அமானுஷ்யன்-93

ராஜாராம் ரெட்டியால் அன்றிரவு உறங்க முடியவில்லை. அரை மணி நேரத்திற்கொரு முறை அந்தக் கட்டிடத்தின் சுற்றுப் புறத்தில் நிறுத்தி வைத்திருந்த ஆட்களிடம் போன் செய்து பேசினார். ஏதாவது சந்தேகப்படும் படியான நிகழ்வுகள் நடந்திருக்கின்றதா என்று கேட்டார். ஒன்றுமில்லை என்ற பதில் வந்த போது அதை அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. குடைந்து கேட்ட போது அன்று இருவேறு சமயங்களில் இரண்டு இளைஞர்கள் அந்த வழியாக ஸ்கூட்டரில் போனார்கள் என்று தெரிந்தது.

அவர்கள் அந்த கட்டிடத்தைப் பார்த்தபடி நின்றார்கள் என்றறிந்த போது ரெட்டி உஷாரானார். "விசாரித்தீர்களா அவர்களை" என்று கேட்டார்.

"அவர்களே எங்களை விசாரித்தார்கள் சார். ஒருவன் கல்லூரிக்குப் போகும் சாலை தானே என்று கேட்டான். இன்னொருவன் கட்டிக் கொண்டிருப்பது கல்லூரிக்கான ஹாஸ்டலா என்று கேட்டான்."

"சொன்னவுடன் போய் விட்டார்களா? இல்லை சிறிது நேரம் அந்தக் கட்டிடத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்களா?"

"பெரிதாய் கவனித்த மாதிரி தெரியவில்லை சார். உடனே போய் விட்டார்கள்"

"கேட்டவர்கள் கல்லூரியை நோக்கியே போனார்களா இல்லை திரும்பிப் போய் விட்டார்களா?"

"கல்லூரியை நோக்கி தான் போனார்கள் சார்"

"இப்போது கல்லூரி விடுமுறை தானே. பின் ஏன் போனார்கள்?"

"மாணவர்களுக்கு தான் விடுமுறையே ஒழிய ஆபிஸில் வேலை பார்ப்பவர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை இருக்கிறது போல தான் தெரிகிறது. இவர்கள் கல்லூரி விஷயமாய் ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ளப் போனது போல் தான் தெரிகிறது"

பேசி முடித்த பிறகும் சந்தேகம் ஏனோ இருக்கவே செய்தது. ஆனால் ஆனந்த் சென்னைவாசியானதால் டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் உதவக் கூடியவர்கள் யாரும் இல்லை. மேலும் அவன் இங்கு வந்த பிறகும் ஜெயினைத் தவிர வேறு யாரிடமும் நெருங்கியும் பழகவில்லை. அவனுக்கு உறவினர்கள் யாராவது டெல்லியில் இருக்கிறார்களா என்பது பற்றி துப்பறிந்து பார்த்த போது அப்படியும் யாரும் இருக்கவில்லை. சென்னை நண்பர்களை அழைத்து உதவி கேட்கும் அளவு அவனுக்கு நேரமில்லை. அப்படியே ஒரு வேளை அவர்கள் யாரையாவது பணம் கொடுத்துத் தெரிந்து வர அனுப்பி இருந்தாலும் கூட அதுவும் நல்லதற்குத் தான் என்று நினைத்தார். இங்கு முன்பே தயாராக இருப்பதை தெரிந்து கொள்வது அவர்கள் முட்டாள்தனமாக எதையும் செய்யாமல் தடுக்கும் என்று நினைத்தார்.

இருந்த போதிலும் அக்‌ஷய் போன்ற ஒருவன் ஆனந்த் போன்ற இன்னொரு புத்திசாலியுடன் சேர்ந்து இயங்கும் போது ஒன்றுமே செய்யாமல் வெறுமனே வந்து மாட்டிக் கொள்வார்கள் என்று அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு தாயையும் அந்தப் பொடியனையும் காப்பாற்றுவதற்கு அதை விட்டால் வேறு வழியில்லை என்றாலும் கூட ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தார்.

அவன் இடத்தில் தான் இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்போம் என்று யோசித்தார். ஒரு தாளில் அதை எல்லாம் எழுதினார். அதற்கு எப்படி முடிவெடுப்பது என்று யோசித்தார். அதையும் எழுதினார். உடனே அதற்கு ஏற்ற மாதிரி முன்னேற்பாடுகளை செய்தார். டாக்சியில் வருவதால் அந்த டாக்சி டிரைவரை தங்களுக்கு உதவ அவர்கள் ஏற்பாடு செய்ய வாய்ப்புண்டு என்று தோன்றவே போன் செய்து சொன்னார். "நாளை காலையில் அவர்களை இறக்கி விட்டு அந்த டாக்சி போகாவிட்டால், இல்லை அந்த டாக்சி டிரைவர் அந்தப் பக்கத்திலேயே எங்கேயாவது சுற்றிக் கொண்டிருந்தால் உடனடியாக அவனை சுட்டுத் தள்ளி விடுங்கள்…"

இன்னொரு போன் செய்து பேசினார். "அந்த கிழவியும், பொடியனும் என்ன செய்கிறார்கள். எதுவும் பிரச்சனை இல்லையே"

"இல்லை சார். ஒரு பிரச்னையும் இல்லை. இரண்டு பேரும் இன்றைக்கு இரவு சாப்பிடவில்லை"

"ஏனாம்?"

"அந்த ஆளைக் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார்களாம்"

"முட்டாள்கள்" என்று இணைப்பை ரெட்டி துண்டித்தார். ஒரு காலத்தில் இது போன்ற சின்ன பாசமுள்ள விஷயங்கள் அவரை நிறையவே நெகிழ்த்தும். ஆனால் இப்போதோ முட்டாள்தனமாகவே அவருக்குத் தோன்றுகின்றன. மேலும் கடவுள் இருப்பதாக அவர் நினைக்கவில்லை. இருந்திருந்தால் ஒரு காலத்தில் நாணயமாக அவர் இருந்த போது அவரைக் காப்பாற்றி இருக்க வேண்டும்…

அவருடைய செல்போன் ஒலித்தது. "ஹலோ"

"எல்லாம் சரியாகத் தானே போய்க் கொண்டிருக்கிறது" மந்திரியின் குரல் கேட்டது.

"எல்லாம் கச்சிதமாய் இருக்கிறது. பயப்படாதீர்கள்"

"அப்படியானால் நாளைக்கு இரவுக்குள் அவன் பிணத்தை என்னால் பார்க்க முடியும். சரிதானே."

"கண்டிப்பாக…"

"அவன் பிணத்தைப் பார்த்த பின் நான் முதலாவதாக செய்யக் கூடிய வேலை என்ன தெரியுமா?"

"என்ன?"

"நிம்மதியாய் தூங்குவேன். நான் சரியாகத் தூங்கி நிறைய நாளாகி விட்டது ரெட்டி. எட்டு மணி நேரம் நிம்மதியாய் தூங்க முடிந்தால் அது போதும் எனக்கு"

ராஜாராம் ரெட்டி யோசித்துப் பார்த்தார். அவரும் தூங்கி பல நாளாகி இருந்தது…

******

மதுவும் வந்த பின்பு அக்‌ஷய் அவனை ஆனந்திற்கும் மகேந்திரனுக்கும் அறிமுகப்படுத்தி விட்டு, இது வரை நடந்தவற்றை சுருக்கமாகத் தெரிவித்து விட்டு உடனடியாகத் தன் திட்டத்தை விளக்கினான். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொன்னான். ஆனால் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அவரவர்களுக்கே விட்டு விட்டான். பின் மதுவிடம் கேட்டான்.

"இதில் உன் பங்கு முக்கியம் மது. உன்னால் இதைச் செய்ய முடியுமா?

மது சொன்னான். "நான் இந்த தொழிலிற்கு வந்து ஏழு வருஷங்கள் ஆகின்றன. எனக்கு இது கூட முடியவில்லை என்றால் நான் இதில் இருக்க அருகதையே இல்லாதவன் என்றாகிறது. கவலையை விடு அக்‌ஷய். இந்த வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன்."

ஆனந்த் மதுவிடமும், மகேந்திரனிடமும் சொன்னான். "இதில் நீங்கள் யாரைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் அவர்கள் முழு நம்பிக்கையான ஆட்களாக இருப்பது முக்கியம். சிறிது பிசகினாலும் நம் காரியம் கெட்டு விடும்"

இருவரும் தலையசைத்தார்கள்.

மது அக்‌ஷயிடம் கேட்டான். "இதில் உன் பாதுகாப்புக்கு நீ எதையும் செய்யவில்லையே"

அக்‌ஷய் சிரித்தான். "அவர்கள் என்னிடம் பல தடவை ஏமாந்திருக்கிறார்கள். அதனால் என் விஷயத்தில் கொஞ்சம் கூட அஜாக்கிரதையாக இருக்க மாட்டார்கள். கண்டிப்பாக அங்கு போய் சேர்ந்தவுடம் பிசின் போல சில பேர்களாவது என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள்…."

ஒருவிதமான கனத்த மௌனம் அவர்களிடையே நிலவியது.

அக்‌ஷய் சொன்னான். "சரி மது, மகேந்திரன்- நீங்கள் கிளம்புங்கள். நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. சில மணி நேரமாவது தூங்கினால் தான் உங்களால் நாளைக்கு சரியாக இயங்க முடியும்…"

அவர்கள் இருவரும் கிளம்பினார்கள். கிளம்பிய இருவரிடமும் அக்‌ஷய் மனமார நன்றி சொன்னான். "இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்கள் உதவியை நான் எப்போதும் மறக்க முடியாது. எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை."

மகேந்திரன் சொன்னான். "நண்பர்களுக்குள் நன்றி சொல்வது தேவையில்லாதது"

மது அக்‌ஷயின் தோளைத் தட்டிக் கொடுத்தான். அவர்கள் போய் விட்டார்கள்.

அன்றிரவு அக்‌ஷய் உறங்க ஆயத்தமானான் ஆனந்திடம் சொன்னான். "ஆனந்த் நீயும் படுத்துக் கொள். நாளை காலை நாம் சீக்கிரமே எழுந்து கிளம்ப வேண்டும்…"

ஆனந்திற்கு உறங்க முடியும் என்று தோன்றவில்லை. "எப்படி உன்னால் தூங்க முடிகிறது"

"நாம் தூங்காமல் விழித்துக் கொண்டு இருப்பதால் என்ன லாபம்? சரியாகத் தூங்கா விட்டால் நாளை நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியாது….."

அகஷய் ஐந்து நிமிடத்தில் உறங்கி விட்டான். ஆனந்திற்கு தம்பியைப் பார்க்கும் போது நெப்போலியனைப் பற்றிப் படித்தது நினைவுக்கு வந்தது. நெப்போலியன் போர்க்களத்தில் கூட தூங்க வேண்டிய நேரத்தில் தூங்குவானாம்!…. நாளை என்ன நடக்கும்? திட்டமிட்டபடி எல்லாம் நடக்குமா? இவனை எதிரிகள் என்ன செய்வார்கள்? என்ற கவலைகள் கேள்விகளாக வந்தன. தம்பியையே பார்த்தபடி ஆனந்த் உறங்காமல் உட்கார்ந்திருந்தான்.

*********

ராஜாராம் ரெட்டி தன் ஆட்களுக்கு அதிகாலை மூன்று மணிக்குப் போன் செய்தார். "எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது? சந்தேகப்படுகிற மாதிரி சம்பவங்கள் எதுவும் இல்லையே"

"ஒரு பிரச்சனையும் இல்லை சார். நம் ஆட்கள் அந்தக் கட்டிடத்திலும் அதற்கு ஒரு கிலோமீட்டர் அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் அங்கங்கே மறைவாக நிற்கிறார்கள். சாயங்காலம் சுமார் ஏழு மணிக்கு மேல் இந்தக் கட்டிடத்தைக் கடந்து ஒரு ஈ காக்காய் கூடப் போகவில்லை. தெருவே வெறிச்சோடித் தான் இருக்கிறது"

ராஜாராம் ரெட்டி திருப்தியடைந்தார். இன்னொரு போன் செய்தார். "அந்தக் கிழவியையும் பொடியனையும் அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்…"

*********

அதே நேரத்தில் ஆனந்தும் அக்‌ஷயும் லாட்ஜிலிருந்து கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் மகேந்திரனிடமும், மதுவிடமும் அக்‌ஷய் பேசினான். லாட்ஜிலிருந்து ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு பாதி தூரத்தில் உள்ள ஒரு ரயில்நிலையம் போய் இறங்கிக் கொண்டு அங்கிருந்து இன்னொரு டாக்சி பிடித்துக் கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்குக் கிளம்பினார்கள். ஒரே டாக்சி பிடித்துக் கொண்டு போனால் அந்த டாக்சி டிரைவரை திரும்பிப் போகும் வழியில் மடக்கி எங்கிருந்து அவர்களைக் கூட்டிக் கொண்டு வருகிறாய் என்று விசாரித்தால் அவர்கள் இருக்கும் பகுதி தெரிந்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இப்படி செய்தார்கள்.

போகும் போது இருவரும் நிறைய நேரம் ஒன்றும் பேசவில்லை. ஆக்ரா நெடுஞ்சாலையில் இருந்து அந்த கட்டிடம் உள்ள சாலையில் திரும்பிய பிறகு அக்‌ஷய் சொன்னான். "ஆனந்த் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள். வருணை மதுவிடம் சேர்த்து விடு"

ஆனந்த் தலையசைத்தான். பின் கரகரத்த குரலில் சொன்னான். "அக்‌ஷய் நீ கண்டிப்பாக சீக்கிரமாய் திரும்பி வர வேண்டும். நாங்கள் உனக்காக காத்துக் கொண்டிருப்போம். நீ இல்லாமல் நான் அம்மாவை சமாளிக்க முடியாது…."

அக்‌ஷய் ஒன்றும் சொல்லாமல் அண்ணனது கையை அழுத்தினான். "விதியில் என்ன எழுதியிருக்கிறதோ அது நடக்கும்…"

"விதியை மதியால் வெல்ல முடியும் என்று சொல்கிறார்கள்"

"அதற்கும் ஒரு விதி அப்படி இருக்க வேண்டும்" அக்‌ஷய் புன்னகையுடன் சொன்னான்.

அந்த சாலையில் சிறிது தூரத்திற்குப் பிறகு எந்த தெரு விளக்குமே எரியாததை இருவரும் கவனித்தார்கள். இந்த இருட்டும் எதிரிகளின் கைங்கரியமே என்பது புரிந்தது.

அந்தக் கட்டிடத்தை டாக்சி நெருங்கியது.

(தொடரும்)

About The Author

6 Comments

  1. mini

    Ganesan sir, Yarukum ethuvum aaga kudathu kandipa. konjam karunai katunga. ethavathu panitu unga mansila appa than nilapanganu kathai sollathinga.
    enaku ithuku mela inimae padika mudiyumnu thonala. naan kathai mudinchathum padika poren. romba tensiona iruku.

  2. Sundar

    உண்மையிலேயே திக் திக். நல்ல விருவிருப்பு. சீக்கிரம் தொடரவும்

  3. janani

    I think im not able to sleep for this week. Very nice sir and eagerly waiting for your next good episode.

  4. madhu

    Ganesan Sir, Are you going to finish this story in next 2 weeks or will it continue?? Please reply

  5. N Ganeshan

    இன்னும் சுமார் பத்து வாரங்கள் அமானுஷ்யன் தொடரும். பாராட்டி ஊக்கப்படுத்தும் அன்பு வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  6. madhu

    பதிலுக்கு மிக்க நன்ட்ரி. அருமையான கதை. அக்ஷய் நலமுடன் இருக்க வேன்டும். அவரை கொல்ல வேன்டாம். ஆனால் உங்கல் அடுத்த கதை குடும்ப கதை ஆக இரூன்தால் நன்ட்ராக இருக்கும்.

Comments are closed.