பேரரசர் சீஸரைச் சந்திக்க, தனது அமைச்சரான பொதினசுடன் எலூசியத்தில் இருந்து அலெக்சாண்டிரியாவுக்குப் பயணமானான், விரட்டப்பட்ட எகிப்து மன்னன் 13-ம் டாலமி.
அதேபோல், கடற்கரை நகரமான அஸ்கலனில் அடைக்கலம் புகுந்திருந்த கிளியோபாட்ராவும் சீஸரைச் சந்திக்க வந்தாள். எல்லோரும் அறியுமாறு அலெக்ஸாண்டிரியா சென்றால், தன்னை சீஸரின் ஆட்கள் கொல்கிறார்களோ இல்லையோ, டாலமியால் நிச்சயம் கொல்லப்படுவோம் என்று கருதினாள் அவள்.
இதனால், தன்னுடன் வந்த தங்கை அர்சினியைப் பிரிந்து, மாறுவேடத்தில் மிகவும் வேண்டிய தோழியர் சிலருடன் அலெக்ஸாண்டிரியாவுக்குச் சென்றாள் கிளியோபாட்ரா.
சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள்..
அலெக்ஸாண்டிரியாவில் உள்ள எகிப்திய அரண்மனையில் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார் ஜூலியஸ் சீஸர்.
‘எகிப்தைக் கைப்பற்றியாயிற்று.. அடுத்து என்ன செய்யலாம்?’ என்று அவர் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு பொருள் அவரது பார்வையை பளிச்சென்று கவர்ந்தது.
அந்தப் பொருளைக் கூர்ந்து நோக்கினார் சீஸர். அது பாரசீக நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட அழகான ரத்தினக் கம்பளம். திடீரென்று அது நெளிந்ததுதான் அவரது பார்வையைத் திடீரென்று இழுத்தது. சீஸர் உள்பட அவையில் இருந்த அனைவரது பார்வையும் அந்த ரத்தினக் கம்பளத்திலேயே குவிந்திருந்தது.
சீஸர் அந்தக் கம்பளத்தை அவிழ்த்து என்னவென்று பார்க்க உத்தரவிட்டார். அவரது வீரன் ஒருவன் அந்த ரத்தினக் கம்பளத்திடம் வேகமாகச் சென்றான். அவன் அதனருகில் சென்றபோதும் அந்த கம்பளம் நெளிந்து கொண்டிருந்தது.
"ஒருவேளை மலைப்பாம்பாக இருக்குமோ…" என்றுயோசித்தவன், அதை அவிழ்த்து உருட்டி விட்டான்.
கம்பளத்தின் ஒருமுனை அந்த வீரனின் காலடியில் இருக்க… மறுமுனை ஜூலியஸ் சீஸரை நோக்கி வேகமாக உருண்டு போனது. கம்பளத்திற்குள் உருண்டு வந்த அந்தப் பொருள் ஒரு அழகுப் பதுமையாக ஜூலியஸ் சீஸரின் கால் அருகில் வந்து விழுந்தது. அவள் வேறு யாருமல்ல. கிளியோபாட்ராவேதான்!
அவளைப் பார்த்த மாத்திரத்தில் அரியணையில் இருந்து எழுந்துவிட்டார் ஜூலியஸ் சீஸர். அவளை உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை வேகமாக ஒரு நோட்டமிட்டார்.
கொள்ளை அழகு என்பார்களே… அப்படிப்பட்ட ஓர் அழகு அவளது மேனியில் நைல் நதியாக தவழ்ந்தோடியது. சீஸர் அவளது அழகில் கிறங்கி நின்றார். பின்பு சுதாரித்து,
" பெண்ணே நீ யார்?" என வினவினார்.
"நான்தான் கிளியோபாட்ரா! இந்த பேரரசுக்கு மகாராணி" அவள் கம்பீரமாகப் பதிலளித்தாள்.
"என்ன வேலையாக இங்கே, இந்த கோலத்தில் வந்தாய்?"
"அது பற்றி தனியாகத்தான் நான் தங்களிடம் பேச வேண்டும்"
"அவ்வளவு ரகசியமான விஷயமா அது?"
"ஆமாம்! இன்னொன்று… உங்களுக்காக பரிசு ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறேன்"
13-ம் டாலமி பரிசு என்று, பாம்பேயின் தலையைக் கொடுத்ததால், இவளும் அப்படி ஏதாவது கொண்டு வந்து இருப்பாளோ என அவர் எண்ணிக் கொண்டிருந்தபோது
"நீங்கள் வேறு எதையோ நினைத்துப் பயப்பட வேண்டாம். அந்தப் பரிசு நானேதான்"!
கிளியோபாட்ரா இப்படிச் சொன்னதும், ஜூலியஸ் சீசரின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
"இரவில் நாம் இருவர் மட்டும் தனியாக சந்தித்துப் பேசுவோம்…" என்று கூறிவிட்டு, தன் பணிப்பெண்களை அழைத்து, கிளியோபாட்ராவை நன்றாக உபசரிக்க உத்தரவிட்டார் ஜூலியஸ் சீஸர்.
(இன்னும் வருவாள்…)