உறவுப்பாலம் (1)

மாணவர்கள் தேர்வெழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அபூர்வமான இப்படி நாட்களில் தான் வகுப்பில் நமக்கு ஓய்வு வாய்க்கிறது. தொண்டை வறள கத்த வேண்டியது இல்லை. (”கடைசி பெஞ்சுவரை கேக்கல்ல சார்.”) நமக்குத் தலைவலி என்று பாடம் நடத்த முடியாமல், ”நேத்து நடத்தியதை சத்தம்போடாமல் படிச்சிட்டிருங்கடா,” என்று விட்டாலும், அஞ்சே நிமிடத்தில் சளப் சளப்பென்று மழைத் தண்ணியில் அளைகிறாப் போல பசங்கள் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

அவர்கள் உள்ளே வார்த்தைகள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அடக்க அவர்கள் சிரமப்படுகிறார்கள். பொங்கிவரும் தண்ணீர்க் குழாயில் கைவைத்து மூட, பீரிட்டுச் சிதறுகிறது தண்ணீர். வயசு அப்படி. ஒலிகளை ரசிக்கிற வயசு… மௌனத்தில் எதையோ இழந்தாப் போல அவர்கள் உணர்கிறார்கள். ஒலிகளற்ற நிலை மரணத்தின் ஒத்திகை அவர்களுக்கு.

என்னில் ஒலிகள் அடங்க ஆரம்பித்து, மௌனம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்று பட்டது கிரிதரனுக்கு. கைச்செலவில் சிக்கனம் வந்துவிட்டாப் போல, வார்த்தைகளையும் குறைவாக, தேவைப்படி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறேன். வடிகட்டி சாறெடுத்துத் தர ஆரம்பித்திருக்கிறேன். அரைக்கைச் சட்டை தவிர்த்து இப்போது முழுக்கைச் சட்டை, உடம்பை அதிகம் மூடிக்கொள்கிறேன். ஆசைப்படி அல்ல, நான் தேவைப்படி செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்…

வயது அதிகம் என்பது அல்ல. ஆனால் நான் இப்போது இளைஞன் அல்ல என்பதன் அடையாளம் அன்றி இது வேறென்ன, என நினைத்துக் கொண்டான். பார்ப்பது ஆசிரியர் உத்தியோகம். இதில் பசங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொடுக்குமுன் நான் அதை நம்ப வேண்டும். நான் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். பசங்கள் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை மாத்திரம் அல்ல, அவரையும் தானறியாமல் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்… என்கிற பிரமை நமக்கு இருக்கிறது. மாதா, பிதா, குரு, தெய்வம்… என அவர்கள் உலகம் விரிகிறதாக ஐதிகம்.

தனக்குள் நிர்ப்பந்தித்துக் கொண்ட நியதிகள். ஒழுங்குகள் என்ற சட்டத்துக்குள் அடைபட்ட ஆசிரியர் உத்தியோகம். அதிராத சிரிப்பு. பெரியோரைக் கண்டால் வணங்குதல். கூடிய அளவு எளிமை. சுடுசொல் தவிர்த்தல். இனிய முகம். பாடத்துக்கு இடையே இடையே மெலிதான நகைச்சுவை, யாரையும் காயப்படுத்தாத அளவில்… சில ஆசிரியர்கள் வீட்டுப் பிரச்னைகளை மனசில் இருந்து வெளியேற்ற முடியாமல் உருமியபடி வகுப்புக்குப் போய் மாணவர்களிடம் மூர்க்கமாய் கெடுபிடி காட்டுகிறார்கள். ”வீட்டுப்பாடம் எழுதல்லியா, போ வெளிலபோயி மண்டி போடு” என அவனை அவமானப்படுத்தி சுருங்க வைக்கிறார்கள்.

கிரிதரன் வீட்டிலேயே சாதுதான். அவனது சைக்கிள் கூட வருத்தப்பட்டு நொடித்துக்கொண்டு முனகியது இல்லை. அப்பா காலத்து பழைய ஹெர்குலஸ். எண்ணெய் போட்டு துடைத்து பளபளவென்று வைத்திருப்பான். அவனையும் சைக்கிளையும் பிரிக்க முடியாதபடி அடையாளம் வந்திருந்தது. சைக்கிள் இல்லாமல் அவன் தெருவில் வந்தால், பஸ் பிடித்து வெளியூர் போகப்போகிறான் என்று அர்த்தம்.

மாணவர்கள் மும்முரமாய்த் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வகுப்பே மகா அமைதியாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. கேள்வித்தாளை, விடை எழுதும் தாளைப் புரட்டுகிற சரசரப்பு தவிர வேறு ஒலிகள் இல்லை. கேள்விகள் புரிந்த அளவில் அல்லது புரியாத அளவில் அவர்கள் முகத்தில் ஆசுவாசம் மற்றும் விசனக் குறிகள்.

நான் மாணவனாக இருந்தபோது எப்படி இருந்தேன், என கிரிதரன் நினைத்துப் பார்த்தான். அபார பயம் இருந்தது எல்லாத்திலும். வாத்தியாரிடம் பயம். அப்பாவிடம் பயம். அதனாலேயே அம்மாவிடம் பயம் இல்லை. புதிய எந்தச் செயலுக்கும் தயக்கம். எந்தப் புது நபரோடும் சட்டெனப் பழகிவிடாத சபைக்கூச்சம்.

அந்தக் கூச்சமே இடைஞ்சலான தருணம் ஒன்று. பள்ளியிலேயே சூட்டிகையான அம்சவேணி. விலுக்கென்ற நொடிப்புடன் அவள் நடை… குதிரை தோற்றது. வேணி என்றாலே குதிரை தானே?… என நினைக்க புன்னகை வந்தது. தான் புன்னகைத்ததை பசங்கள் பார்த்திருப்பார்களோ என்று படபடப்பாகி விட்டது. ஆனால் பையன்கள் தேர்வு மும்முரத்தில் இருந்தார்கள்.

அம்சவேணி ஊரில் இருந்து வந்திருக்கிறாள்…

கேட்ட கணம் உடம்பில் ஒரு சிலீர் ஓடியது பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று… கல்யாணம் என்றே அவளுக்கு மதுரையில் வைத்து நடந்தது. அப்படியே புனே போய்விட்டாள், மாப்பிள்ளை ஊருக்கு. சிவப்பாய் அழகான ராஜகுமாரன், என்றார்கள் பார்த்தவர்கள். அவன் கல்யாணத்துக்குப் போகவில்லை. அம்மா அப்பாவும் போகவில்லை.

பக்கத்து சாமியாண்டவர்புரத்தில் கல்லூரி படிக்கையிலேயே வரன் குதிர்ந்து, சட்டென அவள் அந்த கிராமத்து எல்லைகளைத் தாண்டி சிறகை விரிச்சாசு. உலகம் துச்சமாய்ப் பட்டிருக்க வேண்டும். இளைஞர் கூட்டம் விக்கித்துத் திகைத்தது.

கிரிதரன் மொட்டைமாடியில் இருந்து அந்த எதிர்வரிசை வீட்டை, அம்சவேணியின் வீட்டைப் பார்த்தபடி அப்படியே நின்றான். திருப்பதி வரிசையாய் ‘ஜரகண்டி ஜரகண்டி’ என, காலம் என்னதான் எல்லாரையும் நெட்டித் தள்ளி நகர்த்திப் போனாலும், சில கணங்கள் அப்படியே மனதில் உறைந்து, ஆணியடித்து நின்று விடுகின்றன. நினைவுத் தடங்கள், சில சமயம் தழும்புகள். தணலாய் உள்ளே கிடக்கும் நினைவுகள் திரும்ப வேறொரு தருணத்தில் குபீரென்று பற்றிக் கொள்ளவும் நேர்கிறது.

யாருமே இல்லை கூட. மொட்டை மாடி. இருள். தனிமை. அதோ அம்சவேணி ஓடி ஆடித் திரிந்த வீடு. இருளில் கிடக்கிறது. வாசலில் வாழைமரம். அவர்கள் எல்லாரும் கல்யாணத்துக்குப் போயிருக்கிறார்கள்… திடீரென்று தன் உடம்பு குலுங்குவதை உணர்ந்தான் கிரிதரன். அவனுக்கே விசித்திரமாய் இருந்தது. உள்ளே என்னவோ புரள்கிறாப் போலிருந்தது. வாயை விரித்து ஓவென அழ ஆரம்பித்தான் கிரிதரன்.

(தொடரும்)

நன்றி: கல்கி தீபாவளி மலர் 2011  “

About The Author