அன்பென்னும் வட்டம்
தனது பழைய காரில் ஜோ சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது வழியில் வயதான பெண்மணி ஒருவர் கார் டயர் பஞ்சராகிவிட செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான். பனியில் நடுங்கியவாறு, உதவி கிடைக்காதா என்று கவலையுடன் அவர் காத்திருந்தார். எத்தனையோ வாகனங்கள் கடந்து சென்றன. ஆனால், யாரும் தவிக்கும் இந்தப் பெண்மணியைக் கண்டு கொள்ளவில்லை.
ஜோ காரிலிருந்து இறங்கி அவரிடம் சென்று, "நான் உதவட்டுமா?" என்று கேட்டான். அவனுடைய பழைய ஆடையையும் காரையும் பார்த்து அந்தப் பெண்ணுக்குக் கொஞ்சம் சந்தேகமாய்த்தான் இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லாததால் "சரி" என்றார். ஜோ சுறுசுறுப்பாக வேலையில் இறங்கி, பழைய டயரைக் கழற்றி ஸ்டெப்னியை மாட்டி விட்டான். அந்தப் பெண் நன்றியுடன் இவனைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?" என்று கேட்டார். ஜோ சொன்னான், "வேண்டாம் மேடம்! என் பெயர் ஜோ. இதே மாதிரி நானும் ஒருமுறை கஷ்டப்பட்டிருக்கிறேன். அப்போது முகம் தெரியாத யாரோ ஒருவர் எனக்கு உதவி செய்தார். நீங்கள் எனக்கு எதாவது செய்ய வேண்டுமென்றால் இந்த அன்பு என்னும் சங்கிலியை உங்களோடு முறித்துவிடாமல் நீங்களும் தொடருங்கள்" என்று சொல்லிச் சென்று விட்டான்.
அந்தப் பெண்மணி பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் பசியெடுக்க, சாப்பிடுவதற்காக ஓர் உணவகத்திற்குள் நுழைந்தார். உணவு பரிமாறும் பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. "எவ்வளவு அழகாக, ஆசையுடன் பரிமாறுகிறாள்! பாவம், எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நேரத்திலும் வேலை செய்கிறாள்!" என்று மனதுக்குள் நினைத்தவர் பில்லில் நூறு டாலரை வைத்துவிட்டுச் சென்றார். மீதிப் பணத்தை கொடுக்க வந்த அந்த சர்வர் பெண் அவரைக் காணாமல் வியந்தாள். அவர் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தாள். அங்கு ஒரு கடிதமும் 400 டாலர்களும் வைக்கப்பட்டிருந்தன. கடிதத்தில், "எனக்கு நீ எதுவும் திருப்பித் தர வேண்டியதில்லை. நான் கஷ்டப்பட்டபோது எனக்கு ஒருவர் உதவி செய்தார்; இப்போது நான் உனக்கு என்னாலான உதவியைச் செய்கிறேன். எனக்கு எதாவது செய்ய வேண்டுமென்று விரும்பினால், இந்த அன்புச் சங்கிலி அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்" என்று எழுதியிருந்தது. அதைப் படித்ததும் அந்தப் பெண்ணின் கண்களில் நீர் துளிர்த்தது. ‘அந்தப் பெண்மணிக்கு எப்படித் தெரிந்தது! பிரசவ செலவுக்கு வழியில்லாமல் தன் கணவர் எவ்வளவு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்!’.
வீட்டிற்குச் சென்றவுடன் படுத்துக் கொண்டிருந்த கணவனின் கன்னத்தில் அன்பாக ஒரு முத்தம் கொடுத்து அவள் சொன்னாள், "பிரசவச் செலவிற்காகக் கஷ்டப்பட வேண்டாம்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்! நன்றாகத் தூங்கு ஜோ" என்று.
“