விரல் தொட்ட வானம் (13) – மழை

மழை

தரை இறங்கும்
ஒவ்வொரு முறையும்
சுத்தமாகவே இருக்கிறது
மழை.
கொஞ்சம் மேலே ஏறினாலும்
அழுக்காகி விடுகிறான்
மனிதன்.

தன் உண்டியலில் விழும்
துளி நாணயத்தைங்களையும்
சேமித்துக் கொடுக்கும்
செலவு செய்யும்
மனிதருக்கு
வெடிப்பு விழுந்த நிலம்,
மழைக் காலத்திற்குப் பிறகு.

இங்கே திருடர்கள் அதிகம்

ஒரு உயரமான மணல் மேட்டில்
அமர்ந்திருக்கிறேன்
மற்றவர்களைவிட.
காணப் பொறுக்காதவர்களின்
கைகள்
அள்ளிக்கொண்டு போகும் செயலை
தொடர்ந்து நிகழ்த்துவதை உணர்கிறேன்
எனது உயரம்
குறையும் பொழுதுகளில்.
மற்றவர்களின் பள்ளங்களை
எனது மேடுகள்
சமன் செய்யுமெனில்
இறங்கி விடத் தயார்தான்
இன்னும் கீழாய்.
கேட்டுப் பெறத்தான்
யாரும் தயாராய் இல்லை.
ஏனெனில்
இங்கே திருடர்கள் அதிகம்.

வெப்பம்

உணர்வுகளில்
அமரும் குளிர்
ஊடுருவல் நிகழ்த்தத் தள்ளுகிறது
எண்ணங்களை.
வெப்பம் தேடியலைகிற
நாட்களில் தொடங்கி
அதிகரித்து விடுகிறது
குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையில்
ஒன்று கூடுதலாக.

–தொட்டுத் தொடரும்…

About The Author