ஜென் மாஸ்டர் ரையோகன் (1759-1851) ஜப்பானிய புத்த மத வரலாற்றில் தனி இடம் பிடிப்பவர். தன்னைப் பெரிய முட்டாள் என்று இவர் சொல்லிக் கொண்டாலும் இவரது பேரறிவு அனைவராலும் போற்றப்பட்டது.
மற்ற குருமார்கள் அனைவரும் பெரும் மடாலயங்களில் தர்மோபதேசம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தபோது, இவர் நகரச் சந்தடியை விட்டுத் தள்ளி வெளியே, கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருந்து வந்தார். தினசரி, கிராமத்தில் சுற்றி வந்து சிறுவர்களோடு விளையாடுவதும் பிச்சை எடுத்து உண்ணுவதும் இவர் வழக்கம். அற்புதமான கவிதைகளைச் சீன மொழியில் எழுதிக் குவித்தார். இதைக் ‘கன்ஷி’ என்று குறிப்பிடுவர். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் கூட மன மகிழ்ச்சியை நிரந்தரமாகக் கொள்ள முடியும் என்பதை இவர் வாழ்க்கை உலகிற்குக் கற்பித்தது. இவர் கவிதைகளிலும் இந்த எண்ணம் பிரதிபலித்தது.
எச்சிகோ மாவட்டத்தில், ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் மூத்த மகனாக ரையோகன் பிறந்தார். 18ஆம் வயதிலேயே உலகைத் துறந்தார். புத்த மதப் பெயரான ‘ரையோகன்’ என்ற பெயரை 22ஆம் வயதில் பெற்றார்.
ரையோகன், கோகுசென் என்ற குருவிடம் 20 வருடங்கள் கடும் பயிற்சியை மேற்கொண்டார். பின்னர், நாடெங்கும் கால்நடையாகச் சுற்றி வந்தார். நாற்பதாம் வயதில் தன் சொந்தக் கிராமத்திற்குத் திரும்பி வந்தார். அவரை ‘டெமாரி ஷோனின்’ என்று செல்லமாக அழைப்பார்கள். டெமாரி என்பது ஒரு வகைக் கைப்பந்து. அதை வைத்துச் சிறுவர்களுடன் விளையாடுவது இவர் வழக்கம். ஆகவே அந்தப் பெயரால் அவரை அழைத்தனர். சிறுவர்களுடன் கண்ணாமூச்சி விளையாடுவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. சிறுவர்கள் மீது கொள்ளைப் பிரியம் கொண்ட அவர் தன் கவிதைகளிலும் அந்தப் பேரன்பைக் கொட்டினார்.
1826ஆம் ஆண்டில் ரையோகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியே உதவியின்றி அவரால் இருக்க முடியவில்லை. கிமுரா மோடோய்மான் என்ற அவரது ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று வாழலானார். அவருக்குப் பணிவிடை செய்ய டெய்ஷின் என்ற இளைஞன் முன்வந்தான். அவனது வருகையால் ரையோகனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு வந்தது. இருவரும் ஹைகூ கவிதையின் மூலம் அழகிய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 1831ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தவுடன் ஆறாம் நாளில், தனது 74ஆம் வயதில் இவர் மறைந்தார். ரையோகன் தியான நிலையில் அமர்ந்து தூங்குவது போல உடலை நீத்தார் என்று டெய்ஷின் குறிப்பிட்டுள்ளார்.
ரையோகன் மரணப் படுக்கையில் தனது இறுதிக் கவிதையை டெய்ஷினுக்குத் தந்தார், இப்படி:-
இப்போது மறைந்திருக்கும் பக்கத்தை அது காண்பிக்கிறது.
இப்போது அடுத்த பக்கம் – விழுகிறது
ஒரு இலையுதிர்கால இலை!
ரையோகனைப் பற்றிய சுவாரசியமான தகவல்களும் சம்பவங்களும் ஏராளம் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ரையோகன் குழந்தையாக இருந்தபோது அவர் தந்தை ஒரு நாள் அவரைத் திட்டினார். "இப்படிக் கோணல் மூஞ்சியை நீ கொண்டிருந்தால் தட்டுத் தடுமாறித்தான் பின்னால் கோண நடை நடப்பாய்" என்ற அவரது திட்டைக் கேட்டு ரையோகனுக்குப் பெரும் கவலை வந்து விட்டது. மீன் பிடிக்கக் கடலுக்கு உரிய நேரத்தில் போக முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்த அவர் வெகு நேரம் கடற்கரையில் ஒரு பாறையின் மேல் காத்திருந்தாராம்.
ரையோகன் calligraphy எனப்படும் சித்திர எழுத்துக்கலையில் வல்லவர்.
அதைப் பற்றிய ஒரு சம்பவம் இது. அரிசியில் தயாரிக்கப்பட்ட மதுவை ரையோகன் விரும்பிச் சாப்பிடுவார். சமயத்தில் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டு விடுவார். "கடையில் மதுவை வாங்கி வரச் சொல்லிக் குழந்தை ஒன்றை அனுப்பினேன். அதைக் குடித்த பின் சித்திர எழுத்துக் கலையில் சிலவற்றை எழுதினேன்."
துறவிகள் பொதுவாக மாமிச உணவை அறவே தவிர்ப்பர். ஆனால், இளம் துறவி ஒருவர் ரையோகன் மீன் சாப்பிடுவதை ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. ஏன் மீனைச் சாப்பிடுகிறீர்கள் என்று அவர் கேட்டபோது ரையோகன், "மீன் தரப்படும்போது அதை நான் சாப்பிடுகிறேன். அதே சமயம் ஈக்களும் பூச்சிகளும் என் உடலை விருந்தாய் எடுத்துக் கொள்வதையும் அனுமதிக்கிறேன். (தூங்கும்போது அவை கடிப்பதை அவர் குறிப்பிட்டார்). இரண்டைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை!" என்றார்!
ஒரு நாள் மூங்கில் ஒன்று அவரது குடிசை நடுவில் முளைத்துக் கூரையை நோக்கி வளர ஆரம்பித்தது. மூங்கில் கூரையைத் துளைத்துக்கொண்டு மேலே வளருவதற்காக மெழுகுவர்த்தியினால் ஓர் ஓட்டை போட முற்பட்டார் ரையோகன். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் குடிசையே தீப்பற்றி முற்றிலுமாக எரிந்து அழிந்தது.
இறந்தவர்களின் ஆவிகளை வழிபடும் பான் விழாவில் கலந்து கொள்ள ரையோகனுக்கு மிகவும் ஆர்வம் அதிகம். ஆனால், ஒரு துறவி அதில் கலந்து கொள்ள முடியாது. ஆகவே, அவர் ஒரு பெண் போல வேஷம் தரித்து அதில் கலந்து கொள்வாராம்.
ரையோகனுக்கு எதையும் வீணாக்கப் பிடிக்காது. ஆகவே, சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை ஒரு சிறிய பானையில் போட்டு வைப்பார். அது சில சமயம் ஊசிப் போய்விடும். புழுவால் மூடி இருக்கும். என்றாலும் அந்தப் பூச்சி, புழுக்களை எடுத்து வெளியில் போட்டு விட்டு மீந்த உணவை அவர் சாப்பிடுவார். இப்படி ஊசிப் போனதைச் சாப்பிடக்கூடாது என்று மற்றவர்கள் அவரை எச்சரிக்கும்போது, "பரவாயில்லை, நான் சாப்பிடுமுன்னர் பூச்சி புழுக்களைத் தப்பி ஓடச் செய்து விட்டேன். உணவு சுவையாகத்தான் இருக்கிறது" என்பார் அவர்!
ரையோகன் ஒரு மலையடிவாரத்தில் ஒரு சிறிய குடிசையில் எளிமையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் மாலை ரையோகன் குடிசையில் இல்லாத சமயம், ஒருவன் அங்கு திருட வந்தான். ஆனால், குடிசையில் ஒன்றுமே இல்லை. அப்போதுதான் குடிசைக்குத் திரும்பி வந்த ரையோகன் அவனைப் பிடித்துக் கொண்டார்.
"நெடுந்தூரத்திலிருந்து என்னைப் பார்ப்பதற்காக வந்திருப்பாய்! வெறும் கையோடு நீ திரும்பிப் போகக் கூடாது. இதோ, எனது ஆடைகள்! இவற்றை எடுத்துக் கொண்டு போ!" என்றார் ரையோகன்.
திருடன் திருதிருவென்று விழித்தான். ஆடைகளை வாங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
நிர்வாணமாக உட்கார்ந்த ரையோகன் குளிர் நிலவைப் பார்த்தவண்ணம் இருந்தார். மெல்ல முணுமுணுத்தார்: "பாவம் அவன்! இந்த அழகிய நிலவை நான் அவனுக்குக் கொடுத்திருக்கலாம்!" உடைமை என்று நாம் கருதும் உலகியல் வஸ்துக்களை விட அபாரமானவை இயற்கை எழிலில் ஏராளம் உள்ளன அல்லவா!
இந்தச் சம்பவம் அற்புதமான ஒரு ஹைகூ கவிதையை உருவாக்கி விட்டது!
திருடன் விட்டுச் சென்றான்
சந்திரனை
எனது ஜன்னலில்!
சின்ன உண்மை:
ரையோ என்றால் ‘நல்ல’ என்று பொருள். கன் என்றால் ‘விசாலமான’ என்று பொருள். டைகு என்றால் ‘பெரிய முட்டாள்’ என்று பொருள். ஆக, ரையோகன் டைகு என்றால் ‘பரந்த மனமும், நல்ல குணமும் கொண்ட பெரிய முட்டாள்’ என்று பொருளாகும்! அவரது வாழ்க்கை முறையைத் தெரிவிக்கும் பெயராக இது அமைந்தது!
–மின்னும்…
“