விமானம் முழுவதும் பொன் வேயப்பட்டிருந்த கோவில். தமிழ்நாட்டிலேயே மிகுதியான அளவில் விலைமதிப்பற்ற மணிகளையும் நகைகளையும் கவன்களையும் கொண்டிருந்த ஒரே கோயில்.
இக்கோயிலில் சதய விழா, கார்த்திகை விழா, பெரிய திருவிழா முதலியவை பண்டை நாளில் நடைபெற்றன. பெரிய திருவிழா எனப்படும் பிரம்மோற்சவம் "ஆட்டைத் திருவிழா" என அழைக்கப்பட்டது. வைகாசியில் நடைபெற்ற இவ்விழாவில் இராசராச நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் எனும் விழா 18 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இக்கோயில் குறித்து பிரகதீஸ்வர மகாத்மியம், சமீவன க்ஷேத்ரமான்மியம் எனும் தலபுராண நூல்கள் சமஸ்கிருதத்தில் படைக்கப்பட்டுள்ளன. இக்கோயில் குறித்து கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர் "பெருவுடையார் உலா" பாடியுள்ளார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள், இராசராச சோழன் பொறித்து வைத்துள்ள 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் அனைத்தையும் அச்சிட்டு "சிவபாதசேகரன் கல்வெட்டுகள்" என்னும் நூலை வெளியிட்டதுடன் இங்கு பூசைகள் தடையின்றி நடைபெற நிரந்தர வைப்புநிதி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
வருடந்தோறும் இராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று இக்கோயிலில் சுவாமிக்கு வில்வ இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்திக் கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலங்கொழுந்து, மாங்கொழுந்து, பலாக் கொழுந்து, விளாக் கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி தைலம், திரவியப் பொடி, வாசனைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், நவகவ்யம், பசுந்தயிர், மாதுளை முத்து, பலாச்சுளை, அன்னாசி, திராட்சை, விளாம்பழம், களஞ்சிபழம், நார்த்தம் பழச்சாறு, சாத்துக்குடி சாறு, எலுமிச்சம் பழச்சாறு, கருப்பஞ்சாறு, இளநீர், சந்தனம், அன்னம், பன்னீர், ஏகதாரை, சகஸ்தாரை, சிங்கேதனம், வலம்புரி சங்கு, கங்கா ஜலம், சொர்ணாபிஷேகம் உட்பட 47 வகையான அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.
திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை போன்ற சிறப்பு நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிரதோசம், சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்கு உகந்த நாட்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இராஜராஜேஸ்வரத்தின் பெருமைகளில் சிலவற்றைத்தான் கூறியிருக்கிறோம். உண்மையில் இக்கோவிலின் பெருமை சொல்லிலடங்கா!
உண்மையல்லாத சில ‘பொய்’திகளும் ராஜராஜேஸ்வரத்தைப் பற்றி சொல்லப்படுகின்றன. அவற்றை இப்போது காண்போம்.
பெரிய கோவில் நந்தி நாள்தோறும் வளர்ந்து வருவதாகவும் அது மேலும் வளர்வதைத்
தடுக்க அதன் மேல் ஆணியடித்தார்கள் என்று சொல்வதும் கற்பனை. உண்மையில் வெளியில் உள்ள பெரிய நந்தி ராஜராஜன் கட்டியதல்ல. அது நாயக்கர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது (இந்த நந்தி 25 டன் எடையுடன், 12 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.) முந்தைய நந்தி, பிரகாரத்துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்.
தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் நிழல் கோவிலில் விழாது என்று சொல்கிறார்கள். அது தவறு. பெரிய கோயில் கட்டப்பட்டவுடன், அதன் வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்துப் பிரமித்த தஞ்சை மக்கள் கவலையுடன் "கோபுரம் விழாமல் இருக்குமா? என்று
கேட்டதற்குத் தலைமை ஸ்தபதி தமாஷாக "பயப்படாதீர்கள்! அதன் நிழல்கூடக் கீழே
விழாது!" என்றாராம். அதை நிஜம் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்!
கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்.. வெயில் இருந்தால்!!
பெரிய கோவில் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன் என்று
கூறப்படுகிறது. இது உண்மையில்லை. உண்மையில் சிகரம் பல கற்களால் ஆனது.
ராஜராஜனுக்கிருந்த நோய் குணமாவதற்காகவே அவன் அந்தக் கோவிலைக் கட்டியதாகச் சொல்வது பொய். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ராஜராஜனின் குரு கருவூர்த் தேவர் துப்பிய வெற்றிலை எச்சிலால் இந்தக் கோவில் லிங்கம் நிற்பதாகக் கூறுவது கற்பனை. ராஜராஜனுக்கும் கருவூர்த் தேவருக்கும் உறவிருந்ததற்கான சான்று எதுவும் இல்லை.
ஒரு ஓவியக் காட்சியில் ராஜராஜனும் கருவூர்த் தேவரும் இணைந்து இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மைக்குப் புறம்பானது. அக்காட்சியில் இருப்பவர்கள் அவர்கள் அல்ல. ராஜராஜனுக்கும் கருவூர்த்தேவருக்கும் தொடர்பிருப்பதற்கான சான்றும் இதுவரை இல்லை.
உடையாளூரில் இராஜராஜருக்குப் பள்ளிப்படை உள்ளதாகச் சொல்லப்படுவதும் தவறான
செய்தியாகும். அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு ராஜராஜன் பெயரால் இருந்த கட்டமைப்புப் பற்றி மட்டுமே கூறுகிறது.
ரரஜராஜேஸ்வரம் விமானத்திலிருந்து ராஜராஜன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்திகளும் உண்மையல்ல.