சிபி (41)

"முந்தாநாள் கட்சி ஆரம்பித்தவர்களெல்லாம் எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்கள். நம்மால் ஏன் முடியாது? மத்தியில் அப்பழுக்கற்ற ஆட்சியை வழங்கிய மொரார்ஜி தேசாய், வி பி சிங், தேவ கவுடாவுடைய கட்சியினர் நாம். மாநிலத்தில் மாசற்ற ஆட்சியைத் தந்த காமராஜரின் வாரிசுகள் நாம். யார் யாரோ ஜாதிக்கட்சி ஒன்றை ஆரம்பித்துக் காமராஜரின் பெயரை துஷ்பிரயோகம் செய்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாகர்கோவில் இடைத்தேர்தலில் காமராஜரை ஜெயிக்க வைத்த ஒரு ஒப்பற்ற தலைவரை மாநிலத் தலைவராய்க் கொண்டிருக்கிற நாம், பழைய பல்லவிகளையே பாடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். தமிழ் நாட்டில் திரும்பவும் காமராஜ் ஆட்சி மலர வேண்டும். அதை நாம் தான் செய்து முடிக்க முடியும். இந்திராக் கட்சிக் காரர்களுக்கு இந்திரா, ராஜீவ், சோனியா, ப்ரியங்கா, ராபர்ட் வத்ரா, ராகுல் இவர்கள் தான் தலைவர்கள். காமராஜர் பெயரைச் சொன்னால் தான் தமிழ்நாட்டில் வியாபாரம் நடக்குமென்பதால் அவர்கள் காமராஜரின் நாமத்தை அவ்வப்போது உச்சரித்துக் கொள்வார்கள். நெருக்கடி நிலை காலத்தில் காமராஜர்
மரணப்படுக்கையில் விழாமலிருந்திருந்தால், மொரார்ஜி, ஜே பி முதலிய தியாகத் தலைவர்களோடு காமராஜரும் இந்திராவால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருப்பார் என்கிற உண்மையை அவர்கள் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகமூடியை மக்கள் மன்றத்தில் நாம் கிழிப்போம்."

"இது போன்ற எழுச்சி மிக்க செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகிற தகுதியை சில வாரங்கள் முன்பு வரை இழந்திருந்தேன்" என்று தயக்கத்தோடு வாயைத் திறந்தார் கோவை சண்முகம்.

"ஆனால், நம்முடைய மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் அவர்கள், இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்கிற குறளுக்கேற்ப, எனக்கும், பீட்டர் அவர்களுக்கும், அறிவரசன் அவர்களுக்கும் மரியாதை கொடுத்து உயரத்தில் அமர்த்தி, கட்சியில் மீண்டும் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வழி செய்திருக்கிறார்கள். அதற்கு நாங்கள் மூவருமே கைமாறு செய்ய வேண்டும். அறிவரசனும், பீட்டரும் ஏற்கனவே கைமாறு செய்து விட்டார்கள். அறிவரசன் சென்னையில் மதுப்பிரியர்கள் மனந்திருந்துகிற நிகழ்ச்சி நடத்திப் புண்ணியம் சேர்த்துக் கொண்டார். பீட்டர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த செயற்குழுக் கூட்டத்தை மதுரையில் ஏற்பாடு செய்து நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்க அஸ்திவாரம் போட்டுவிட்டார். என்னுடைய பங்குக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? மனதில் ஒரு எண்ணம் இருக்கிறது. என்னுடைய எண்ணத்தை ஒரு விண்ணப்பமாக்கி நம் மாநிலத் தலைவர் முன்னே வைக்கிறேன். ஐயா, அறுபத்தொன்பதாம் வருடம், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை உங்களுடைய ஊரில், நாகர்கோவிலில், தேர்தலில் நிற்கவைத்து நீங்கள் ஜெயிக்க வைத்தீர்கள். அதே போன்ற ஒரு புண்ணிய காரியத்தை செய்ய ஒரு நல்ல வாய்ப்பை எனக்குத் தாருங்கள் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மூன்றாண்டுகளில் வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தின் ஒரு தொகுதியில் தாங்கள் போட்டியிட வேண்டும். தங்களை ஜெயிக்க வைக்கிற நல்ல காரியத்தை நான் செய்ய வேண்டும். தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சர், கோவையின் ஒரு தொகுதியிலிருந்து வரவேண்டும்."

சண்முகம் அப்ளாஸ்களை அள்ளிக்கொண்டு, ஏற்புரை நிகழ்த்துகிற வேலையைத் தலைவருக்குத் தந்து விட்டார்.

மாநிலத் தலைவர், உணர்ச்சி பொங்க ஒரு பேருரை ஆற்றினார்.

"இந்த செயற்குழுக் கூட்டம், எழுச்சி மிகு கூட்டமாக மட்டுமில்லாமல், நெகிழ்ச்சி மிகு கூட்டமாகவும் அமைந்து விட்டது. கோவை சண்முகம் அவர்களின் கோரிக்கை என்னைப் பெரிதும் நெகிழ்த்தி விட்டது. அவருக்கும், பீட்டருக்கும், அறிவரசனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அதோடு, சிறுபான்மையர்ப் பிரிவு மாநிலத் தலைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், தமிழ் நாட்டில் நம்முடைய கட்சி ஆட்சியைப் பிடிக்கிற எண்ணத்தை முதன் முதலில் என் மனதில் விதைத்தவரே அவர்தான். அவர் என்னிடம் இந்த ஆட்சிப் பிடிப்பைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார். அவர் பேசியபோது எல்லாம் நான் அசட்டையாய்த் தானிருந்தேன் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது நிலைமை வேறு. நீங்களெல்லாம் ஆற்றிய உணர்ச்சியுரைகளைக் கேட்ட பின்னால் எனக்குள் ஓர் உறுதி உருப்பெற்று விட்டது.

நாளையிலிருந்து நாம் உழைக்கத் தொடங்குவோம். வேண்டாம். இன்றைக்கே உழைக்கத் தொடங்குவோம். தமிழ் நாட்டின் தலையெழுத்தை மாற்றுவோம். திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்று இருக்கிறது என்று மக்களுக்குக் காட்டுவோம்.

இங்கே ரெண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. மக்கள் அந்தக் கட்சிகளை விரும்பியா ஓட்டுப்போட்டு ஆட்சியிலமர்த்துகிறார்கள்? இல்லை. அஞ்சு வருஷம் ஆண்டு இவர்கள் கெடுத்தார்கள், அடுத்த அஞ்சு வருஷத்தை அவர்களுக்குக் கொடுத்துத் தான் பார்ப்போமே, என்று வேறு வழியில்லாமல் தான் ஓட்டுப் போடுகிறார்கள். அவர்களும் வந்து, அவர்கள் பங்குக்குக் கெடுத்து விட்டுப் போகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு கூட நம்ம மக்கள் ஓட்டுப் போட்ட அசிங்கமெல்லாம் தமிழ் நாட்டில் நடந்தது.

இந்த ரெண்டு கட்சிகளையும் அகற்றிவிட்டுப் பெருந்தலைவர் காமராஜருடைய பொற்கால ஆட்சியைத் தமிழ்நாட்டில் திரும்பவும் கொண்டு வர, சக்திலிங்கம் சொன்னமாதிரி, நம்மால் மட்டுமே முடியும். லஞ்ச ஊழலற்ற ஆட்சியை நாம் அமைப்போம். மணற் கொள்ளையும் பகற் கொள்ளையும் இல்லாத ஆட்சியை அமைப்போம். இலவசங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம். மின்வெட்டு இல்லாத ஆட்சியை அமைப்போம்.

ஒரே ஒரு நாள் இந்த இந்தியா முழுவதற்கும் சர்வாதியாகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், முதல் வேலையாக மதுக்கடைகளையெல்லாம் மூடுவேன். நஷ்ட ஈடு கொடுக்காமல் மூடுவேன் என்று மஹாத்மா காந்தி முழங்கினார். நாம் ஆட்சியமைத்ததும் மதுக்கடை மூடலைத்தான் முதல் வேலையாய்ச் செய்வோம்.

பெருந்தலைவர் காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளாயிருந் தவர்களெல்லாம் இன்றைக்கு ஸீனியர் ஸிட்டிஸன்கள் ஆகிவிட்டார்கள். ஆனாலும் நூறு சதவீத கல்வித் தேர்ச்சி தமிழகத்தில் இன்னும் வரவில்லை. நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் நூறு சதவீதம் லிட்ரஸி இருக்கிறது. இங்கே இல்லை. மலையாளிகளும் தான் குடிக்கிறார்கள். ஆனால் குடித்துக் கொண்டே படிக்கிறார்கள் நம்முடைய தமிழன் குடிப்பதோடு நிறுத்திக் கொள்கிறான். சந்தான கிருஷ்ணன் சொன்ன மாதிரி பள்ளிக்கூட பெஞ்ச்சை விற்று பெக் அடிக்கிற மாணவனுக்குப் படிப்பு எங்கே ஏறும்! லஞ்சம் கொடுத்துத் துணைவேந்தர் பதவியை வாங்குகிற போலிக் கல்வியாளர் களுக்குக் கல்வியின் மேலோ மாணவர்களின் மேலோ என்ன அக்கறை இருக்கும்? தமிழ் நாட்டில் எழுதப்படிக்கத் தெரியாதவனே இல்லை என்கிற மேன்மையை நம்முடைய ஆட்சி கொண்டு வரும்.

மஹாத்மா காந்தி சொன்னார், நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு கழுத்து நிறைய ஆபரணங்கள் அணிந்து ஒரு பெண் தன்னந்தனியாய் சாலையில் நடந்து பத்திரமாய்த் தான் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் பயமின்றிப் போய்ச் சேருகிற சூழ்நிலை கனிந்தால், அதுதான் உண்மையான சுதந்திரம் என்று. அந்த உண்மையான சுதந்திரம் தமிழ் நாட்டில் மலர இன்று முதல் நாம் உழைக்க ஆரம்பிப்போம்.

நண்பர்களே, காந்திஜி கனவு கண்ட ராம ராஜ்யம் இந்தியாவில் மலர்கிறதோ இல்லையோ, நாம் கனவு காணுகிற காமராஜ் ராஜ்யம் தமிழ்நாட்டில் அமைந்தே தீரும். இன்ஷா அல்லா, கட்டாயம் அமைந்தே தீரும்."

(தொடர்வேன்)

About The Author