சுழிகுளம் – 2
சுழிகுளத்தை விளக்கும் விதமாக மாறனலங்காரம் தரும் சூத்திரம் இது:-
"தெழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் ததைக்கொடு
சுழித்தடங் குவபோன் றடங்குதல் சுழிகுளம்"
"ஆரவாரித்து எழுகின்ற புனல் குளத்தினுள் தனது இடத்தை அடைந்தது யாதொன்று, அதனைக் கைக்கொண்டு சுற்றி உள்ளே அடங்குவது போலச் சுற்றிப் பாவினகத்துப் பொருளைக் கொண்டடங்குதல் சுழிகுளம்" என்பது இதன் பொருள்.
இந்த வகைக்கு மாறனலங்காரம் தரும் உதாரணச் செய்யுள் இது:-
"சதிதகனடனாடீ
திததிதிகாண்ஞானா
ததிதாகார்கண்ட
கதிகாகிளர்கான"
இதன் பொருள்:-
தாளவொத்துக்குப் பொருந்தக் கூத்தாட நின்றவனே! உண்மையான காவல் தொழிலை உனதாகக் கொண்டவனே! தயிரைத் தாகித்துண்ட கண்டத்தை உடையவனே! கிளர்ந்த கானத்தை உடையவனே! நீயே கதி, காப்பாயாக!
துறை – வஞ்சித்துறை.
இதன் சித்திரத்தைக் கீழே காணலாம்:
சுழிகுள வகையில் யாழ்ப்பாணக் கவிஞர் மயில்வாகனப் பிள்ளை, வஞ்சித் துறையில் இயற்றிய செய்யுள் இது:-
"தகுநகு லேசுரங்
குலவிவ யச்சிர
நவிறல முனாச்சு
குவலயம் முயலே"
இதன் திரண்ட பொருள்: தகுந்த நகுலேச்சுரம் என்னும், விளங்கி வலிமை பொருந்திய பிரதான தலமாகச் சொல்லப்படும் தலத்தின் முன்னர் உலகம் உய்தல் ஆயிற்று.
இப்படி ஏராளமான செய்யுள்கள் சுழிகுள வகையில் தமிழ் இலக்கியத்தில் உண்டு.
–விந்தைகள் தொடரும்…
“