வெள்ளைப் பூனைக் குட்டி இங்கே
வேகமாக வருகுது
அக்கா ஊற்றும் பாலைக் குடிக்க
ஆசையாய் வால் ஆட்டுது!
துள்ளி ஓடும் சுண்டெலியைத்
தூரத்திலே பார்க்குது
துரத்திச் செல்லும் போதில் குட்டிக்
கரணம் ஒன்று போடுது!
அம்மா பூனை வந்ததுமே
அதனைப் பார்த்து ஓடுது
ஆசை பொங்கக் குட்டியைத் தாய்
அருகில் இழுத்து நக்குது!
சும்மா கிடந்த முறுக்கைத் தூக்கி
சுண்டெலியும் ஓடுது
சுற்றுமுற்றும் பார்த்துக் குட்டி
கண்ணை மூடிக் கொள்ளுது!
("முதல் வசந்தம்" என்னும் என் கவிதைத் தொகுப்பிலிருந்து-1997)