காலைப் பிடித்த கை (போன அத்தியாயத்தின் தொடர்ச்சி)
சேரனின் உடலை யாரோ மலர்ச் செண்டால் வருடியது போல உணர்ந்தான். அந்த நாயைத் தழுவிக் கொண்டான்.
அது விஜய் வளர்க்கும் காக்கர்ஸ் ஸ்பானியல் என்னும் உயர் ரக நாய். வெள்ளையும் கறுப்பும் கலந்த அந்த நாய் பார்ப்பவரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். உடல் முழுவதும் சடை சடையாய் முடி. காதுகள் இரண்டும் நீண்டு கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. காதுகளிலும் அடர்த்தியான – நீளமான முடி. நாய் கொஞ்சம் குனிந்தாலும் காதுகள் தரையைப் பெருக்கும். அதற்கு ஒரு வயது. அது பத்து நாள் குட்டியாய் இருந்தபோது, சென்னையிலிருந்து அதை வாங்கி வந்து விஜய்க்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார், அவன் தந்தை. விலை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்!
"இவ்வளவு விலையா?" என்று கேட்டான் சேரன்.
"பின்னே! இதன் தந்தை சிறந்த நாய் என்று சாம்பியன் பட்டம் பெற்றது; தாயும் ஒரு சாம்பியன்! அதனால் இவ்வளவு விலை. கோயமுத்தூரில் காக்கர்ஸ் ஸ்பானியல் மிகக்குறைவு தெரியுமா?"
விஜய் பெருமையோடு சொன்னதை வியப்போடு கேட்ட சேரன், அன்றே அதனிடம் அன்பு செலுத்தினான்.
காக்கர்ஸ் ஸ்பானியலுக்கு விஜய் வைத்த பெயர் டாலர்! பைசாவும் ரூபாயும் வைத்திருப்பவர்களால் வளர்க்க முடியாத நாய்க்கு டாலர் என்பது பொருத்தமான பெயர்தானே! சேரனுக்கு டாலரைப் பிடித்தது போலவே டாலருக்கும் சேரனைப் பிடிக்கும். அதனால்தான் அன்றும் அவன் மீது தாவிப் பாய்ந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
சேரன் டாலரைக் கொஞ்சினான்; சில நிமிடங்களில் விஜய் வந்து விட்டான்.
சேரனும், விஜயும் பங்களாவின் முன்னே இருந்த புல்வெளியில், நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன் மடியில் டாலர் வீற்றிருந்தது.
"சேரா! டாலர் என்னிடம் எப்போது வந்தது என்று நினைவிருக்கிறதா?"
"ஓ! சென்ற ஆண்டு உன் பிறந்த நாளின்போது! சரியாகச் சொன்னால் நவம்பர் பதினொன்றாம் தேதி!"
"இன்றைக்குத் தேதி என்ன?"
"நவம்பர் மூன்று விஜய்! இன்னும் ஐந்து நாளில் உனக்கு பர்த்டே வருகிறது! என் அட்வான்ஸ் வாழ்த்தை ஏற்றுக் கொள். ஹாப்பி பர்த் டே டு யூ!"
"நன்றி! ஆனாலும் வழக்கம்போல் என் பிறந்த நாள் விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும்."
"நிச்சயமாக விஜய்! உன் பிறந்த நாளுக்கு வருவேன்! பிரியம் நிறைந்த வாழ்த்தையும் தருவேன்!" என்று நாடக வசனம் போல் பேசினான் சேரன்.
"சேரா! சொன்னதை மறக்கக் கூடாது. இந்த முறை எனது பிறந்த நாள் விழாவை ஊட்டியில் கொண்டாட அப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். அதனால் நீ எட்டாந் தேதி மாலையே என்னுடன் ஊட்டிக்கு வருகிறாய்."
"ஊட்டிக்கா…!"
"ஆமாம். சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. வேண்டுமானால் நானே உன் அம்மாவிடம் அனுமதி கேட்கிறேன்" என்றான் விஜய்.
அதற்குத் தேவை ஏற்படவில்லை. விஜய்குமாருடன் உதகைக்கு அல்ல, இமயத்துக்கே போவதானாலும் சேரனின் பெற்றோர் அனுமதிப்பார்கள்; அனுமதித்தார்கள்.
நவம்பர் 10, சனிக்கிழமை இரவு!
உதகமண்டலத்தில், அரசினர் பூங்காவை ஒட்டிய பகுதியில் கம்பீரமாக உயர்ந்திருந்த பங்களாவில் குளிருக்கு இதமான கம்பளிக்குள்ளே விஜய்குமார் கண்ணுறங்கினான். அதே அறையில் ஒரு தனிக் கட்டிலில், அதே மாதிரி கம்பளிக்குள்ளே உடலைக் குறுக்கி உறங்கினான் சேரன்.
நவம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை!
பகல் பத்து மணிக்கு விஜய்குமாரின் பிறந்த நாள் விழா நடந்தது.
விஜய், மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்க, ‘ஹாப்பி பர்த் டே டு யூ’ பாடல் ஒலிக்க, வெகு கோலாகலத்துடன் விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் விஜயின் தந்தைக்கு நண்பர்கள்.
விஜய்குமாரின் தந்தை வெங்கடேசன் கோவையில் உள்ள பெரும் பணக்காரர்கள் சிலரில் ஒருவர். அவர் தமது தொழில் வளர்ச்சிக்காக ஏதேதோ காரணங்களைச் சொல்லி விழா நடத்துவார்.
இம்முறை ஊட்டிக்கு வந்திருக்கும் பெரிய புள்ளிகள் சிலரை வளைத்துப்பிடிக்க மகனின் பிறந்த நாள் விழாவை ஊட்டியில் வைத்துக் கொண்டார்.
சேரன், தன் நண்பனுக்கு டாக்டர் மு. வரதராசனாரின் திருக்குறள் தெளிவுரையைப் பரிசளித்தான். அது ஒன்றுதான் புத்தகப் பரிசு. மற்றவை பொருள்கள்! வண்ணத்தாள்களில் சுற்றப்பட்டு, வழுவழுப்பான டேப்புகளால் கட்டப்பட்ட பொருள்கள்!
விழாவுக்குப் பின்னே பகல் விருந்து மிகச் சிறப்பாக இருந்தது. விலாப்புடைக்க விருந்துண்ட சேரன், சற்று நேரம் கண் அயரலாம் என்று படுத்தான். ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.
சேரன் விழித்து எழுந்தபோது, அந்த மாளிகை அமைதியாக இருந்தது. மணி பார்த்தான். நான்கு. ‘ஏறத்தாழ இரண்டு மணி நேரம் தூங்கியிருக்கிறோம்’ என்று நினைத்தபடி அறையிலிருந்து வெளியே வந்து வரவேற்பு அறையில் உட்கார்ந்தான்.
சமையற்காரன் வந்து, "டிபனும் காப்பியும் கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
பகலில் சாப்பிட்டதே இன்னும் ஜீரணமாகவில்லை. அதனால் ‘காப்பி மட்டும் போதும்’ என்றான். காப்பி வந்தது. அதைக் குடித்துக்கொண்டே, சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்தினான். விஜய் – விஜயின் அப்பா – விஜயின் அம்மா, யாரும் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை.
‘விஜய் நம்மை விட்டுவிட்டு எங்கே போயிருப்பான்?’சேரன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து கொண்டு டிரைவர் ஒருவன் உள்ளே வந்தான்.
"பெரியய்யா மாலையிலே ஒரு பார்ட்டி கொடுக்கறாரு. அதுக்கு அவங்க முன்னாடியே ஓட்டலுக்குப் போயிட்டாங்க. நீங்க எழுந்த பிறகு, சின்னையா உங்களை ஓட்டலுக்கு அழைச்சுட்டு வரச் சொன்னாரு."
விஜயின் தந்தை அன்று மாலை ஓட்டலில் ஒரு விருந்து தரப் போவதை முன்னரே விஜய் சொல்லியிருந்தான். அது இப்போதுதான் நினைவுக்கு வந்தது.
‘எனக்கும் விஜய்க்கும் எத்தனை பெரிய ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம். விஜயின் அன்பைப் பெற்றிருப்பதே என் அதிர்ஷ்டம். ஊட்டியிலேயே மிகப் பெரிய ஓட்டலில் பார்ட்டி என்றான். பெரிய பெரிய அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் வருவார்களாம். அங்கே போகாமல் இருப்பதே நல்லது’ என்று நினைத்தான் சேரன்.
"இல்லைங்க டிரைவர், நான் வரலைங்க. இங்கேயே இருந்துடறேன்" என்றான்.
"காருக்கு அங்கே வேலை இருக்கும். நான் ஓட்டலுக்குப் போறேங்க."டிரைவர் போய் விட்டான்.
சேரன் சிறிது நேரம் அங்கிருந்த தமிழ், ஆங்கில வார இதழ்களைப் புரட்டினான்.நேரம் எருமையாக நகர்ந்தது.
‘இரவு மணி ஏழு இருக்கும்’ என்று நினைத்துக் கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஐந்தரைதான்!
அதற்கு மேலும் அவனால் அறைக்குள் அடைபட்டிருக்க முடியவில்லை.எழுந்தான்.
"கொஞ்ச நேரம் வெளியே நடந்துட்டுச் சீக்கிரம் திரும்பி வந்துடறேனுங்க."சொல்லிவிட்டுப் பங்களாவின் வெளியே வந்தான். இரண்டு பக்கமும் பல வண்ணப்பூக்கள் மலர்ந்து மணம் வீச, இடையே இருந்த வழியே நடந்து கேட்டுக்கு வெளியே வந்தான்.
ஊட்டியின் காற்று எப்போதும் சில்லென்று இருக்கும். உடலுக்கு ஊறு செய்யாமல், ஆரோக்கியம் தரும். தூய்மையும் குளிர்ச்சியும் பெற்ற அந்தக் காற்று சேரனின் உடலைத் தாக்கியது.
மலைக்காற்றின் குளிர்ச்சியை அனுபவித்தவாறு, மலைகளின் அரசியான நீலகிரியின் கோலத்தை ரசித்தவாறு மேலேறிச் செல்லும் சாலை வழியே நடந்து கொண்டிருந்தான்.
அரை மணிநேரம் நடந்திருப்பான். திடீரென்று எங்கும் இருள் கவிந்து விட்டதை உணர்ந்தான். அவன் சென்ற சாலையில் விளக்குகள் இல்லை.
விஜயின் பங்களா கீழே இருக்கிறது. திரும்பவும் அரை மணி நேரம் நடக்க வேண்டும். சேரன் திரும்பி நடந்தான். இரண்டே நிமிடத்தில் அவன் நடை தடைப்பட்டது.
காரணம்?
அவனுக்கு முன்னே அவன் உயரத்தில் முக்கால் உயரம் கொண்ட இரண்டு நாய்கள் சாலையின் நடுவே நின்றிருந்தன. அவற்றின் வால் ஒட்ட நறுக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், அவை டாபர்மேன் என்னும் காவல் நாய்கள் என்பதைப் புரிந்து கொண்டான். அவற்றைப்போல ஒரு டாபர்மேன் விஜயின் பங்களாவில் உண்டு. பகலிலே கூண்டிலே அடைத்து வைத்திருப்பார்கள். இரவில் திறந்து விடுவார்கள். டாபர்மேனின் ஓட்டமும் திறமையும் விஜய் சொல்லக் கேட்டிருந்தான். அது குரைத்தாலே குலை நடுங்கும். சேரன் டாபர்மேன் இருக்கும் கூண்டுப்பக்கமே போகமாட்டான்.
இப்போது சாலையை மறித்துக் கொண்டு நிற்கும் டாபர்மேன்கள் அவனுக்கு இரண்டு புலிகளாகத் தெரிந்தன.
அவற்றை எப்படிக் கடப்பது?முன்னும் பின்னும் யாரும் இல்லை. அரசினர் பூங்காவை ஒட்டிய அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் அபூர்வம் என்பது அவனுக்குத் தெரியாது.
சில நிமிடம் நின்றான். டாபர்மேன்கள் அங்கேயே விளையாடின.அவற்றை நெருங்கச் சேரன் பயந்தான்.
‘நாய்களுக்கு மோப்ப சக்தி உண்டு. யாராவது பயந்தால் அவர்களைத் தாக்க முற்படும். அதனால் நாயைப் பார்த்தால் பயப்படக் கூடாது’ என்று எங்கோ – எப்போதோ படித்திருந்தான்.
‘பயத்தோடு நாயை நெருங்கினால் அது நம் மீது பாயும்’ என்று திடமாக நம்பிய சேரன் சில அடிகள் பின் வாங்கினான்.
கீழே நகரத்தில் விளக்குகள் எரியத் தொடங்கின. நட்சத்திரங்கள் நிறைந்த வானம் திடீரென்று மண்ணுக்கு வந்து விட்டதைப் போன்ற அழகான காட்சி. அதை ரசிக்கும் மனநிலைதான் சேரனுக்கு இல்லை.
சேரன் இன்னும் சில அடிகள் பின்னேறினான்.
அங்கே ஒரு ஒற்றையடிப் பாதை சாலையிலிருந்து இறங்கி மலைச் சரிவில் செல்வதைக் கண்டான். சரிவில் இறங்கி நடந்தால் விஜயின் பங்களாவை அடையலாம் என்ற நம்பிக்கையோடு சேரன் சரிவில் இறங்கினான்.
சில அடி சென்றதும் கால் வழுக்கியது. சிறு சிறு கற்கள் உருண்டன. எங்கே காலை வைப்பது என்று தெரியவில்லை. வானத்தில் நட்சத்திரங்களும் தெரியாத மேக மூட்டம்.
சேரன் மெதுவாக நகர்ந்தான். காலைப் பத்திரமாக ஊன்றினான். எச்சரிக்கையோடு எடுத்தான். இத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் அவன் கால் சறுக்கியது.
மறுகணம்…
சேரன் அந்தச் சரிவிலே விழுந்து புரண்டு, உருண்டு பொத்தென்று எதன் மீதோ விழுந்தான்!
மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். ‘நாம் எதன் மீது விழுந்தோம்’ என்று தடவிய சேரன் திடுக்கிட்டான்.
அது ஒரு மனித உடம்பு!
ஒரு வேளை பிணமோ?சேரன் கிலியோடு எழுந்தான். இன்னொரு முறை உருண்டாலும் சரி, அங்கிருந்து உடனே ஓடி விடலாம் என்று ஒரு அடி எடுத்து வைத்தான். மறு அடியை எடுக்க முனைந்தபோது-
கீழே கிடந்த உடம்பின் கை மெதுவாக அசைந்து வந்து அவனது காலைக் கபக்கென்று பற்றியது.
சேரன் "அம்மா!" என்று அலறினான்.
–புலி வளரும்...
“