எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் அறங்கள்
‘அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது’, ‘கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்’, ‘கண்ணோட்டமில்லாதவர் மரத்திற்கு ஒப்பாவர்’ எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், ‘மானம் இழந்தவர் மயிரனையர்’ எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப் பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில மூத்த தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை ‘உதிர்ந்த மயிர்கள்’ என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள் முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.
மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏற முயன்றால், அச்செயல் உயிரைப் பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும் வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை. தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள் ஏற்படுத்தக்கூடியது. ‘நீரின்றி அமையாது உலகு’, ‘உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’, ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’, ‘கற்க கசடறக் கற்பவை’ போன்ற வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக் கூடியன. இத்தகைய வரிகளினாலே திருக்குறள் தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.
குறளின் கவித்துவ அம்சம்
ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான் திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம் காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி, குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக உள்ளன. பொதுவாக, வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள் மிகக் குறைவு.
மதம் சார்ந்த நூலா திருக்குறள்?
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர் சநாதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர். ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை வள்ளுவரிடம் காண முடிகின்றது.
எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண் உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம் செய்யாத நிலையைக் கண்டறியலாம்.
திருக்குறளின் மதிப்பீடு – காலத்தின் கட்டாயம்
அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத் தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் முக்கியமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது. திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம் செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும் சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப் பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான வழியாகும். எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்!
இன்று தமிழர் என்ற அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர். உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க, வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன் மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக் கொண்ட திருக்குறள் நூலினைத் ‘தமிழர் வேதம்’ என்று வலியுறுத்துவது தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி தமிழர்களுக்குப் பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.
பல்வேறு மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன் இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும் திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே ‘திருக்குறள் உலகப் பொதுமறை’ என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளன. பொதுவாக உலகப் பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப் புனைவு! அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை!
1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில், இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து, அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத் தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும் திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள் என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.
“
நடுநிலயான விமர்சனம். பாராட்டு. துணிச்சலான கருத்துகள்