வணக்கம்! எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா? அரட்டையை ஆரம்பிக்கலாமா?
சென்னைல அங்கங்க அப்பப்போ மழை பெய்யுதாமே? கேக்கவே சந்தோஷமா இருக்கு. பொறுமைக்கு பூமாதேவின்னு ஒரு வாக்கு பெரியவங்க சொல்வாங்க. அந்தப் பூமி நமக்கு நிறைய இயற்கை வளங்களை வாரி வழங்கிட்டு வருது. நாம என்னதான் அந்த வளங்களைக் கன்னாபின்னாவென உபயோகித்து வந்தாலும், சரியாகப் பாதுகாக்காவிட்டாலும், ரொம்பப் பொறுமையா நம்ம பண்ற எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்கு. மரத்தை வெட்டி மழை வராமப் பண்ணியாச்சு. இருந்தாலும் பரிதாபப்பட்டு ஒரு பத்து நாள் மழை பெய்யுதா.. அதை சேகரிச்சு வச்சுக்கறதுக்கு வழி கிடையாது. எல்லா மணலையும் எடுத்தாச்சு. அதனால ரெண்டு நாள் மழைக்கே வெள்ளக்காடு மாதிரி ஊரெல்லாம் தண்ணி! (‘சனியன் பிடிச்ச மழை! பெய்ஞ்சும் கெடுக்குது, பெய்யாமையும் கெடுக்குது’ன்னு முனகல் வேறு!) யார் எதைக் கெடுக்கிறார்கள் என்று தெரியாமலேயே சபிக்க வேண்டியது. வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் கார்பன் புகையை ஏற்படுத்தி ஓசோனையே ஓட்டை போட்டாச்சு.
இது எல்லாம் எங்களுக்கும் தெரியும், விஷயத்துக்கு வா அப்படிங்கறீங்களா? வந்துட்டேன். இவ்வளவு செஞ்சதுக்கு அப்புறமும் ரொம்பப் பொறுமையா இருக்கிற இயற்கைக்கு நாம ஏதாவது நன்றி சொல்றோமா அப்படிங்கறதுதான் கேள்வி. ஒரு வேலைக்குச் சேர்வதா இருக்கட்டும். ஏதாவது ஒரு பில் அடுத்த டேபிளுக்குப் போகறதா இருக்கட்டும். ஒரு சம்திங் வெட்டாம ஒரு வேலையும் நடக்கிறதில்ல. குடிமக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கோடி ரூபா கொடுத்தாத்தான் இந்த மாசம் இங்க மழை பெய்யும்னு இருந்தா யாராவது கொடுப்போமா? அது அது அதோட வேலையைச் செய்யணும் அப்படின்னு ஒரு டயலாக் விட்டுட்டு போராட்டம் நடத்துவோம். நல்லவேளை! இயற்கை நம்மகிட்ட பணமெல்லாம் கேக்கலை. அதுக்குப் பதிலா அன்பைக் கேக்குது. நம்ம வீட்டுல உள்ள ஒரு குழந்தையைக் கவனிச்சுக்கிற மாதிரி அதையும் கவனிச்சுக்கணும்னு அது நமக்காகப் பொறுமையா காத்திட்டு இருக்கு.
ஈரோட்டில் என் நண்பருக்குத் தெரிந்தவங்க வீட்டுக் கல்யாணத்தில் வந்தவங்க எல்லாருக்கும் தாம்பூலத்துக்குப் பதிலா ஒரு மரக்கன்று கொடுத்திருக்காங்க. எவ்வளவு நல்ல விஷயம்! இயற்கையை மாசுபடுத்திட்டோம் அப்படின்னு பேசிக்கிட்டே இருக்கறதை விட இப்படிச் செயல்ல இறங்கினா ஒரு நல்ல மாற்றம் உடனே வரும்.
பஸ், ட்ரெயின் எதுவா இருந்தாலும் சக பயணிகளிடம் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களிடம் அன்பு காட்ட வேண்டாம், நம்மால் முடிந்தவரை இடையூறு செய்யாமல் இருக்கலாம் அல்லவா? பஸ் பிரயாணங்களை விட ரயிலில் பிரயாணம் செய்வது வித்தியாசமானது. சக பயணிகளின் முகத்தை நாம் பார்க்க இயலும். தொலைதூரப் பயணங்களின் போது சக பயணிகளிடம் நாம் வெகு சீக்கிரமாகப் பழகி விடுவோம். ஏதேனும் ஒரு ஆபத்து என்றால் அவர் உதவுவார் என்ற எண்ணத்திலும், பேசிக்கொண்டு வரும்போது அந்தப் பயணத்தின் நேரம் குறைவானது போன்ற ஒரு உணர்வினாலும் பழகி விடுவோம்.
சமீபத்தில் டெல்லியிலிருந்து கேரளாவிற்கு நாக்பூர் வழியாக வந்த ஒரு ரயிலில் ஒரு தனிநபர் நடந்து கொண்ட விதம் அந்தக் கோச்சையே கதிகலங்கச் செய்திருக்கிறது. அந்த நபர் ராணுவ உடையில் இருந்தார் என்பது கூடுதல் செய்தி. தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் கேட்கும் போது இன்னும் மனது சங்கடமாகிறது.
ராணுவத்திலிருந்து விடுமுறையைக் கழிக்க ஒரு குழுவுடன் இந்த ரயிலில், மிகுந்த போதையுடன் பயணித்திருக்கிறார் அந்த நபர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் போதையை அதிகப்படுத்திக் கொண்டே போயிருக்கிறார். செல்ஃபோன் சார்ஜ் செய்யும் இடத்தில் அமர்ந்து கொண்டு யாரையும் அங்கும் இங்கும் போக விடாமல் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். கழிவறையைக் கூட உபயோகப்படுத்த விடாமல் போனதும், நமக்கேன் வம்பு என்று பல பிரயாணிகள் மற்றொரு புறம் உள்ள கழிவறையை உபயோகிக்கத் தொடங்கினர். இது அந்த நபருக்குக் கூடுதலாகத் தைரியத்தைக் கொடுத்தது. இதெல்லாம் நள்ளிரவில் நடந்ததால் பல பயணிகள் தூங்கிக் கொண்டு வந்துள்ளார்கள்.
ஒரு பெண்ணிற்கு அவரது தொலைபேசியில் அழைப்பு வந்தது (தனியாக பயணம் செய்கிறார்.) தூங்கிக் கொண்டிருந்த அவர் போனை எடுத்துப் பேச ஆரம்பிக்க, சில வினாடிகளில் செல்போனில் சார்ஜ் குறையத் தொடங்கியது. உடனே அவர் "செல்போன்ல சார்ஜ் இல்ல, ஒரு அரைமணி நேரம் கழிச்சுக் கூப்பிடுங்க" என்று போனை வைத்துவிட்டு சார்ஜ் செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறார். அங்கே அந்த நபர் அந்தப் பெண்ணைச் சார்ஜ் செய்யவிடாமல் "நான் ஊருக்குப் போய் சேருகிற வரை என்னுடைய செல்போன் மட்டும்தான் சார்ஜில் இருக்கணும்" என்று ஏதேதோ பேச, அந்தப் பெண் பயந்து போய் ஓடி வந்து அவர் இருக்கைக்கு மேல் உள்ள சக பயணிகளை எழுப்பி விஷயத்தைக் கூறி இருக்கிறார்.
அவர்கள் எல்லோரும் சென்று அவரை விசாரிக்கவும் அங்கே கிட்டத்தட்ட அடிதடி நிலைமை ஆகியிருக்கிறது. அந்த நபருக்கு அவர் நண்பர்கள் நான்கு பேர் சப்போர்ட் வேறு. ‘நாமெல்லாம் மிலிட்டரிகாரங்க. நம்மள யாராலையும் ஒண்ணும் செய்ய முடியாது’ என்று உசுப்பேற்றி விட்டுள்ளார்கள். கடைசியில் எல்லோரும் சென்று டி.டி.ஆரிடம் சொன்னதும், டி.டி.ஆர் வந்து அவரை விசாரிக்க, அவருக்கும் அதே திமிரான பதில்கள் கொடுத்துள்ளார். உடனே அவர் ரயில்வே போலீஸில் புகார் செய்ய அடுத்த ஸ்டேஷனில் போலீஸ் வருவது தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர் டாய்லெட்டில் ஒளிந்துவிட்டார். அரைமணி நேரம் கழித்து அவரை வெளியில் கொண்டுவந்து, "மிலிட்டரி ட்ரெஸ்ல இருக்கறதால உங்களை கைது பண்ணாம விடறேன். ஊர் போய் சேர்ற வரைக்கும் நீங்க கீழே வரக்கூடாது. மேல போய்ப் படுங்க. மீறி யாராவது உங்களைப் பத்தி கம்ப்ளைய்ண்ட் செஞ்சா அப்பறம் நடக்கறதே வேற!" என்று எச்சரிக்கை செய்து விட்டுள்ளார்கள்.
இளம் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்கள் என்று எல்லோரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. என்ன நடக்குமோ என்று அச்சத்தோடு பயணம் செய்த பயணிகளில் இரு பெண் குழந்தைகளுடன் பயணித்த என் சகோதரியும் ஒருவர்.
நம்ம நிலா அவர்கள் தன் கட்டுரையில் "பயணங்கள் பலருக்கு இனிமையானதாக அமைகின்றன" என்று எழுதி இருந்தார்கள். உண்மைதான்! ஆனால் இவங்களை மாதிரி சிலருக்குக் கொஞ்சம் கஷ்டமா அமைஞ்சுடுது, என்ன சொல்றீங்க? உங்களில் சிலருக்கும் இம்மாதிரி பயண அனுபவங்கள் இருக்கலாம். இருந்தா பகிர்ந்துக்கங்க.
ஒரு உண்மையைச் சொல்லி அரட்டையை முடிச்சுக்கறேன். பல விளம்பரங்கள் நம் மனதைக் கவர்ந்து விடுகின்றன. "எத வேணா சாப்பிடுங்க, ஆனா உண்மையைச் சொல்லுங்க" என்ற டூத்பேஸ்ட் விளம்பரம் எதையோ நமக்குச் சொல்ல வருவது போல எனக்குத் தோணும். சின்ன வயசுதான் பொய் சொல்ல ஆரம்பிக்கும் வயது. உண்மையைச் சொல்லும் குழந்தைகளிடம் நாம் கோபமாக நடந்து கொள்ளாமல், அது தவறாக இருந்தால், பக்குவமாக எடுத்துச் சொல்லி உண்மையைச் சொல்ல ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்தப் பயம் அகன்று குழந்தைகள் எல்லா வயதிலும் உண்மையைச் சொல்ல நினைப்பார்கள். இதனால் பல விஷயங்களை யாருக்கும் எந்த மன வருத்தமும் இல்லாமல், மிக எளிதான முறையில் கையாள முடியும். இத முயற்சி செஞ்சு பாருங்க. போய்ட்டு வரேங்க.
மீண்டும் சந்திப்போம்.
ஆம், நம் நாட்டில் பெய்ய வேண்டிய காலத்தில் மழை மனம் திறந்து தாராளமாகத் தருகிறது. ஆனால் நாம் செய்ய வேண்டியதைச் செய்வதில்லை. ஆம் நாம் மழைக்காலத்தில் பெய்யும் மழையைக் கண்மாய்களில் நீர்த்தேக்கங்களில் சேமிக்கத் தவறி விட்டோம். சொன்னால் அணைகளைக் கட்டி கண்மாய்களைக் கட்டு என்று கோஷம் போடத் தவறுவதில்லை.
ஆனால் சிங்கப்பூரில் நீர் வளமே இல்லை நீள்மலைகள் இல்லை அவ்வப்போது பெய்யும் மழைநீரை நீர்த்தேஎக்கங்களில் தேக்கி வைத்து நல்ல குடிநீராகத் தரப்படுகிறது.
சமீபத்தில் நான் என் சொந்த ஊருக்கு வந்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின் வந்ததால் கண்மாயைக் கண்டேன்; கவலையடைந்தேன் கார்த்திகை மாதத்தில் கர்ணனைப் போல் மழையை வானம் தந்திருந்தாலும் கண்மாய்தரை வறண்டு கிடந்தது. காரணம் கேட்டேன். அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியைத்தந்தது, மனிதனின் தன்னலப்போக்கையும் காட்டியது. கண்மாய்க்கு தண்ணீர் வரும் வாய்கால் களில் வீடுகள் கட்டப்பட்டு (ஆக்கரமித்து) விட்டால் நீர் வரவு குறைந்து விட்டது. விளைநிலங்களும் வீடுகளாய் மாற்றப்பட்டுவிட்டன, குடிநீர்ப்பஞ்சம் தலை விரித்தாடுகிறது, பிளாஸ்பாட்டில்களில் குடிநீர் விலைக்கு வாங்கப்படுகிறது. கையில் இருக்கும் வெண்ணெயை விட்டுவிட்டு நெய்க்கு அலையும் இழிநிலை ஏன்? மக்கள் யோசிக்க வேண்டும்.