வஞ்சிர மீன் (salmon) முட்டையிடுவதற்கு (spawn) நீரோட்டத்திற்கு எதிரே (upstream) செல்வது ஏன்?
தான் பிறந்த இடத்திலேயே முட்டையிட வேண்டும் என்னும் இயற்கையான உந்துதல் (natural instinct) வஞ்சிர மீனுக்கு உண்டு. வழக்கமாக ஆற்றின் அமைதியான பரப்பு இளம் வஞ்சிர மீன் வளர்வதற்குப் பாதுகாப்பான இடமாக விளங்குகிறது. வளர்ந்த வஞ்சிர மீன் புது நீரை அடைந்தவுடனே உண்பதைத் தவிர்த்து விடுவதால் மிகவும் மெலிந்து போகிறது. பின்னர் அது தான் முட்டை இட விரும்பும் இடத்தை சென்றடைந்து முட்டையிடுகிறது. இளம் வஞ்சிர மீன் சில மாதங்கள் வரை ஆற்றிலேயே தங்கி இருந்து பின்னர் கடலை நோக்கிச் செல்லத் துவங்குகிறது. அங்கு நான்கு ஆண்டுகள் வரைத் தங்கி இருந்து, பின்னர் மேற்கூறிய சுழற்சியை மீண்டும் துவங்குகிறது.
மீன் ஏன் நீருக்கு வெளியே வாழ முடிவதில்லை?
மீன்கள் நீருக்கடியில் மூச்சு விடும் தனிச் சிறப்பு வாய்ந்த குணநலனைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு செவுள்கள் (gills) எனப்படும் சிறப்பு உறுப்புகள் உண்டு. இச்செவுள்கள் மீனின் தலையில் ஒவ்வொரு பக்கமும் அமைந்துள்ள திசுக் கம்புகள் (tissue bars) ஆகும். இவற்றில் சின்னஞ்சிறு இரத்த நாளங்களைக் கொண்டிருக்கும் விரல்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. மீன்கள் வாயின் மூலம் நீரை விழுங்கிச் செவுள்கள் மூலம் அதனை வெளியேற்றும். செவுள்களில் இரத்தம் மிகுதியாக இருக்கிறது; நீரிலுள்ள ஆக்சிஜனைப் பெற்று இரத்தத்துடன் அதனை மீன்கள் கலக்கச் செய்கின்றன.
நுரையீரல்கள் வாயிலாகக் காற்றை இழுத்துச் சுவாசிக்கும் விலங்குகள் போன்று இம்முறையில் செவுள்கள் செயல்படுகின்றன. ஆனால் இச்செவுள்கள் நீரில் அல்லாமல் வெளியே செயல்பட முடிவதில்லை. எனவேதான் மீன் நீருக்கு வெளியே வாழ முடியாது.
மீனின் பெரும்பாலான உடலமைப்பு வலிமையான தசைகளால் ஆனது; இதன் உள்ளுறுப்புகள் ஒரு சிறு பகுதியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. மீனின் துடுப்பு போன்ற அமைப்புகள் (fins) நீரில் நீந்திச் செல்வதற்கும் அங்கேயே நிலைத்து இருப்பதற்கும் உதவுகின்றன.
“