முன்பொரு யுகத்தில்
ஒரு குரங்கை முழுங்கியிருந்தது
அப்போதுதான் உன் ஞாபகத்துக்கு வந்தது
அனைத்து அல்லலுக்கும்
அதுதான் காரணமென்பதை அறிந்துகொண்டாய் அக்கணம்
மற்றபடி தன்னிடம்
எந்தப் பிரச்சனையுமில்லையெனவும்
உணர்ந்துகொண்டாய்!
மெல்ல மெல்ல
தான் எனப்படுவது
ஒரு குரங்கென அறிகையில்
தாழவில்லை உனக்கு:
எதன்வழி,எந்த யுகத்தில் புகுந்ததோ குரங்கு!
ஆராயப் புகுந்து
அலசுகிறாய் அனைத்தையும்
எனினும்
குரங்கின் மூலம் பற்றி
ஆருக்கும் தெரிவவில்லை எதுவும்!
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவகையான குரங்கை
விழுங்கியிருப்பதால்
நிலமை இன்னும் மோசமாகிறது
ஒவ்வொரு குரங்கும்
தத்தமது மணல் கோட்டையை
பிரம்மாண்டமாய் உருவாக்கி வைத்திருக்க
அதில் வாழமுனைந்த மனிதர்கள்
அப்படியே துவண்டு சரிகிறார்கள்
மணல்கோட்டையாக!
விடாது ஆட்டுவிக்கிறது உன்னை
குரங்கின் மூலம் பற்றிய தேடல்.
கடைசியாய்
களைத்துச்சோர்ந்து நீ கண்டுகொண்டது:
நீ என்பது நீயில்லை
ஒரு அழிக்க இயலா ஆதிக்குரங்கு என்பதே.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“