படித்ததில் பிடித்தது

சுவையான சம்பவங்கள்

"ஒரு முறை தாயைச் சுற்றி வலம் வந்து வணங்கினால், ஆயிரம் முறை கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். 90 வயதான என் தாயை நான் இன்னும் தினமும் வணங்கி வருகிறேன்…” என்று கூறிய வாரியார், அவையோரை நோக்கி, "எத்தனை பேர் தாயை வணங்குகிறீர்கள்?" எனக் கேட்டார்.
ஒரு சிலர் கைகளை உயர்த்தினர். "நாளை எவ்வளவு பேர் வணங்குவீர்கள்?" எனக் கேட்டார். எல்லாருடைய கைகளும் உயர்ந்தன, ஒரே ஒரு சிறுவனின் கையைத் தவிர.

"ஏனப்பா, இவ்வளவு தூரம் நான் தாயன்பின் உயர்வைப் பற்றிக் கூறியும் நீ வணங்க மறுக்கிறாய்?" என்று அவனைக் கேட்டார் வாரியார்.

அச்சிறுவன் எழுந்து, "நான் எப்படி ஐயா வணங்குவேன்? எனக்குத்தான் அம்மாவே இல்லையே…" என்று கூறியதும், வாரியாரின் கண்கள் கலங்கி விட்டன.

அவனை அருகழைத்து, தன் மாலையை அவனுக்கு அணிவித்து, "நீ தினமும் உன் அன்னை படத்தை வணங்க வேண்டும் – செய்வாயா?" என அவர் வினவ, கண்ணைத் துடைத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தான் பையன்.

— வாரியார் நூல் ஒன்றில் படித்தது!

சொர்க்கத்திலிருந்து ஒரு கடிதம்

சர்ஜன் அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளிவந்தவுடன் கவலையோடு காத்திருந்த அம்மா கேட்டாள் "என் பையன் எப்படி இருக்கிறான்". சர்ஜன் சோகமாகக் கைவிரித்தார். "சாரி, எங்களால் காப்பாற்ற முடியவில்லை"

அலறிய அம்மா "ஏன் என் குழந்தைக்குக் கான்சர் வரவேண்டும்.. என் மகனைக் காப்பாறாமல் எங்கே போயிருந்தாய் கடவுளே?" என்று அரற்றினாள்.

மகன் விரும்பியபடி உடல் உறுப்புகளை தானமாகக் கொடுக்க ஏற்பாடு நடந்தது. "என் மகன் ஜிம்மிதான் தன் உறுப்புகளை தானமாகக் கொடுக்கவேண்டும் என்று சொன்னான். எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவன், "அம்மா, நான் இறந்த பிறகு என் உறுப்புகள் அழிவதால் எந்தப் பயனும் இல்லை. இது இன்னொரு பையனுக்கு அவன் அம்மாவுடன் வாழ உதவட்டுமே" என்றான் என்றவள் அவன் நினைவாக ஒரு முடிக்கற்றையை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அழுது புலம்பியவாறே வீட்டுக்குச் சென்றாள்.

வீட்டுக்கு வந்ததும் தன் மகன் பொம்மைகளை வைத்துக்கொண்டு ஓடி விளையாடிய நினைவுகள் வந்து சோகத்தில் ஆழ்த்தின. அவனது பொம்மைகளை அவன் அறையிலேயே அடுக்கி வைத்துவிட்டு அழுதவாறே படுத்தாள்.

தூக்கம் வராமல் நடு இரவில் விழித்தபோது அவள் அருகில் ஒரு கடிதம் இருந்தது. பிரித்துப் படித்தாள்.

அன்புள்ள அம்மா,

என்னைப் பிரிந்திருப்பது உனக்கு எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். என்னால் உன்னை மறக்கமுடியாது. நான் அங்கு உன்னுடன் இல்லை என்றாலும் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமாக உன்னை நேசிப்பேன். ஒருநாள் உன்னை நான் இங்கு மறுபடியும் பார்ப்பேன். அதுவரை நீ யாராவது ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக் கொள். அந்தக் குழந்தை என் அறையில் இருக்கட்டும்.

என்னைப் பற்றிக் கவலைப்படாதே! இங்கே நான் தாத்தா பாட்டியைப் பார்த்தேன். அவர்கள் எல்லா இடத்தையும் சுற்றிக் காண்பித்தார்கள். இங்குள்ள தேவதைகள் என்னிடம் அவ்வளவு பிரியமாய் இருக்கிறர்கள். அவர்கள் பறப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது.

உனக்குத் தெரியுமா? ஏசு நாம் படங்களில் பார்ப்பதுபோல் இல்லை. ஆனாலும் அவரைப் பார்த்ததுமே அவர்தான் ஏசுபிரான் என்று உணர முடிந்தது. அவரே என்னை கடவுளிடம் அழைத்துச் சென்றார். நான் கடவுளின் மடியில் உட்கார்ந்தேன். அப்போதுதான் அவரிடம் நான் அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னேன். அதற்கு இங்கு அனுமதியில்லை என்றாலும் எனக்காக சிறப்பு அனுமதி கொடுத்தார்.

கடவுளே எனக்குக் காகிதமும் பேனாவும் கொடுத்து கடிதம் எழுதச் சொன்னார். காப்ரியல் எனும் தேவதைதான் இந்தக் கடிதத்தை உன்னிடம் சேர்ப்பிக்கப் போகிறார். கடவுள், நான் இறந்தபோது நீ, "இந்தக் கடவுள் நான் வேண்டும்போது என் பக்கத்தில் இல்லாமல் எங்கே போனார்?" என்று கேட்ட கேள்விக்கு பதில் எழுதச் சொன்னார்.

அவர் சொன்னார். அந்த நேரத்தில் அவர் என்னுடன்தான் இருந்தாராம். அவரது மகன் ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது பக்கத்தில் இருந்தது போல. அவர் எல்லாக் குழந்தைகளுடன் இருப்பதுபோல அப்போது என்னுடனேயேதான் இருந்திருக்கிறார்.

அம்மா, நான் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை உன்னைத் தவிர யாரும் பார்க்க முடியாது. கடவுளிடம் இந்தப் பேனாவைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். வாழ்க்கைப் புத்தகத்தில் அவர் இன்னும் சில பெயர்களை எழுத வேண்டுமாம். இன்று இரவு நான் ஏசுவுடன் அமர்ந்து சாப்பிடப் போகிறேன்.

நான் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இப்போது எனக்கு வலியே இல்லை. கான்சரெல்லாம் பறந்து போய்விட்டது. எனக்கு வலி இல்லை எனும்போது சந்தோஷமாக இருக்கிறது. கடவுளுக்கும் நான் வலியுடன் அவஸ்தைப் படுவது பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் அன்பு தேவதையை அனுப்பி என்னை இங்கே கூப்பிட்டு வரச் செய்தார். நான் இங்கே ஒரு செல்லக் குழந்தை என்று அவர் சொல்கிறார்.

அன்புடன்
நான், ஏசு மற்றும் கடவுள்

About The Author