நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட செய்ததை வெற்றிகரமாக முடித்து விட்டீர்களா என்பதில்தான் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு வெறும் கல்வியறிவு இருந்தால் மட்டும் போதாது. உங்களுடைய இலட்சியத்தை நோக்கிய முயற்சியில் ஏற்படக்கூடிய சாதக, பாதக சூழ்நிலைகள், பிரச்சினைகள் போன்றவற்றை வெற்றிகரமாக கையாளக்கூடிய திறன்களும் வேண்டும். இந்த திறன்கள் எல்லாம் கல்வி நிலையங்களில் கற்றுத் தரும் விசயமில்லை. அதனால்தான் அறிவாளிகளை சர்வசாதாரணமாக உருவாக்கித் தருகின்ற தலைசிறந்த கல்வி நிலையங்களால் கூட ஒவ்வொரு முறையும் சில வெற்றியாளர்களைக் கூட உருவாக்கித் தர முடிவதில்லை!
கல்வி நிலையங்களிலிருந்து "அறிவாளிகள்" என்ற முத்திரையோடு வருபவர்கள் பிறரை தந்திரமாக ஏமாற்றுவது, அடுத்தவர் காலை வாரி விட்டு மேலே வருவது, பிறருடைய திறன், திறமைகளை மறுத்து தன் அதிகார பலத்தால் அடக்கி வைப்பது, பிறருடைய செயல்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களின் மூலம் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதையும், இலட்சியங்களை நோக்கி முன்னேறுவதையும் வெற்றியாக நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் வெற்றி என்பது இதுவல்ல!
பார்வையாளர்கள் நிரம்பி வழிந்த அரங்கத்தில் ஒரு அமெரிக்கர், ஜப்பானியர், இந்தியர் மூவரும் தங்களுடைய திறன்களை காட்டுவதற்காக வந்திருந்தனர். அவர்களின் முன் ஒரு சிறிய இரும்புத்துண்டு வைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கர் அந்த இரும்புத்துண்டை மெல்லிய, உருண்டை வடிவ ஊசியாக மாற்றிக் காட்டினார். அடுத்து அமர்ந்திருந்த ஜப்பானியரோ அந்த மெல்லிய ஊசியின் மேல்புறத்தில் ஒரு ஓட்டையை போட்டுக் காட்டினார். பார்வையாளர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்தது.
அடுத்து நம்மவர் – இந்தியர் தன் திறனைக் காட்ட வேண்டும். இரும்புத் துண்டை ஊசியாக்கி அதில் ஓட்டையும் போட்டாயிற்று. அதில் வேறு என்ன செய்து இந்தியர் தன் திறனை காட்டப் போகிறார் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஜப்பானியரிடமிருந்து ஊசியை வாங்கிய இந்தியர் சிறிது நேரத்திற்கு பின் அதை நடுவரிடம் திருப்பிக் கொடுத்தார். வாங்கிப் பார்த்த நடுவர் தலைசுற்றி கீழே விழுந்து விட்டார். அப்படி என்ன செய்திருந்தார் என்கிறீர்களா? ”மேட் இன் இந்தியா” என அதில் முத்திரை பதித்திருந்தார். இந்தியரின் இந்த செயலை புத்திசாலித்தனம் என சொல்லிக் கொண்டும், திறமை என அங்கலாய்த்துக் கொண்டும் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் இது காரியம் சாதிக்கும் வித்தையா என்பதை யோசிக்க வேண்டும்.
உங்களின் வெற்றி எவரையும் பதைபதைக்க வைக்கக்கூடாது. பலரும் பாராட்டும்படியாக இருக்க வேண்டும். மேற்சொன்ன கதையில் இந்தியரைப் பொறுத்தவரை அந்தச் செயல் வெற்றியாக இருக்கலாம். அதற்காக மற்ற இருவரின் திறன்களையும் தன்னுடையதாக அவர் ஆக்கிக் கொள்வது ஏற்புடையதா? உங்கள் வீட்டில் கொள்ளையடித்த ஒருவன் எவரிடமும் பிடிபட்டு விடாமல் தப்பி விட்டால் அவனைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய வெற்றி. ஆனால், உங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. திருடனின் வெற்றியை விட உங்களுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி மட்டும்தான் நீங்கள் நினைப்பீர்கள். எனவே பிறருடைய இழப்பிலிருந்து உங்களுடைய வெற்றியை தேடி எடுக்காதீர்கள். உங்கள் கழுத்தில் விழும் வெற்றிமாலை புன்னகைப் பூக்களால் மட்டுமே பின்னப்பட்டிருக்க வேண்டும். புகைச்சல்களால் பின்னப்பட்டிருக்க ஒருபோதும் இடம் தராதீர்கள். இன்றைய பல வெற்றிகள் பிறருடைய இழப்பீடுகளில் இருந்து பெறப்படுவதால்தான் அவைகள் எல்லாமே ஏற்க முடியாத விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்கின்றன. இலக்கியம், சினிமா என துறை சார்ந்தவைகளுக்கு தரப்படும் விருதுகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
அழகிய ரோஜா தோட்டத்திற்குள் செல்கிறீர்கள். அங்கே ரோஜா மலர்கள் காற்றில் உதிர்ந்து கிடப்பதை பார்க்கிறீர்கள். உங்கள் என்ணத்தை “வாச ரோஜா வாடிப்போகலாமா?” என எழுதி அதனருகில் வைக்கிறீர்கள். அதை பார்ப்பவர்களிடமிருந்து உங்கள் ரசனைக்கு பாராட்டு மாலையோ, மழையோ கிடைக்கும். அதையே கொஞ்சம் பிசகி “வா சரோஜா வாடி போகலாமா?” என எழுதி வைத்தால் என்னவாகும்? பாராட்டு மாலை அடிதடி மாலையாகவும், பாராட்டு மழை உதை மழையாகவும் மாறிவிடும். இரண்டும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. எனவே உங்களுடைய எந்த வெற்றியிலும் எதிரியை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். ஒருமுறை உங்களின் வெற்றிக்கு எதிர்குரலை எழுப்பும்படியாக ஒரு எதிரி உருவாகி விட்டால் அதன்பின் வாழ்நாள் முழுவதும் அந்த எதிரியை சமாளிக்கவே நேரத்தை செலவு செய்ய வேண்டியதாகி விடும். மற்றவர்களின் திறன்களின் மேல் உங்களின் வெற்றிக்கோட்டையை கட்ட முயலாதீர்கள். அடுத்தவர்களின் திறன்களை சுரண்டாத வகையில் உங்களின் இலட்சியத்தை சென்றடைவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு செயலையும் அதன் பொருட்டே அமைத்துக் கொள்ளுங்கள். இதுதான் சரியான "காரியம் சாதிக்கும் வித்தை" ஆகும்.
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் தொலைபேசியின் சாதனையை அப்போதைய சவூதி மன்னரிடம் விளக்கிக் கூறி நாடு முழுவதும் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனை அறிந்த மத போதகர்கள் மனிதனின் குரல் கம்பிகளில் எப்படி வரும்? இது ஏதோ சாத்தானின் செயலாகப்படுகிறது. எனவே அதை நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என மன்னரிடம் முறையிட்டார்கள்.
மத பெரியவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது. அதேநேரம் அவர்களின் அறியாமைக்காக ஒரு அத்தியாவசிய கண்டுபிடிப்பை நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வராமலும் இருக்க முடியாது என்ற இக்கட்டான சூழ்நிலை மன்னருக்கு ஏற்பட்டது. மன்னர் நினைத்திருந்தால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் நினைத்ததை எவர் பேச்சையும் கேட்காமல் செயல்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. இங்குதான் காரியம் சாதிக்கும் வித்தை கை கொடுத்தது. அவர்களின் வழியிலேயே செல்ல முடிவு செய்த மன்னர் தன்னிடம் நாட்டிற்குள் தொலைபேசியை அனுமதிக்கக்கூடாது என முறையிட்ட மத பெரியவர்களில் ஒருவரை அழைத்து தொலைபேசியின் ஒருமுனையிலிருந்து திருக்குரானின் வாசகங்களை படிக்கச் சொன்னார். மறுமுனையில் இருந்தபடி மன்னரும், மற்றவர்களும் அவர் வாசிப்பதைக் கேட்டனர். அதன்பின் சாத்தானின் செயல் என்றால் திருக்குரானின் வாசகங்கள் கம்பியின் மூலம் வந்திருக்காதே என அவர்களிடம் விளக்கிய மன்னர் தனது நாடு முழுவதும் அவர்களின் சம்மதத்துடன் நிறுவ அனுமதியளித்தார்.
இன்னொரு நிகழ்வு சொல்கிறேன். அமெரிக்காவின் ஜார்ஜியா நகரத்தில் பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்த மார்த்தா என்ற பெண்மணி அப்பள்ளிக்கூடத்திற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவ நிதியுதவி வழங்குமாறு ஹென்றிபோர்டிடம் கேட்டிருந்தார். இது போன்ற விசயங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் ஹென்றிபோர்டுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், இப்படி நிதியுதவி பெறுகின்றவர்களால் அந்தப் பணம் எந்த அளவிற்கு உபயோகமாகப் பயன்படுத்தப்படும் என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது. அதன் காரணமாக மார்த்தாவிற்கும் நிதியுதவி செய்ய மறுத்தார். அவர் நிதி தர மறுத்ததைப் பற்றி கவலைப்படாத மார்த்தா பரவாயில்லை. ஒரு மூட்டை விதைக்கடலை மட்டுமாவது வாங்கித் தர முடியுமா? என்று கேட்டார்.
ஒரு மூட்டை விதைக்கடலை தானே. அதில் என்ன பெரிதாக செலவாகி விடப்போகிறது என்று நினைத்த ஹென்றிபோர்டு உடனடியாக வாங்கியும் கொடுத்தார். விதைக்கடலை மூட்டையோடு விடைபெற்றுச் சென்ற மார்த்தா தன்னுடைய மலைப்பள்ளி மாணவர்கள் மூலமாக அவற்றை விதைத்தும், அறுத்தும் விற்பனை செய்து இரண்டு வருடங்களில் அறுநூறு டாலர்களாக்கிக் கொண்டு மீண்டும் ஹென்றிபோர்டைச் சந்திக்க வந்தார். நீங்கள் கொடுத்த ஒரு மூட்டை விதைக்கடலையை இன்று அறநூறு டாலர்களாக மாற்றியிருக்கிறோம். நாங்கள் பணத்தை முறையாகச் செலவழிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவோம் என்று சொன்னார். அசந்துபோன ஹென்றிபோர்டு மார்த்தாவின் அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்தார். அவர் கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா? இரண்டு மில்லியன் டாலர்கள்!
பிறரைப் பாதிக்காத வகையில், மற்றவர்களும் மகிழும் வகையில் சவூதி மன்னரைப் போல, மார்த்தாவைப் போல காரியம் சாதிக்கும் வித்தையில் வெற்றிபெற பழகுங்கள். காலை வாரிவிட்டும், காக்காய் பிடித்தும் பெறுவது வெற்றி அல்ல. அப்படி பெறப்படுகின்ற வெற்றியை வரலாறு ஒருபோதும் பதிவு செய்வதில்லை. சமூகம் அங்கீகரிப்பதில்லை. இவை இரண்டும் இல்லாத ஒன்றை வெற்றியாக நீங்கள் நினைப்பீர்களேயானால் அது உங்களுடைய தவறு. எனவே உங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் திறன்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக திரட்டி காரியம் சாதிக்கும் வித்தையால் முறையான வெற்றியைப் பெறுங்கள். வெற்றியின் உண்மை பொருள் உணர்ந்து செயல்பட்டு பாருங்கள். உங்கள் வாசல் கதவும் வெற்றியால் தட்டப்படும்.
மிக அருமை
very nice
Very Very nice article…