அவன் பெயர் மாரிமுத்து. அவனுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லை. மாரிமுத்து ஓர் உழவன். ஆற்றுப் பாசனம் பொய்த்த உழவன். எட்டு ஏக்கர் பூமி. இருக்கிற வயல்வெளியில் அவன் பங்கு அதிகம்தான். பூமி வறண்டதால் வானம் வறண்டதா, வானம் வறண்டதால் பூமி வறண்டதா, தெரியாது. மழை வரும் வரும் என்று ரேஷன் கடை பாமாயிலுக்குப் போலக் காத்திருக்க வேண்டியதாகி விடுகிறது. அது வந்தா மாதிரி வந்து ஒரே நாளில் தீர்ந்துவிட்டதாகச் சொல்லிவிடுகிறார்கள். சிறு தூறல். அத்தோடு வானம் கலைந்து விடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கிறாப் போல.
இனியும் வானத்தை எவ்வளவு நம்புவது? வாய்க்காலை நம்பி இனி பிரயோசனம் இல்லை. நம்ம பேரைச் சொல்லி மாநிலமும் மாநிலமும் அடித்துக்கொண்டு அரசியல் பண்ணுகிறார்கள். மொத்தத்தில் நமக்கு இனி ஆற்றுப் பாசனம் இல்லை. மாரிமுத்து, இருக்கிற நிலத்தில் கிணறு ஒன்று எடுக்க விரும்பினான். அதற்கும் வில்லங்கம் வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
ரெண்டாள் ஆழம் தோண்டும்போதே ‘ணங்’கென்று சத்தம். மேலே கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாரிமுத்துவுக்கே அந்தச் சத்தம் கேட்டது. ‘ணங்’.
"ஏய்! நிறுத்து!" என்று கத்தினான் மாரிமுத்து. "என்ன சத்தம் அது" என்று கேட்டான்.
"தெர்லங்களே!"
"பார்த்து கடப்பாரையைப் போடுறா. புதையல் கிதையல் இருக்கப் போவுது."
மெல்ல மண்ணை நெகிழ்த்தி விலக்கிப் பார்த்த முகூர்த்த வேளையில், ஆகா அழகான சிலை! ஐம்பொன். விடிந்தும் விடியாத நேரம். பிரசவத்தில் வெளியான சிசு போல. வீறிட்டு சிசு அழுதபடி வெளியே வரும். இங்கே சத்தமே இல்லை. சீதாப் பிராட்டியா இவள்? கொடிபோல் இடை சிறுத்த, மேலெடுப்பில் தனம் பூரித்த அம்மன் நாச்சியார்.
ஏய் கூட வில் கிடைக்குதா பாரப்பா!
லேசாய் அவளுக்குக் கண் கூசினாப் போலிருந்தது. வெளிச்ச பலூன் இன்னும் ஆகிருதி பெருக்கிக்கொள்ளாமல் ஊருக்குள் புன்னகையுடன் நுழைகிற வாஸ்து வேளை அது. அவளுக்குத் திகைப்பு. இப்போது எங்கே இருக்கிறேன், என்கிற குழப்பம். அதைவிட முக்கியம், இப்போது இப்படி விழிப்பு வந்த நிலையில், இதுநாள் வரை எங்கிருந்தேன் என்று தெரியாத குழப்பமே அதிகம் இருந்தது. மண்தொட்ட ஜில்லிப்பு இந்நாட்களில், இத்தனை வருடங்களில், நூற்றாண்டுகளில் பழகியிருந்தது. சட்டென வெளியே காற்றின் ஸ்பரிசத்துக்கு, தான் வந்தது புது அனுபவம்.
"ஏல! பாத்துத் தூக்குங்கடா!"
அந்த மொழி, அது தமிழ்தான். ஆனால் அவள் கேட்டிராத புதிய குரலாக, புதிய உச்சரிப்பாக அது கேட்டது. தமிழை வேறு மாதிரியாகக் கூடப் பேச முடியுமா என்கிற முதல் திகைப்பு. கண்விழித் தாமரை இன்னுமாய் விரியத் திறந்து ஆச்சர்யத்துடன் நாச்சியார் பார்த்தாள். ஆகா, இது பூலோகமா? பூலோகந்தானா? ஆம் என்றாலும் இது பூலோகம் போல இல்லை. அவள் பார்த்த, புழங்கிய பூலோகம் இது இல்லை.
அந்தக் காற்றேயல்லவா புதுசாய் இருந்தது! அவளுக்கு உடம்பு லேசாய்ச் சிலிர்த்து நடுங்கினாப் போலிருந்தது. ஆமாம், கடைசியாய்… அந்த நடுக்கம்.
எல்லாரும் அலறியோடுகிறார்கள். கோவிலின் தூங்காவிளக்கு. கோயில்யானை மணிபோல அது இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே ஆடுகிறது. சாளவாய் ஒழுகல் போல விளக்குகளின் ஊஞ்சல் அசைவில் எண்ணெய் ததும்பிச் சிந்துகிறது. பெரும் குலுக்கல்தான். கோவிலின் காண்டாமணி நீதி கேட்கும், மன்னனின் மண்டபவாயில் மணி போலத் தானே அடிக்க ஆரம்பிக்கிறது. பக்தகோடிகள் கோவிலை விட்டு வெளியே ஓடுகிறார்கள். கூச்சல். குழப்பம். பரபரப்பு. பூகம்பம். மரங்களே நடுங்கின. பறவைகள் வில்லின் வாளிகளாய் விருட்டெனக் காற்றில் வீசினாப் போல எழும்பிப் பறக்கின்றன.
யாரது? ஞானதேசிகன். அம்மா! ஊருக்கே சோதனையா… எல்லாரும் கோவிலை விட்டு வெளியே ஓட, பட்டர்… உள்ளே பாய்ந்தோடி வருகிறார். பெரும் குலுக்கல்தான். எட்டு வைத்த இடம் பிசகித் தள்ளாடி வருகிறார். பயம் இல்லை. அந்தக் கண்ணில் ஒரு வெறி. தீர்மான வெறி. நான் இருக்கேன் அம்மா! பாய்ந்து நாச்சியாரை அப்படியே வாரியணைத்துக் கொள்கிறார். துளசி மணி மாலைகளை மீறி அவரது களபம் பூசிய மார்பில் இருந்து சிறு வியர்வை நெடி. பரபரப்பாய், பதட்டமாய் இருந்தார். நிற்க நேரம் இல்லை. யோசிக்கவும் நேரம் இல்லை. நாச்சியாரை அணைத்தபடி அவர் கோவிலுக்கு வெளியே ஓடுகிறார்.
மழை. மழை என்றால் சன்ன மழை இல்லை. பேய்க்காற்று. ஊழிதான் இதுவா? ருத்ரமூர்த்தியின் நடனமா இது, என்னும்படி மரங்கள் பேயாய் ஆடிக் குலுங்கின. உடம்பில் ஒரு சாட்டைபோல் மழை அடித்து, உள்ளே குளிர் கத்தியென வெட்டியது. எங்கே ஓடுகிறார்? அவருக்கே தெரியாது. எதோ சக்தி அவரை இயக்கி முன்னே தள்ளிச் சென்றது. மூளை கால்களுக்கு வந்திருந்தது. ஓடு. ஓடு. ஓடிக் கொண்டேயிரு. அவிழ்ந்த குடுமி. பித்துப் பிடித்த ஓட்டம். பத்து இருபது விநாடிக்கொரு தரம் பூமி அசைவதை நிறுத்தும். திரும்பக் குலுங்கும். மண், கல், புதர் எதுவும் தெரியாமல் பட்டர் ஓடுகிறார். எதோ தடுக்கி… கல்லோ, கட்டியோ, யாரோ விழுந்து கிடக்கும் மனிதரோ, உடைந்து கிடக்கும் மரக்கிளையோ, தட்டி அவர் விழுகிறார். அப்பவும் நாச்சியாரைப் பிரிய விடவில்லை. அவளைக் காப்பாற்றிவிடும் ஆவேசத்தில் தன்னுயிர் துச்சமாகி விடுகிறது.
ஞானதேசிகன் திடீரென்று பார்த்தார். நாச்சியார் தலைப்பக்கம் காயம். ஆ, என்ன இது? ரத்தமா? பதறுகிறார். அது அவர் உடம்பில் இருந்து சிந்தியது என்பதே அவருக்குத் தெரியவில்லை. ஞானதேசிகன் அப்படியே காற்று தள்ளியதில் விழுந்தார். அப்புறம் நடந்த விஷயங்கள் அவருக்குத் தெரியாது.
நாச்சியாருக்கும் தெரியாது.
இந்த இடம் எல்லாம் அப்ப எத்தனை செழிப்பாய்க் கிடந்தது! பூமி சிரித்த காலங்கள். கை நிறைந்த வளையல் சிணுங்கல்களுடன் பிள்ளைத்தாய்ச்சி நடமாடினாற் போலக் காலம். பூமியில் மரங்கள் அல்ல, விருட்ச ராஜாங்கம். தோப்பும் துரவுமாய் பாதையோரங்கள் கொப்பும் கிளையுமாய் நிழல் விரித்துக் கிடந்தது. விருட்சப் பந்தல். கோவில் வாசலில் தேர் போலத் தோப்புகளில் விருட்சங்கள் நிமிர்வுடன் நின்றன. சூரியன் உத்தரவு வாங்கிக்கொண்டு உள்நுழைந்த காலங்கள் அவை. பிறந்த குழந்தையானாலும், பெத்தவளும், அதன் அப்பனும், அதன் சிறு அழுகைக்கும் பதறிப் பரபரத்து, சிறு சிரிப்புக்கும் புல்லரித்துப் புளகாங்கிதப்படுவது போல. பட்சி சூரியனுக்குக் குழந்தை போல.
அங்குசத்துக்கு யானை கட்டுப்பட்டால், சூரியன் பட்சிகளுக்குக் கட்டுப்பட்டவனாய் இருந்தான். காலையில் பட்சிகள் முன்னால் சூரியன் உத்தரவு கேட்டு நிற்பதும், ட்விட் ட்விட் என அவை உத்தரவு வழங்கிய பின், சூரியன் புக, விடியும் காலைகள்!
"எந்தக் காலத்தியதோ, தெர்லங்களே."
"ம். உடன்னே நம்ம தாசில்தாருக்குச் சொல்லணும்டா. யாரு கண்டா, இந்தப் பகுதியில் கோவில் கீவில் கூட அடியில இருக்குதோ என்னமோ!"
அவர்களை விட அவளுக்குத்தான் திகைப்பு அதிகமாய் இருந்தது. அவளால் யூகிக்க முடியாத எதிர்காலத்துக்கு அல்லவா எப்படியோ அவள் வந்து சேர்ந்திருந்தாள். எந்த வகையிலும், நிகழும் இறப்பும் காண, எதிர்காலத்தில் ஒரு அபத்த வாசனை, அத்தனை ஒத்திசைவு இல்லாமல்தான் ஆகிவிடுகிறது.
எல்லாம் புதுசாய்க் கூட அல்ல, புதிராய் அல்லவா ஆகிவிடுகிறது! இந்தப் பேச்சு, இந்த பாவனை, இந்த உடை பாணியே கூட அவள் அறியாதது. என் நாட்டு மக்கள் புருஷர்களாயினும் ஸ்திரீகளாயினும் தார் பாய்ச்சிக் கட்டினார்கள். நீள் கூந்தல் நடு வகிடு எடுத்து இரு பாலரும் குடுமி போட்டார்கள். பெண்கள் தலையிலும், புருஷன்மாரானால் மார்பிலும் பூச்சரமோ, மாலையோ சூடினார்கள்.
அட, மனிதர்களே எத்தனை பேராகிருதியாய் இருந்தார்கள்! அவளைக் கடைந்த ஆழ்வான், மலைபோல் இருந்தான்! சொளகு போன்ற கரங்கள்! மேடாய்ப் பொங்கிய புஜங்கள்! பட்டறை உலையின் பெருமூச்சுகளுடன் அவன் உலோகத்தை வாட்டுகையில் முகமெல்லாம் ஜ்வலிக்கும்! காட்டெருமைக் கொம்புகளாய் இருபுறமும் அரைவில் எடுத்த மீசை! தென்னம்பாளை போன்ற உறுதியான மார்பின் வியர்வை நதிகள், நடுவே பாலம் போல் பூணூல். இந்த மனிதர்கள் வற்றி ஒடுங்கிப் போனார்களே, என்றிருந்தது. தேகங்களில் இயற்கையாய் இருந்த அந்த தேஜஸ், கட்டுமஸ்து, முறுக்கம்?
புலிக்கு பூனை பிறந்தாப் போலிருந்தது.
கண் கூசச் செய்கிறதாய் வெயில் உக்கிரமாகியிருந்தது. யாரோ ஓடிப்போய் தேங்காய், பூ, பழம் வாங்கி வந்தார்கள். அப்படியே தேங்காய் உடைத்து நைவேத்தியம், கற்பூர ஆரத்தி. வயலிலேயே அழுக்குப் பாராட்டாமல் சாஷ்டாங்க நமஸ்காரம். மாரிமுத்து, நீ அதிர்ஷ்டக்காரன்டா. நாச்சியா அனுக்கிரகம் உனக்கு பூரணமா கெடைச்சிருக்கு. எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினாயோ!
என்ன அற்புதக் கலை வடிவம்!
ஹா! அருவத்தில் உருவத்தைக் கண்டுபிடித்து, உயிரையும் தேடியிருக்கிறான் ஒருவன்!
மாரிமுத்து கைகட்டி நிற்கிறான்.
நான் சாமானியன். இப்படிப் பெரிய விஷயம் எனக்கு நடந்தால் நான் என்ன செய்வது? என்னால் தாள முடியுமா இதை! அவன் கால்கள் துவண்டன. பரவசத்தை விட பயமே பெரிதாய் இருந்தது அவனுக்கு. குடும்பத்தின் நெருக்கடிகளிலோ, தொழில் சிக்கல்களிலோ அதிகபட்சம் அவன் கடவுளுக்கு என வேண்டிக்கொள்வதும், காரியம் சித்தியானால் போய் பிரார்த்தனையை நிறைவேற்றி வருவதுமாய், எளிய மனிதனே அவன். சில பிரார்த்தனைகள் உடனே நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போய்விடுகின்றன. சரி, சாமி அதுவா நம்மை எப்ப அழைச்சிக்குதோ பார்க்கலாம், என விட்டுவிட வேண்டியதாகி விடுகிறது. சில பிரார்த்தனைகள் மறந்துகூடப் போகின்றன. வேறொரு சிக்கல் முளைக்கையில், அதை மறந்ததால் இது பிரச்சினை என்பதாக மனம் கணக்குப் பண்ணி அதை ஞாபகத்தில் கொண்டு வருகிறது. இப்போது நாச்சியார் திடுதிப்பென்று அவன் வயலில் எழுந்தருளியிருப்பதை என்ன மாதிரியாய்க் கொண்டாடுவது என்று தெரியவில்லை. நாம் இதைச் சரியாக அணுக வேண்டுமே என்ற கவலையே அவனைப் பெரிய அளவில் தள்ளாட்டியது.
ஐயோ நாச்சியார் அம்மையே! என்னால் உன் இந்த சோதனையைத் தாங்க முடியலையே, என நினைக்கவே அழுகை வந்தது.
"ஊருக்கு நல்ல காலம் பொறக்கப் போறது. அதான் நாச்சியாளே வந்து தர்சனம் தந்திருக்கா."
–தொடர்ச்சி அடுத்த வாரம்…
“