ஒரு விதையின் பிரார்த்தனை

இலைகள் செறிந்து கிளை விரித்தால்
இணைந்து புள்ளினம் கூடமைக்கும்;
மலர்கள் பூண்டு நான்சிரித்தால்
மங்கையர் கொய்து சூடிடுவர்;

பழங்கள் குலுங்கிப் பூரித்தால்
பாய்ந்து மந்திகள் சூறையிடும்;
நிழல்வெளி பரப்பும் மோனத்தை
நித்தம் மனிதர் குலைத்திடுவார்.

வேரின் வழியே நீரருந்தி
வேர்வை சிந்தி நான்வளர்தல்
பாரில் பலர்க்கும் உழைத்தயர்ந்து
பட்டுலர்ந்த பின்ஒரு நாள்

கோடாரி கொண்டவன் வெட்டியதும்
கும்பி டென்றே அடிபணிந்து
வீடுசேர்ந்து அவன் உணவை
விறகாய் எரித்து சமைத்தற்கோ?

விதையைக் கருக்கி விட்டிடடீ!
வீணில் வளர்ந்து சாகாமல்
புதையுண் டிருளில் துயின்றிடுவேன்;
பூமகளே! அருள் புரிந்திடடீ!

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    மரங்கள் வளர்ந்து, மலர்ந்து, காயாகி, கனியாகி, கோடையிலே நல்ல நிழல் தருவது, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழும் தத்துவத்தைப் பாருக்கு எடுத்துக்காட்டத்தான். எனவேதான் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே, தரு நிழலே, நிழல் கனிந்த கனியே – என்று மனமுருகிப்பாடினார் வடலூர் வள்ளலார். பனைமரம் எல்லோருக்கும் உதவுவதற்காகவே தான் பிறந்ததாகப் பாடும், எனினும் மரத்தின் வேதனை புதிய கற்பனை. பாராட்டுகள்! -அரிமா இளங்கண்ணன்

  2. afraj

    மிக மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

  3. kiruthika

    திச் கவிதை இச் வெர்ய் நிcஎ. இ லிகெ இட் திச் கவிதை.

Comments are closed.