உங்களின் பி.எஃப்.எஃப்
இந்த உலகியல் வாழ்வில் மிக முக்கியமான நண்பன் அல்லது உற்ற துணை யார் என்று கேட்டால் ஒரே வார்த்தையில் விடையைக் கூறி விடலாம்!
பணம்..! இந்த மூன்றெழுத்தின் துணை இருந்தால் "பாதாளம்வரையும் பாயலாம்." இந்த மூன்றெழுத்தைக் கூறினால் "பிணமும் வாயைத் திறக்குமாம்."!- அனுபவஸ்தர்களின் இந்தப் பழ(ண)மொழி பணத்தின் வலிமையைத் திறம்பட எடுத்துக் கூறுகிறது.
உங்களின் பி.எஃப்..எஃப் – BFF – Best Friend Forever – பணம்தான் என்பதை அது இல்லாதபோது உங்களுக்கு நேரும் அனுபவங்கள் எடுத்துக் கூறும்.
சீன சோதனை
இந்த பணத்தின் வலிமையை சீனாவில் சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு விசித்திர சோதனை நிரூபிக்கிறது. இந்த சோதனைக்காக மாணவர்களை அழைத்த ஆய்வுக் குழு, அவர்களை இரு பிரிவுகளாகப் பிரித்தது.
முதல் பிரிவில் இருந்தவர்களிடம், சீன கரன்ஸி நோட்டுக்கள் கத்தை கத்தையாகக் கொடுக்கப்பட்டன அவர்களின் பணி நோட்டுக்களை விரல்களால் தொட்டு எண்ண வேண்டியதுதான்!
இரண்டாவது பிரிவில் இருந்தவர்களிடம், வெற்றுக் காகிதங்கள் கத்தை கத்தையாகக் கொடுக்கப்பட்டன. அவர்களின் பணி காகிதங்களை விரல்களால் தொட்டு எண்ண வேண்டியதுதான்.
இந்த இரு பிரிவினரும் தம்மிடம் தரப்பட்ட கரன்ஸிகளையும் காகிதங்களையும் எண்ணி முடித்தனர். பிறகு அவர்கள் அனைவரையும் 120 டிகிரி பாரன்ஹீட் உஷ்ணத்தில் கொதிக்கக் கொதிக்க இருந்த வெந்நீரில் அவர்கள் கைகளை நுழைக்குமாறு ஆய்வாளர்கள் சொன்னார்கள்.
விளைவு என்ன? கரன்ஸி நோட்டுக்களை எண்ணியவர்கள், காகிதங்களை எண்ணியவர்களைவிட குறைந்த அளவே வலியை உணர்ந்ததாகக் கூறினார்கள்.!
அவர்களது உணர்வுகளையும் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். கரன்ஸி நோட்டுக்களைத் திருப்பித் தந்ததற்குப் பின்னரும் பத்து நிமிடங்களுக்கும் மேலாக அவர்களது உணர்வுகள் மேம்பட்ட நிலையில் உற்சாகம் ததும்ப இருந்தது.
இதே போன்ற சோதனைகள் பலவற்றை மேற்கொண்ட ஆய்வுக் குழு பணம் பொதுவாக மூளையில் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் மருந்தாக அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்!
ஒரு மாத்திரையும் போட்டுக் கொள்ளாமல் பணம் வலியைக் குறைப்பதையும் அது அளவில் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தருவதையும் அவர்கள் ஆய்வு உறுதிப்படுத்தியது.
இது எப்படி ஏற்படுகிறது என்பதை ஆய்வாளார்கள் பின்னர் விளக்கினர். ஆழ்மன விளைவாக ப்ரைமிங் (priming) என்ற செயல்முறையின்படி மன ரீதியிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான அமைப்புகள், நமது பார்வையை, வெகுவாக நல்ல விதமாகவோ அல்லது மோசமாகவோ பாதிக்கின்றன.
இந்தச் சோதனையில் பணத்தைத் தொட்டவர்கள் பாஸிடிவ்வாக உற்சாகத்தை அடைந்ததோடு வலியையும் மறந்தனர். காகிதத்தைத் தொட்டவர்களுக்கு எந்த உற்சாகமும் ஏற்படவில்லை.
இது சீனாவுக்கு மட்டும்தான் பொருந்துமா? சீனாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. உலகெங்கும் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுவான முடிவையே இந்தச் சோதனைகள் சொல்கின்றன என்கிறார் ஆய்வாளார் ‘வோ.’
கிரெடிட் கார்டுகளோ அல்லது வங்கியில் இருக்கும் டெபாசிட்டுகளோ இந்த உணர்வைத் தருவதில்லை என்பது ஆய்வு முடிவு கூறும் இன்னொரு முக்கிய அம்சம்!
ஆக பணத்தின் கவர்ச்சியும், அதன் வலிமையும் சீன சோதனையால் நன்கு உணரப்படுகின்றது.!
பணத்தைக் கவர விதிகள்
இந்தப் பணக் கவர்ச்சியை நம்மிடம் கூட்டுவதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கிய மூன்றைப் பார்க்கலாம்!
விதி 1 : மன அமைப்பை மாற்றுங்கள்
உங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில் பணம் சம்பாதிப்பதும் அதைச் சேர்ப்பதும் மிகவும் கஷ்டமான விஷயமாக நீங்கள் கருதுகிறீர்களா? மாதச் செலவுகளுக்கு ஈடு கட்டவும் கடன்களை அடைக்கவும் வெகுவாக கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே என சதா கவலைப்படுகிறீர்களா? இதை அகற்றுவதற்கான வழி போராட்டமும் கவலையும் நிறைந்த மன அமைப்பை விட்டு ஒதுக்கி புதிய மன அமைப்புக்கு வழி கோலுங்கள்.
வழக்கமாகவே உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பணம் உள்ளிட்ட விஷயங்களில் பாஸிட்டிவ்வாக வைத்துக் கொண்டால் ஒரு மாறுதல் நிச்சயம் ஏற்படும். உங்கள் நம்பிக்கை மிக முக்கியம். புலம்பல் மனப்பான்மையை விட்டுவிட்டு உங்களால் சம்பாதிக்க முடியும், சேர்க்க முடியும் என்பதை மனப் பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பணம் வரும் வழியும் அது சேரும் வழியும் தானாகவே வர ஆரம்பிக்கும்!
விதி 2 : இருப்பதை எண்ணி சந்தோஷப்படுங்கள்
இல்லாததை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறீர்களா? பணம் இல்லை, கடன் அடைக்க வழி இல்லை என்ற எண்ணங்கள் இல்லாத ஏதோ ஒன்றைச் சுட்டிக் காட்டும் எண்ணங்கள். இந்த "இல்லை, இல்லை" என்னும் எண்ணங்கள் ஆற்றலை உங்களிடம் வர விடாமல் தடுக்கும் மாபெரும் தடுப்புகள்! உலகில் அனைத்துமே விஞ்ஞான முறைப்படி பார்த்தால் ஆற்றல் மயம்தான். அதன் பாய்ச்சலை உங்களிடமிருந்து தடுக்காதீர்கள்.
இதற்கு மாறாக உங்களிடம் என்னென்ன இருக்கிறது என்பதை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.அதை சிறிய நோட்டில் எழுத ஆரம்பியுங்கள். பணத்தை மட்டும் எழுத வேண்டும் என்பதில்லை. உங்களிடம் இருக்கின்ற நல்லது, அனைத்தையும் பதிவு செய்ய ஆரம்பிக்கலாம். நாளடைவில் இந்தப் பழக்கம் ஆற்றலை உங்கள் பக்கம் பாய வழி வகுக்கும்.!
விதி 3: நெகடிவ்வை மாற்ற பாஸிட்டிவ் நடவடிக்கை எடுங்கள்
நெகடிவ் உணர்ச்சிகளைத் தடுப்பது எப்படி என்று யோசிக்க வேண்டாம். உங்களால் சுலபமாக முடியும்.! நெகடிவ் உணர்ச்சிகள் வர ஆரம்பித்தால் உடனடியாக அந்த உணர்ச்சியை மாற்றப் பாருங்கள். இல்லாததை நினைத்து வருத்தப்படுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. இருப்பதை நினைத்து மகிழ்வது நல்லது என்ற அணுகுமுறையில் உடனடியாக நெகடிவ் எண்ணத்தைத் தவிர்க்கும் வகையில் வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுங்கள்.
பத்து நிமிட உற்சாகமான நடைப்பயிற்சி கூடச் சிறந்த வழிதான்.! அடுத்ததாக, உங்களிடம் பணம் நிறைய இருக்கிறது என்ற எண்ணத்தைக் கொண்டு வாருங்கள். அதைச் செயல்படுத்தவும் செய்யலாம். இல்லாத ஒருவருக்கு ஒரு ரூபாய் தானமாக திருவோட்டில் போடுங்கள், அது கூட இல்லாத ஏழையைவிட, நீங்கள் எவ்வளவோ மேல் என்பதை உங்களுக்கு உணர்த்துமல்லவா?
இருக்கும் பணத்தையும், இனி வரப் போகும் பணத்தையும் எண்ணும்போதே உங்களிடம் ஒரு மாறுதல் வர ஆரம்பிக்கும். இதைத்தான் கவர்ச்சி விதி என சொல்கிறார்கள். சமீபத்தில் உலகையே ஈர்த்துள்ள தி லா ஆஃப் அட்ராக்ஷன் – கவர்ச்சி விதி – தரும் ரகசியம் இதுதான்.!
ஒரு புதிய செக்கின் வரவு, பழைய பாக்கி வசூல், ஒரு போனஸ் என்று இப்படி ஏதேனும் வந்தால் மேலே கண்ட மனப் பழக்கங்கள் மூலம் பணம் உங்களிடம் வருவதற்கான கவர்ச்சிகளை நீங்கள் அடைய ஆரம்பிக்கிறீர்கள் என்பது உறுதியாக்கிவிடும். இவற்றை ஒரு சிறிய குறிப்பேட்டில் பதிவு செய்ய ஆரம்பியுங்கள். உங்களின் சம்பாத்தியம் மாறி மேலே முன்னேற அடிப்படையான வழிகள் இவைதான்.!
பணத்தைப் பற்றி ஃபீல் செய்யுங்கள்.! வேதனையைக் குறையுங்கள்.!! பணம் சேர்க்கும் வழிகளை மேற்கொள்ளுங்கள்.! உங்களின் பெஸ்ட் ப்ரண்ட் ஃபார் எவர் பணமே..!!
“