காலவெள்ளத்தில் தீபாவளி!!

நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாமே மாறி கிட்டேதான் இருக்குதுங்க. நடை, உடை, நாகரிகம்.. எல்லாம்.. எல்லாம். மாற்றம் மனித தத்துவம்தானே! ஆனால் மாற்றத்தினால் ஆக்கமா அழிவா என்ற கேள்விதான் மாற்றத்தின் அவசியம் பற்றி யோசிக்க வைக்குதுங்க.

என்னடா தீபவளியைப் பத்தி சொல்லாம ஏதேதோ தத்துவம் பேசறேனேன்னு முகம் சுருக்குவது தெரியுதுங்க.. இப்போ கூட தீபாவளின்னா எனக்குள்ள ஏற்படும் பரபரப்பும் மகிழ்ச்சியும் இந்தத் தலைமுறை பிள்ளைகளுக்கு இல்லையேன்னு ஏக்கத்துலதான் பேசறேங்க. எப்போதும் எதையோ பறி கொடுத்தா மாதிரியே இருக்காங்களே.. ஏன்?

சரி விஷயத்திற்கு வரேன். ஒரு முப்பது வருஷங்களுக்கு முன்னால அதாவது எனக்கு ஒரு பத்து பதினைந்து வயது இருக்கும் போது தீபாவளி எவ்ளோ மகிழ்ச்சியை அள்ளித் தந்திருக்குன்னா… இதோ.. இன்னி வரைக்கும் அந்தக் காட்சிகளை அசைப்போட்டு மனக்கண்னில் கொண்டு வந்து உங்களோட மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்க முடியற அளவுக்கு.. !

தீபாவளி வருவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாலிருந்து வீடுகளில் ஒரே கசமுசாதான். அம்மாக்கள் எல்லாம் முனியம்மா, கண்ணம்மா என்று எல்லோரிடமும் ரேஷன் கார்டு கடன் வாங்கி சர்க்கரை, பாமாயில், மைதா என்று பட்சணம் செய்வதற்குத் தேவையானதையெல்லாம் ஸ்டாக் பண்ணிப்பதில் மும்முரமாக இருப்பாங்க.

இந்த ரேஷன் கடையில உணவு பொருள்களைத் தவிர சீட்டித் துணின்னு (என்ன பெயரோ?)ஒரு துணி கிடைக்கும். கொஞ்சம் முரட்டுத்துணி. போட்டு அடிக்கலாம். இரண்டு மூன்று டிசைன்களில்தான் கிடைக்கும். பொதுவா எனக்கும் என் அக்காவுக்கும் அந்தப் பாவாடைதான்! ஒரே கலர், டிசைன்! ஆனாலும் இப்போ வாங்குற சாமுத்திரிகா பட்டை விட சந்தோஷத்தைத் தந்திருக்குங்க! அண்ணன் தம்பிகளுக்கும் அங்க பேண்ட் துணி கிடைக்கும். ஷர்ட் துணிதான் வெளியில் அல்லது ஆபீஸில்.. இன்ஸ்டால்மெண்டில் வாங்குவாங்க, எல்லா வீடுகளிலும் குறைந்தது ஏழு அல்லது எட்டு டிக்கட்.. தாத்தா, பாட்டி, அத்தை, என்று.. எல்லாருக்கும் ஒரே ஆள் சம்பளத்துல துணி வாங்கி, பட்டாஸ் வாங்கி, பட்சணம் செய்து, மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்து.. எப்படி? அப்பாக்களே நீங்க உண்மையிலே கிரேட்!

பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னாலே துணிகள் எல்லாம் தைத்து வந்து விடும். தீபாவளிக்கு முன்னால போட்டு பார்க்க விட மாட்டாங்க. அதனால அதை ஒரு பத்து முறை மேலே வைத்து.. கையகல கண்ணாடியில் அங்கம் அங்கமாகப் பார்த்து… பத்திரப்படுத்தி.. வீட்டுக்கு வரும் பேப்பர்காரர் வரை.. எல்லோரிடமும் காண்பித்து.. அதை மீண்டும் கசக்காமல் மடித்து… இந்த வேலை அலுப்பைத் தந்ததே இல்லை!

பெரும்பாலும் பாட்டாசுகள் விஷயத்தை அப்பாக்கள்தான் பார்த்துப்பாங்க. அவர்களுடைய ஆபீஸ் அல்லது நண்பர்களின் ஆபீஸிலிருந்து பட்டாஸ் லிஸ்ட் கொண்டு வருவாங்க.. அனுமன் வால் போல இருக்கும். எல்லா வருடங்களிலும் புதுபுதுசாக வெடியின் பெயர் இருக்கும். யார் முதலில் அதைப் படிப்பது என்ற போராட்டத்துக்குப் பின் ‘அண்ணனுக்கு லஷ்மி வெடி, உனக்கு புஸ்வாணம், தம்பிக்கு டிரெயின்’ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு லிஸ்ட் தயாரிப்போம். அப்பாவின் தீர்ப்பே இறுதியானது என்பது வேற விஷயம். பத்து நாட்களுக்கு முன்னதாக ஆபீஸிலிருந்து வரும் போது அப்பா கொண்டு வருவார். பெரிய பார்சலாக இருக்கும். அதைப் பிரித்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து… அடுக்கி வைத்து.. மறுபடி கலைத்து வேறு மாதிரியாக அடுக்கி…… ஸ்கூல் போகும் போது அம்மாவிடம் நூறு முறை அதைப் பார்த்துக் கொள்ள வேண்டிய ஜாக்கிரதை நடவடிகைகள் எல்லாம் சொல்லி.. நண்பர்களிடம் அது இது என்று பாதி கற்பனை கலந்து அவர்களை வாய் பிளக்கச் செய்து…. அந்த இன்னொஸென்ஸ் மகிழ்ச்சி இப்போது எங்கே?. இதுல சோதனையா மழை வேறு வந்துவிடும்! எப்படி காய வைப்போம். நல்லா வெடிக்காம கால வாரிச்சுன்னா… என்று ஏகத்துக்குக் கவலைப்பட்டு.. மாடிக்கும் கீழுக்கும் ஆயிரம் தடவை ஏறி இறங்கி. . வெயில் வருதா.. மழை நிக்குமா என்று வானிலை ஆராய்ச்சியாளன் மாதிரி.. பார்த்து.. பாவம் என் வீட்டில் பாட்டி எங்களுக்காக வருணபகவானிடம் வேண்டிகிட்டு மழை நிக்கணும்னு ஒரு தேங்காயை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணியை நிரப்பி அதுல போடுவாங்க. (மழை நிக்குமா?)

தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னாலேயே பட்சணம் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. இந்த ஒரு பண்டிகைதான் சாமி கிட்ட படைச்சுட்டு சாப்பிடணும்ன்னு கட்டுப்பாடு இல்லாத பண்டிகை. அதனால் அம்மா பண்ணும் போதே டேஸ்ட் பாக்க ‘நீ, நான்’ என்று சண்டைக்கு மத்தியில் சாப்பிடுவோம். அப்பவே பாதி காலியாகி விடும். பாவம்! அம்மாவும் பாட்டியும் கிலோ கிலோவா செய்வாங்க!

தீபாவளிக்குக் கண்டிப்பா எல்லாரும் மருதாணி வச்சுக்கணும் என்பது அந்தக் காலத்துப் பாட்டிகள் ஏற்படுத்தின சட்டம்! அதனால எங்க பாட்டி இரண்டு நாட்கள் முன்னாலிருந்தே வீட்டில் வேலை செய்யும் பெண்ணை நச்சரிக்க ஆரம்பிப்பாங்க. அந்தப்பெண்ணும் பாட்டி வாயை அடைக்கறா மாதிரி மருதாணி மரத்தையே ஒடித்து வந்து விடுவாள். பாவம் பாட்டி! எல்லாத்தையும் உருவி, அம்மியில் வைத்து மாங்கு மாங்கு என்று அரைப்பாங்க. ராத்திரி சாப்பிட்டதும் ‘வேண்டாம் பாட்டி தூக்கம் வருது’ன்னு சொன்னால் ‘கதை சொல்லிகிட்டே இடறேன்.. கேட்டுகிட்டே படுத்துக்கோ’ என்று அந்த எழுபது வயதிலும்… முதுகு ஒடிய.. பாட்டிக்களே! உங்க அன்பை இப்ப நெனச்சாலும் கண்கள் நனைகின்றன.

தீபாவளியன்று காலங்கார்த்தால அந்தத் தெருவிலிருந்து யார் முதல்ல வெடிக்கிறாங்க என்பது அறிவிக்கப்படாத போட்டியாயிருக்கும்! அதனால் மூன்று மணிக்கே எழுப்பி விட்டு ‘முதலில் ஒரு வெடியை வெடித்து விட்டு படுத்துக்கோ’ என்று பாட்டி சொல்லுவாங்க. அப்புறம் படுக்க முடியுமா?.. எண்ணை தேய்த்துக் குளித்து புது டிரெஸ் போட்டுகிட்டு.. கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டு விட்டு பாட்டாஸ் வெடிக்க ரெடியாகி விடுவோம். எனக்குத் தெரிந்து அம்மாக்கள் யாருமே துணைக்கு வந்து நின்றதில்லை. அண்ணன், அக்காமார்கள், அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று குழந்தைகள் தனியாகத்தான் பட்டாஸ் வெடிப்பார்கள். வெடித்து வெடித்து ஓய்ந்து போன பிறகு யார் வீட்டில் நிறைய வெடிக் குப்பைகள் இருக்கு என்று சர்வே பண்ண கிளம்பிடுவோம். திரும்பி வரும் போது வெடிக்காமல் இருக்கும் பட்டாஸுகளைக் காலால் எத்தியவாறு ஒரு இடத்தில் குமித்து. . சொக்கப்பானை போல் கொளுத்தி விடுவோம். பொலியூஷனாவது ஒண்ணாவது.. யாருக்கு அதைப் பத்தித் தெரியும்? அதில் கேப்புகளைப் போட்டு… அவை வெடிக்க வெடிக்க குதித்து.. அந்தக் காலம் திரும்பவும் வந்திடாதோ! மனசே இல்லாமல் வீட்டிற்கு வருவோம். பிறகு அப்பா அம்மாவுடன் சொந்தக்காரங்க வீட்டிற்குப் போவது.. அல்லது அவர்கள் வருவது என்று.. ஏகப்பட்ட.. எதிர்பாராத.. புத்தம்புது.. அனுபவங்களோட திக்குமுக்காடி.. தீபாவளியை முடிப்போம்..
உங்களில் பல பேருக்கு நிச்சயம் இந்த மாதிரியான சுவையான அனுபவம் கிடைச்சுருக்கும். அந்தக்காலத்துல தீபாவளி என்பது மக்கள் வாழ்க்கையில ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கு என்பது அழுத்தமான உண்மைங்க. புது டிரஸ் போட்டுக் கொள்வது, பட்டாஸ் வெடிப்பது, பட்சணம் சாப்பிடுவது, சொந்தக்காரங்களைப் பார்ப்பது.. எல்லாமே.. எல்லாமே அந்த ஒரு நாள் மட்டுமே நிகழக்கூடிய அற்புதங்களாக இருந்திருக்குங்க. அதனால அந்தப் புதுமை சிறுவர்களுக்கு மட்டுமில்லாம அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என்று வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் மகிழ்ச்சியை ஒரு சுவாரசியத்தைத் தந்திருக்குங்க.

இப்போ.. பாருங்க ‘வீக் எண்ட்’ என்றாலே.. ஒரு புது டிரஸ். பட்டாஸா.. ‘பொல்யூஷ்ன்.. சைல்ட் லேபர்.. இத்யாதிகள். வீட்டில் சமையல் செய்ய பிடிக்காத நாட்கள் எல்லாமே வித விதமாக வெளிச் சாப்பாடுதான். அதே நேரத்தில் ‘ஆயில் ஐட்டம் எல்லாம் கொலஸ்ட்ரால்.. நோ சர்க்கரை.. டயட்’ என்று அலட்டல் வேறு! அதனால தீபாவளி என்ற பண்டிகையில் என்ன கொண்டாட்டம் இருக்கு ஒருநாள் லீவ் என்பதைத் தவிர! போதாக்குறைக்கு ‘தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முதலாக’ என்று கட்டிப்போடும் டிவி! உறவினர்களுக்கெல்லாம் ஒரு எஸ். எம். எஸ் அனுப்பினால் முடிந்தது. முகத்தை மட்டுமில்லை, குரலையும் காட்டுவதில்லை. அதனால் இன்றைய தீபாவளியைப் பொறுத்த வரை ‘நாளை மற்றுமொரு நாளே!’
இந்த மாற்றம் நல்லதா? கெட்டதா?

About The Author

4 Comments

  1. thyagu

    மிக அருமை.இதே அனுபவம்தான் எனக்கும்!!!!

  2. udhaya

    Good one chitra…………….technology advancement naala ulagame chinnada aayiduthu communication is so fast and easy world la enda corner la irundalum communicate pannalam….ellam seri, veetukulleye communication distance aayiduthe!!!

  3. Saravanan

    கெட்டதுலயம் ஒரு நல்லது இருக்குல, அப்பொ எது கெட்டதுனு யாரலயம் சொல்ல முடியும்

  4. jayashree.T

    Tஒடய் ஒன்ல்ய் ஈ ரெஅட் யொஉர் அர்டிcலெ. ஈட் நச் வெர்ய் நிcஎ அன்ட் ப்ரcடிcஅல். Tகிச் இச் ந்கட் இச் கப்பெனிங் நொந் அ டய்ச். ஈ fஏல் நெ ஷொஉல்ட் cஒன்டினுஎ டொ எஞொய் லிகெ ஒஉர் ஒல்ட் டய்ச். Hஒபெ தெ ப்ரெசென்ட் ச்cஎனரிஒ சஙெச் அட்லெஅச்ட் இன் ஒஉர் நெ௯ட் கெனெரடிஒன்.

Comments are closed.