விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (23)

4. யோகம் என்பது செயலில் திறமை
 
4.7. தன்னை ஆளும் திறன்

வாழ்க்கையில் வெற்றி பெற, சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்க சுய முன்னேற்றப் பயிற்சியாளர்கள் பல விஷயங்களைப் பட்டியல் இடுவார்கள். கடின உழைப்பு, தோல்வி கண்டு துவளாமை, நேர நிர்வாகம், பயிற்சி, மனித வள நிர்வாகம் இப்படி. அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாவற்றையும் ஒரு குடைக் கீழ் அடக்கி விடலாம்; சுய நிர்வாகம் என்பதே அது. "தன்னையாளும் திறன்" என்பார் மகாகவி. விநாயகர் நான்மணி மாலையில், அவர் கடமைகள் என்று நான்கைச் சொல்கிறார்.

1. தன்னைக் கட்டுதல்,
2. பிறர் துயர் தீர்த்தல்,
3. பிறர் நலம் வேண்டுதல்,
4. உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.

(அட, நம்ம கர்ம யோகம்தான்!)

அவர் விநாயகரிடம் கேட்பது:

"தன்னையாளும் சமர்த்தெனக் கருள்வாய்
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா!
தன்னைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்!"

கர்ம யோகத் தொடர்பில் தன்னையாளும் திறன் பற்றி சுவாமிஜியின் கருத்து இது:

…தன்னை ஆளும் திறன் படைத்தவனைப் புறப்பொருள் எதுவும் பாதிக்காது. அவனுக்கு அடிமைத் தளை எதுவும் கிடையாது. அவன் மனம் சுதந்திரமாக இருக்கிறது. அத்தகைய மனிதனே மண்ணில் நல்ல வண்ணம் வாழத் தகுதி பெற்றவன்! உலகத்தைப் பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. "உலகம் கொடியது; துன்பமயமானது" என்பார்கள் அவநம்பிக்கையாளர்கள். "எத்தனை கோடி இன்பம்!" எனப் பாடுவார்கள் உற்சாகிகள். தன் மனத்தை வசப்படுத்தாதவர்களுக்கு உலகம் என்பது துன்பமயம். தன்னையாளும் திறம் பெற்றவர்களுக்கு "உலகு இன்பக்கேணி!" அவர்களைப் பொறுத்தவரையில், எல்லாம் அதது இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. ஒத்திசைவாக இயங்குகிறது இந்த உலகம். இந்த உலகம் நரகம் எனச் சோக கீதத்தில் ஆரம்பிக்கும் பலர், தன்னையாளும் திறம் பயின்று வெற்றியடைந்ததும், இந்த உலகம் சொர்க்கமயம் என உற்சாகக் கீதம் இசைப்பார்கள். நாம் உண்மையான கர்ம யோகிகளாக இருந்து நிறைநிலையை அடைய விரும்பினால், நமது பயிற்சியில் எந்த நிலையிலிருந்து ஆரம்பித்தாலும், முழுக்க முழுக்கத் தன்னல மறுப்பு என்னும் இடத்தில்தான் வந்து நிறைவு காண்போம். நான் என்னும் அகந்தை அழிந்தபின் இந்த உலகமே சொர்க்க லோகமாக, ஆசீர்வதிக்கப்பட்ட பூமியாகக் காட்சி தரும்! இதுவே கர்ம யோகத்தின் பூரண லட்சியம்! நடைமுறை வாழ்க்கையின் நிறைநிலையும் இதுவே!

கர்ம யோகப் பயிற்சியாளர்கள், தினமும் நினைவு கொள்ள வேண்டிய மகாமந்திரமாக அமைந்துள்ளது, பாரதியாரின் பின்வரும் பாடல்.

"அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனிஅரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல், என்றிவை அருளாய்!
குறி குணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!"

தன்னையாளும் திறனின் வரிவடிவம் இந்தப் பாடல்.

(Ref: C.W – Volume – 1, Page – 92).

— பிறக்கும்

About The Author