வெற்றிகரமான தோல்விகள் (2)

பள்ளியில் 6வது வகுப்புகூட தேர்ச்சி பெறாதவர் வின்சென்ட் சர்ச்சில். அதற்காக தன்னுடைய கடின உழைப்பை அவர் நிறுத்தவில்லை. பல போராட்டங்களுக்கிடையே இரண்டாவது உலகப் போரின்போது பிரிட்ட‎னின் பிரதம மந்திரி ஆனார். இன்றளவும் பிரிட்டன் மற்றும் உலகின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். 2002ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ‘பிரிட்டனின் மிகச்சிறந்த 100 தலைவர்கள்’ வாக்கெடுப்பில், அனைவராலும் மிகச் சிறந்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*****

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மிகப் பிரபலமான அமெரிக்க திரைப்பட இயக்குனர். சிறப்பு மிக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். மூ‎ன்று அகடமி விருதுகள் வென்றவர் இவர். என்றைக்கும் நல்ல வசூல் தரும் திரைப்படங்களை வழங்குபவர் என்று பெயரெடுத்தவர். ஆனால் சிறு வயதில் பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு மனநிலை கு‎ன்றிய சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு மாதம் சென்ற அவர், அதன் பிறகு என்றுமே பள்ளிக்குச் செல்லவில்லை என்றறிவீர்களா?

*****

20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறந்த பெளதீக வல்லுனர். 1921ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இருந்தபோதிலும் சிறு வயதில் அவருடைய பெற்றோர் ஐன்ஸ்டீனை மனநிலை குன்றியவர் என எண்ணினார்கள். பள்ளியில் மிகவும் மோசமாகப் படிப்பதைக் கண்டு அவருடைய ஆசிரியர் ‘நீ என்றுமே உருப்படமாட்டாய்’ என்று கூறியிருக்கிறார்.

*****

1947ஆம் ஆண்டு, ஒரு வருட ஒப்பந்தம் கூட முடிவடையாத நிலையில் பிரபல ஃபாக்ஸ் நிறுவனம் மர்லின் மன்றோவை விலக்கியது. அவர் கவர்ச்சியாக இல்லை; மேலும் அவருக்கு நடிப்பும் வரவில்லை என்று தயாரிப்பாளர் கூறிவிட்டார். ஆனால், அதற்கெல்லாம் மர்லின் கலங்கிவிடவில்லை. விடாது முயன்றார். அவருடைய முயற்சியால் 20ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மற்றும் பாப் நட்சத்திரமாகவும் திகழ்ந்தார்.

*****

ஜான் கிருஷமின் முதல் நாவல் 16 பிரதிநிதிகளாலும், 12 புத்தக வெளியீட்டு நிறுவனங்களாலும் நிராகரிக்கப்பட்டது. இதனாலெல்லாம் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிறந்த நாவலாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும் ஆகும் வரை அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. 21ஆம் நூற்றாண்டிலும் மீடியாக்கள் அவரை மிகச் சிறந்த நாவலாசிரியருள் ஒருவராக அறிவித்தன.

*****

ஹென்றி ஃபோர்ட் ஆரம்பித்த முதல் இரண்டு நிறுவனங்களும் தோல்வியை அளித்தன. இதனாலெல்லாம் அவருடைய ஃபோர்ட் மோட்டார் கம்பெனி ஆரம்பிப்பது தடைபடவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் தொழிற்சாலை உற்பத்தியில் புரட்சி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், 20ஆம் நூற்றாண்டின் சமுதாய வளர்ச்சியில் செல்வாக்கு பெற்றிருந்தார். அவருடைய அதிகளவு உற்பத்தி, சம்பள உயர்வு மற்றும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்குதல் போன்றவை "ஃபோர்டிஸம்" என்ற நிர்வாகப் பள்ளி ஆரம்பித்திட வழி வகுத்தது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் புகழ்பெற்ற முதல் மூன்று பணக்காரர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

*****

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ‘டோயோடா’ கூட்டு நிறுவனம் நடத்திய பொறியியலாளருக்கான நேர்முகத் தேர்வில் நிராகரிக்கப்பட்டார் சாய்சீரோ ஹோன்டா. அவர் வீட்டிலேயே தயாரித்த மோட்டார் வாகனங்களை அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் வாங்கும்வரை வேலையில்லாமல் இருந்தார். பிறகு தன்னுடைய சொந்த நிறுவனமான ஹோன்டாவை ஆரம்பித்தார். அந்நிறுவனம் இன்று உலகிலேயே மிக அதிகமாக மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. அது மட்டுமல்லாது மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளர்களான ஜீஎம் மற்றும் கிருஸ்லர் நிறுவனங்களை விட அதிக லாபம் ஈட்டும் வாகனத் தயாரிப்பாளர் என்று பெயர் பெற்றிருக்கிறது. உலகில் 437 இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ள ஹோன்டா நிறுவனம் அன்றாட வாழ்விற்குத் தேவையான வாகனங்கள் முதல் பந்தயத்தில் கலந்து கொள்ளும் கார்கள் வரை தயாரிக்கிறது. 

*****

அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மின்சாரப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர் அகியோ மொரீடா. அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான அரிசியை சமைக்கும் பாத்திரம் 100க்கு மேல் விற்பனையாகவில்லை. அரிசி அதிகமாக வெந்து போனதே அதற்குக் காரணம். ஆனால், அவருடைய விடாமுயற்சியினால் நிறுவனத்தின் வருமானம் ஆண்டொ‎ன்றிற்கு 660 கோடி அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது.

*****

About The Author