருக்காளோ!

படுக்கை அறை எப்படி இருக்கிறது பார்க்கலாம்… தலையணை அடியில், பாதி தெரிந்தும் பாதி மறைந்துமாய், ஐயோ கைத்துப்பாக்கி!! என்ன மாதிரிப் பெண் இவள்?!… அவளது இந்த மகா உபசரிப்பை, நான் ஏற்றுக் கொண்டது தப்போ?

கண், தன்னைப்போலச் சுவரின் அந்தப் பெரிய கறுப்பு – வெள்ளைப் புகைப்படத்தைப் பார்த்தது. இளம்பெண் ஒருத்தி குழந்தை ஒன்றைத் தூக்கி வைத்தபடி. இப்படி அப்படி நகர்ந்து பலவிதமாய், அதை ஓர் ஓவியக் கண்காட்சியில் போல ரசனையாய்ப் பார்த்தான். பழைய காலங்களை அவை முன்கொண்டு வந்தன. ஜே என் யூவில் அவன் படித்த காலங்கள். (ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்). அப்போது, ஹென்ரி மூரின் ‘தாயும் – சேயும்’ சிலைகளை மணிக்கணக்கில் பார்த்து ரசிப்பான். ஆனால் இந்தப் படம், அது அவனைத் தன்னைப் பற்றி யோசிக்கும்படிச் செய்துவிட்டது. அப்படியே, அடங்கினாப்போலப் படுக்கையில் அமர்ந்தான். மனசில் திடுதிப்பென்று கவியும் உணர்ச்சி. அதுவரை இல்லாத சந்தோஷமும், துக்கமும். ஒரே சமயத்தில் அழுத்துகிறது. நினைவுகளை உதறித் தள்ளினான். இந்தப் படம் பாதிக் கதையைத்தான் சொல்கிறது…

ஆனால் ஆச்சர்யகரமாக, அலமாரியின் புத்தக அடுக்குகள் தூசி தட்டி நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. மஞ்சள்தட்டிப்போன தாளில் சில கையெழுத்துப் பிரதிகள். நாடகப் பிரதிகள். அவற்றை உருவிப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான். அதன் வரிகளை இங்கொன்றும் அங்கொன்றுமாய் வாசித்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது.

புத்தக அடுக்குகளின் அருகில் தோல் உறையிட்டு மூடிய ஒரு கிதார் மீது இடித்துக்கொண்டான். ஆகாவென்று அதை எடுத்து, சிறு முத்தம் ஒன்றை ஈந்தபடி அதன் தந்திகளை மீட்டினான்.

ஆனால் நாய்க்கு அந்த இடம் பழகாமல் அலைபாய்ந்தது. அவன்பாட்டுக்கு அந்த வீட்டின் இண்டு இடுக்குகளையெல்லாம் ஆய்ந்து அலசிக்கொண்டிருந்தான்.

"பாழடைந்த லாயம்…" எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ‘ஏ அப்பா! ஹிராகிள்ஸ்! சூராதி சூரா! சுத்தம் செய்யவேண்டும். வேலையை ஆரம்பி!’

******

கொறிக்கவும் மேலும் சில சாமான்களுடனும் மதியம் அவள் வீடு வந்தால்… கிதார் இசை! சத்தம் இல்லாமல் உள்ளே வந்தாள். வீடே சுத்தமாய் இருந்தது. பொருட்கள் அதனதன் இடத்தில்… உணவுமேசையில், புதிய மலர்களுடன் பூச்சாடி. அம்மா இருந்தவரை அப்படிப் பழக்கம் அங்கே இருக்கத்தான் இருந்தது. அவன் வாசிப்பை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்து, ‘வீடு எப்பிடி ஆய்ப்போச்சு பாத்தியா!’ புன்னகை செய்தான். தன்னை அவள் பாராட்டுவாள் என்கிற எதிர்பார்ப்புடனான புன்னகை. ஆனால் அவளோ, தன் மொத்த வாழ்க்கையுமே நிலைகுலைந்து போனாப்போல இடிந்துபோய் இருந்தாள். அவனைத் தாண்டி வேறு அறைக்குச் சென்றுவிட்டாள்.

இருவரிடையே தாளமுடியாத கனமான மௌனம். அவன் அப்படியே அமர்ந்திருந்தான். திடுதிப்பென்று அவள் அழும் சத்தம். எழுந்து உள்ளே போனான். அவள் தலைமீது ஆதரவாய்க் கை வைத்தான். அவளோ ஒரு குழந்தையாய்த் தேம்பிக் கொண்டிருந்தாள்.

"ஏய்! ஒபாமா மாமா என்ன சொல்லீர்க்கார் தெரியுமா உனக்கு?" – சட்டென அழுகை நின்றது. அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான்?

"வேலையில்லாத் திண்டாட்டம்னு ஆகிப்போனபோது, சும்மாங்காட்டியும் அழுதிட்டிருந்தால் கோடீஸ்வரன் ஆகிவிட முடியுமா?" – அவளுக்குச் சிரிப்பு வந்… தாலும் அடக்-க்கிக்கொண்டாகிறது.

அவளருகே மண்டியிட்டு, அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

"என்னை மன்னிச்சிரு அம்மணி!" என்றான்.

"ரோலிங்கின், அடுத்த நாவலின் நிலைக்களனா வெச்சிருந்தே வீட்டை. அதைக் கலைத்துவிட்டேன். அடுத்தபடி என்னமாச்சிம் குண்டக்க மண்டக்க பண்ணி உன்னை நோகடிக்குமுன் நான் இடத்தைக் காலிசெய்து விடுகிறேன்…"

சட்டென அவள் எழுந்துகொண்டு, அவனையும் எழுப்பினாள். நேரே அவன் கண்ணைப் பார்த்தாள்.

"நான் உங்களை அப்பான்னு கூப்பிடட்டுமா?"

"அதுக்கென்ன, அப்படியே கூப்பிடு! ஆனால் அழுவாச்சிக் குழந்தை எனக்கு வேண்டாம்!"

அவள் மலர்ந்து சிரித்தாள். ரெண்டுபேரும், அப்படியே அன்பில் கட்டுண்டவர்களாய்க் கட்டியணைத்துக் கொண்டார்கள். அவள் காதருகே அவன் சொன்னான். "குழந்தே! சமைச்சி வெச்சிருக்கேன். சாப்பிட வர்றியா?"

நாய் அவர்களை ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஆங்கில மூலம்: சடாதல் எஸ். பட்டாச்சாரியா

(தொடரும்…)

About The Author