பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரைக் கண்டு களிக்கப் பல வருடங்களுக்கு முன்பே எனக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டது. ஆனால், இதே பிரான்ஸ் நாட்டிலுள்ள தூய லூர்து மாதாவின் திருத்தலத்தை தரிசிக்கும் வாய்ப்பு மட்டும் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. நான் அறிந்த பலர், வேறு நாடுகளில் இருந்து பயணித்து அந்தப் புதுமையான மாதாவைச் சந்தித்து அருள் பெற்று வந்த கதையைச் சொல்லும்போது எனக்கு ஒரே ஏக்கமாக இருக்கும்.
அந்த நீண்டகாலக் குறையைப் போக்க என் நண்பன் ஒருவன் இந்த ஆண்டு அளித்த வாய்ப்பு கைகொடுத்தது.
என் கனவுப் பயணத்தை நனவுப் பயணமாக்கிய என் நண்பர், தொழிலக மேலதிகாரி இருவருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
பாரிஸ் நகரிலிருந்து ரயில் மூலம் லூர்து கிராமத்திற்குப் பயணிக்க ஆறு மணி நேரங்கள் போதும். ரயில் நிலையத்திலிருந்து பொடி நடையில் 20 நிமிட நேரத்தில் திருத்தலத்தைச் சென்றடைந்து விடலாம். ஆனால், எனது பயணமோ பேருந்து மூலம் என்பதால் வழி நெடுக நின்று நின்று இயற்கை உபாதைகளைத் தீர்த்துக் கொண்டு, எதையாவது உண்டு, குடித்து, திருத்தலத்தை அடைய 15 மணி நேரம் தேவைப்படலாம் என்று முன்பே பயணித்த நண்பர்களிடம் கேட்டறிந்து கொண்டேன்.
பெரிய வெள்ளி தினத்திற்கு முன்புதான் பயணம் ஆரம்பமாயிற்று. வியாழனன்று மாலை 3.00 மணிக்கு வேலையை முடித்து விட்டுப் பேருந்தில் ஏறுவதற்குப் பயணப் பொதியுடன் நேராக வந்தேன். ஏறத்தாழ 100 தமிழ்ப் பயணிகள். எல்லோருமே சுவிஸ் நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வசிப்பவர்கள்தான். பல இடங்களில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, இறுதியில் பாசல் நகரில் காத்து நின்ற எம்மையும் ஏற்றிக்கொண்ட இரு பேருந்துகளும் தமது நீண்ட பயணத்தை மாலை 5.30 மணியளவில் ஆரம்பித்தன.
இங்கே இந்தப் புதுமையான திருத்தலம் பற்றிச் சில வரிகளாவது சொல்லியே தீர வேண்டும். மதச் சார்பற்று, உலகெங்கும் இருந்து பெருந்தொகையான பக்தர்கள் ஆண்டுக்கு ஆண்டு இங்கு வந்து போகின்றார்கள்.
அன்னை மரியா மசபியேல் என்று அழைக்கப்படும் குகை அருகே ஒரு 14 வயதுச் சிறுமிக்கு அன்னை காட்சியளித்த நாள் தொடங்கி இந்த இடம் புனிதத்தன்மை வாய்ந்ததாகி விட்டது. 1858ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் திகதி, முதல் தடவையாகத் தன் தோழிகளுடன் விறகு பொறுக்கச் சென்ற பெர்னதெத் என்ற சிறுமிக்கு லூர்து நகரில் இந்த அருங்காட்சியைக் காண நேர்ந்தது. ஆனால், அதைத் தோழிகளால் காண முடியவில்லை.
அன்னை இந்தச் சிறுமியை மீண்டும் மீண்டும் வரச் சொல்லிக் காட்சி அளித்திருக்கின்றார். ஒரு தடவை, தனக்கு ஆலயம் ஒன்றைக் கட்டுமாறு சிறுமியைப் பணித்திருக்கின்றார் அந்தப் புனித அன்னை. பெப்ரவரி 25ஆம் திகதி அன்னையின் கட்டளையை ஏற்று, பெர்னதெத் குறிப்பிட்ட இடத்தில் மண்ணைத் தோண்டியபோது நீரூற்று ஒன்று தோன்றியது. இன்று அதுவே ஓடையாகி உலகம் முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களையும் கவர்ந்திழுக்கின்றது.
சிறுமி பெர்னதெத்திற்கு அன்னை மொத்தம் 18 தடவைகள் காட்சி அளித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. 1862ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் திகதி, கத்தோலிக்கத் திருச்சபை “இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைவனின் செயற்பாடுகள் இங்கு நடந்திருப்பது உண்மையே” என்று அறிவித்து இந்த இடத்தைப் புனிதத் தலமாக அங்கீகரித்தது. பெர்னதெத் தோண்டிய நீரூற்று நம்பிக்கையோடு அருந்துவோருக்குக் குணமளிக்கும் அருமருந்தாகத் திகழ்ந்து வருகின்றது.
இவை இந்தத் திருத்தலத்தின் சரித்திரக் குறிப்புகளில் சில.
இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவியும் இந்தத் திருத்தலம் நோக்கிப் புறப்பட்ட நாங்கள் மறுநாள் காலை 10 மணியளவில் லூர்து கிராமத்தை அடைந்தோம். எமக்கு ஒழுங்கு செய்யப்பட்ட விடுதியில் குளித்து, உடை மாற்றிக் கொண்டு திருத்தலம் நோக்கிக் கிளம்பினோம்.
திருத்தலத்தின் மண்ணை மிதித்தபோது இனம்புரியாத ஒரு நிறைவு ஏற்பட்டது. உலகெங்கும் இருந்து கணக்கற்ற பக்தர்கள் வந்து குவிகின்றார்கள். பெரிய வெள்ளியன்று நாம் திருத்தலத்தில் பெருமளவு பக்தர்களைச் சந்திக்கவில்லை. மாறாக, சனிக்கிழமையன்று திருத்தலம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இத்தாலியிலிருந்து சிங்கள மக்கள் பெருந்தொகையாக இத்தினத்தில் வழிபாட்டிற்காக வருவதைக் காண முடிந்தது.
இங்கு முக்கிய நிகழ்வாக இடம் பெறுவது புனித நீராடல். எனக்கும் கடவுள் அருளால் நீராட வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காலை 10.00 மணிக்கு என் காத்திருப்பு ஆரம்பித்தது. மணி பன்னிரண்டை நெருங்கியபோது முட்டி மோதியபடி பெருந்திரளானவர்கள் நிற்பதைக் காண முடிந்தது. பெண்களுக்கென ஒரு வரிசை. ஆண்களுக்கென இன்னொன்று. இந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு இன்று அந்த வாய்ப்புக் கிடைத்து விடுமா என்பது எனக்குள் சந்தேகமாகவே இருந்தது.
என்னோடு சேர்ந்து நின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள் இத்தாலியில் இருந்து வந்த சிங்கள நண்பர்கள். இவர்களில் பலர் பௌத்த மதத்தவர்கள். எனக்கு சிங்கள மொழி தெரியும் என்பதால் அவர்களில் சிலருடன் பேச்சுக் கொடுத்து நட்பாகிப் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. இவர்களுள் பலர் ஏற்கெனவே இங்கு வந்து சென்றவர்களாம். எனவே, அவர்களது பயண அனுபவங்களையும் அறிய முடிந்தது.
காலை 11.00 மணி வரை ஒரு தடவையும், மதியம் 2.00இலிருந்து 4.00 மணி வரை இன்னொரு தடவையுமாக நீராடல் வாய்ப்பு இங்குள்ள சமூகச் சேவை அதிகாரிகளால் வழங்கப்படுகின்றது. மிக நேர்த்தியாக, எந்தக் குழப்பமும் வர முடியாத வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள். மாற்றுத் திறனாளிகள், பிள்ளைகளுடன் வருபவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஏனையோர் அவரவர் வாய்ப்பிற்காக மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும்.
நான்கு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் எங்களை ஒவ்வொருவராக உள்ளே நுழைய அனுமதித்தார்கள். நான்தான் முதலாவதாக நுழைந்தேன். புனித மாதாவின் அனுக்கிரகத்தால் அப்படியொரு ஆசீர்வாதம் எனக்கு அருளப்பட்டது என்றே நினைத்துக் கொண்டேன்.
உள்ளே நுழைபவர்கள் இருக்கைகளில் உட்கார வைக்கப்படுகின்றார்கள். பின்பு, ஜெபிக்கும் வேளை ஆரம்பமாகின்றது. எங்கள் அடைக்கப்பட்ட பகுதிக்கு வெளியே தங்கள் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைக் கண்டபோது இவர்கள் எல்லோருக்கும் இந்த இறையருள் கிடைக்குமா என்ற சிந்தனையே மனதில் ஓடியது. அந்த அளவுக்கு ஏராளமானவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள்.
வரிசையாக இருந்த குளியலறை ஒன்றிற்குள் நான் அனுமதிக்கப்பட்டேன். காலணிகளில் தொடங்கி ஆடைகள் அனைத்தையும் களையும்படி பணிக்கப்பட்டேன். பின்பு, ஒரு மூலைப்பகுதியில் நான் நின்றுகொண்டு என் உள்ளாடையைக் களைய, என் இடுப்பில் ஈரத்துவாய் ஒன்றைக் கட்டினார்கள். பின்பு, என் மதம் என்னவென்று அங்கு பணியாற்றிய மூவருள் ஒருவர் வினாவினார். பின்பு, ஆங்கில மொழியில் "பரமண்டலப் பிதாவே…" என்று தொடங்கும் ஜெபம் ஜெபிக்கப்பட்டது. இதன் முடிவில் ஒரு காலை முன்வைத்து அங்கிருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கும்படி பணிக்கப்பட்டேன். இறங்கிய வேகத்தில் என் இரு பக்கங்களிலும் நின்ற இருவர் என் முதுகைப் பிடித்து வளைத்து இடுப்பு வரை தண்ணீருக்குள் இறக்கி அதே வேகத்தில் தொட்டிக்கு வெளியே ஏற்றி விட்டார்கள். உடம்பெல்லாம் பனியுள் உறைந்தாற்போல் சில்லிட்டது. ஓர் அற்புதமான உணர்வு என்னுள் ஆக்கிரமித்தது. பிறகு, முன்பு நின்ற மூலைப்பகுதியில் துவாயை அவர்கள் களைய, உள்ளாடையை அணிந்து கொண்டு தண்ணீர்த் தொட்டியிருந்த சிறு அறைக்கு வெளியே வந்தேன். மீண்டும் உடைகளை அணிந்து கொண்டு நன்றி சொல்லி விட்டு வெளியே வரும்போது புதிதாய்ப் பிறந்த உணர்வே என்னை ஆட்கொண்டது.
1864 தொடங்கி 1872 வரை இந்தத் திருத்தலம் இந்தப் பிராந்திய மக்களின் திருத்தலமாகவே இருந்து வந்திருக்கின்றது. அப்பொழுதெல்லாம் வருடா வருடம் 30,000 பேர் வரையில் வந்து போவார்களாம். இங்கு வந்து பலர் புதுமையான வகையில் பல நோய்களில் இருந்து குணமாகவே 1873க்குப் பின்பு அகில உலகரீதியாக மக்கள் கவனம் இத்திருத்தலம் பக்கம் திரும்பத் தொடங்கியது. 1876இல் குகைக்கு மேலே ஆலயம் எழுப்பப்பட்டது. பின்பு, 1958இல் 20,000 இருக்கைகளுடன் தேவாலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்திலிருந்து ஒக்டோபர் மாதம் வரை இங்கு பக்தர்கள் வந்து போகின்றார்கள். ஆகஸ்ட் 15 அன்று பரலோகத்திற்கு ஆரோகணித்த மாதா திருநாள் இங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது.
இப்பொழுதெல்லாம் 4 முதல் 6 மில்லியன் வரையிலான பக்தர்கள் இங்கு ஆண்டுதோறும் வருகை புரிகின்றார்களாம். (இன்றைய கணிப்பில் தொகை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கலாம்!). 1978இல் எடுத்த கணிப்பின்படி 111 நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வருகின்றார்கள். இதில் 69 விழுக்காட்டினர் பெண்கள்.
இந்தக் கோடிக்கணக்கான புனிதப் பயணிகளில் நானும் ஒருவனாக இங்கு போக முடிந்ததில் எனக்கு பரிபூரண ஆத்ம திருப்தி! அதிலும் மணிக்கணக்கான காத்திருப்புக்குப் பின் கிடைத்த அந்தப் புனித நீராடலால் பெரிய அளவில் எனக்கு அகமலர்ச்சி கிடைத்துள்ளது! வத்திக்கான் (The Vatican) போய் வந்தபின் ஆன்மிகரீதியாக எனக்குக் கிடைத்த ஓர் அதிஅற்புத வாய்ப்பாகவே இதை மதிக்கின்றேன்.
“