கந்த புராணம் விளக்கும் பல அண்டங்கள்
கந்த புராணத்தில் அசுரன் சூரபன்மன் தனது ‘ரிஸர்வ்’ படைகளை மற்ற அண்டங்களில் இருந்து கொண்டு வந்தான் என்பதை புராணக் கட்டுக் கதை என்று சொன்ன காலம் போய் விட்டது. மற்ற அண்டங்கள் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய நிலையை விஞ்ஞானம் உருவாக்கி உள்ளது.
சீதையின் விசித்திர வாதம்!
ஆனந்த ராமாயணத்தில் ராமர் சீதையை காட்டுக்கு வர வேண்டாம் என்று சொன்னபோது சீதை ராமரை நோக்கி மற்ற எந்த யுகத்தின் ராமாயணத்திலாவது ராமர் சீதையை விட்டுவிட்டுப் போயிருக்கிறாரா என்று கேட்கிறாள். இதை கவியின் சமத்காரம் என்றோ அல்லது வேடிக்கையான வாதம் என்றோ இன்று ஒதுக்கிவிட முடியாது. யுக சுழற்சியில் அனைத்தும் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என்பதையும் இணை பிரபஞ்சங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் பதிவாகி இருக்கின்றன என்பதையும் நமது இதிஹாஸ புராணங்கள் விளக்கி உள்ளன. சரியான விஞ்ஞான நிரூபணம் இன்றி அவற்றை கற்பனையின் எல்லை என்று நாம் எண்ணி வருகிறோம்.
இப்போது இணைய தளத்தில் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரது பிரத்தியேகமான ப்ளாக்குகளிலும் ரிக்வேத சூக்தமும் அதை அப்படியே திருப்பிக் கூறும் பிக்பேங் கொள்கையும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன!
ஹிந்து புராணங்கள் மறுசுழற்சியாக கல்பங்கள் பல தோன்றி மறைந்து கொண்டே இருக்கும் என்று விளக்குவதையும் பல இணையதளங்கள் ஆச்சரியத்துடன் விளக்கி வருகின்றன! புராண சம்பவங்களும் புராண பாத்திரங்களின் அதீத செயல்களும் விஞ்ஞான நோக்கில் ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்டு வருகின்றன!
பாரதியாரும் மணிவாசகரும்
மகாகவி பாரதியார் கோமதி மஹிமையை விளக்கிக் கூறும் தனது பாடலில்
"நக்கபி ரானருளால் – இஇங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்;
தொக்கன அண்டங்கள் – வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இஇக்கணக் கெவரறிவார்? புவி
எத்தனை யுளதென்ப தியாரறிவார்?
எல்லையுண்டோ இஇலையோ – இஇங்
கியாவர் கண்டார்திசை வெளியினுக்கே?
என்று கூறி வியப்பதும்
மணிவாசகர் தில்லையில் பாடிய திருவண்டப் பகுதியில்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன"
என்று போற்றுவதும் இப்போது நமக்குப் பொருள் புரிந்து படிக்க முடியும்!
மனித குலம் அடைய இருக்கும் உயரிய நாகரிகம் பற்றி மிச்சியோ ககு!
உயரிய நாகரிகம் ஒன்றை நோக்கி மனித இனம் சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்க எழுத்தாளரான மிச்சியோ ககு தனது நூல்களில் விளக்கி இந்த பல் பிரபஞ்ச கொள்கை அப்போது நன்கு விளங்கி நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியத்தில் வந்து சேரும் என்கிறார். இவரது நூல்கள் உலகளாவிய அளவில் பல கோடிகள் விற்கப்பட்டு சாதனை படைத்து விட்டன.
பாமரருக்கும் விஞ்ஞானம் என்ற கொள்கையுடன் நூல்களை எழுதும் இவரது படைப்புகளைப் படிக்கும்போது ஹிந்து புராணங்களின் எல்லையற்ற ஆழத்தை உணர நிச்சயம் ஒரு வாய்ப்பு உருவாகிறது!
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சரணம் என்பதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்து அதைக் கூறி நமது பிரார்த்தனையை இனி நாம் தொடரலாம்!”
ஐதீக நோக்கில் கூறப்படும் பற்பல செய்திகளுக்கு ஓரளவேனும் அறிவியல் கூறு ஆதாரமாக இருப்பாது ஏனோ உண்மைதான்.