நுண்ணோக்கிகள் (microscopes)
ஆங்கிலச் சொல்லான microscope என்பது இரு கிரேக்கச் சொற்களின் (micros – சிறிய/நுண்ணிய, மற்றும் skopos – நோக்குதல்/கவனித்தல்) சேர்க்கையில் உருவானதாகும். எனவே இச்சொல் நுண்ணிய பொருட்களைக் காணக்கூடியது என்று பொருள்படுகிறது. நமது ஊனக்கண்களால் நேரடியாகக் காணமுடியாதவற்றைப் பார்க்க இக்கருவி பயன்படுகிறது.
ஒரு பொருளைக் கண்ணுக்கு அருகில் கொண்டுவரும் போது, அது பெரிதாகக் காணப்படும். ஆனால் அது 10 அங்குல இடைவெளிக்கும் குறைவாகக் கண்ணுக்கருகில் கொண்டுவரப்படும் போது தெளிவற்று மங்கலாகக் (blur) காணப்படும். அதாவது, அப்பொருள் குவியத்துக்கு வெளியே இருப்பதாகக் (out of focus) கூறப்படும். இப்போது ஒரு சாதாரண குவி வில்லையைக் (convex lens) கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்கும் இடையே வைத்தால் அப்பொருள் நன்கு காணப்படும்; அதாவது, அப்பொருள் குவியத்துக்கு உட்பட்டு இருக்கிறது. இன்றைய நிலையில் நுண்ணோக்கி எல்லாத் துறைத் தொழில்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.
ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.
அறிவியலாளர்களின் பாதுகாப்பு ஆடைகள் (protective clothes)
அறிவியலாளர்கள் (scientists) ஆய்வு மேற்கொள்ளும்போது எதிர்கொள்ளும் பல ஆபத்தான பொருட்களுள் நோய் பரப்பும் நுண்ணுயிர்களும் (germs) பாக்டீரியாக்களும் (bacteria) அடங்கும். இவற்றைத் தொட்டாலோ அல்லது சுவாசித்தாலோ மிகத் தீவிரமான பின் விளைவுகள் ஏற்படும்; எனவே இந்த ஆபத்துகளைத் தவிர்க்க முகமூடிகள், கையுறைகள், உடலையும் தலையையும் மறைக்கும் ஆடைகள் அல்லது கவசங்கள் போன்றவற்றை ஓர் அறிவியலாளர் அணிந்து கொள்வது தவிர்க்க இயலாததாகும்.
அறிவியலாளர்கள் சில நேரங்களில் கதிரியக்கப் (radioactive) பொருட்களைக் கையாளவேண்டி இருக்கலாம். இக்கதிரியக்கப் பொருட்களின் கதிர்வீச்சு (radiation) எல்லா உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். இக்காரணத்துக்காகவே இயன்றவரை மனிதர்களுக்குப் பதிலாக எந்திரமனிதர்களைப் (robots) பயன்படுத்துகின்றனர். மனிதர்களே பணியில் ஈடுபடும்போது பாதுகாப்பு உடைகளை அணிதுகொள்வதோடு, அவர்களைத் தாக்கும் கதிர்வீச்சு அளவைக் காட்டக்கூடிய அளவியையும் உடன் வைத்துக் கொள்கின்றனர்.
கதிர்வீச்சுப் பொருட்கள் உள்ள இடங்கள் கட்டடங்கள் போன்றவற்றில் அவற்றை அறிவிக்கக் கூடிய அபாய அறிவிப்புக்கான அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் உண்டு.
“