கீதாம்பரியின் பார்வையில் தெரிந்த சந்தேகப் பொறியைக் கவனித்துவிட்ட மாசிலாமணி, முகத்தில் இயல்பான ஒரு புன்னகையைக் கொண்டு வந்தார்.
"என்னம்மா அப்படிப் பார்க்கிறே?"
"மா… மாமா…! ரமணி கொச்சிக்குப் போயிருக்கிறதாகத்தானே… சொ… சொன்னீங்க…! இப்போ பம்பாயிலிருந்து போன் வந்திருக்கிறதா நர்ஸ் சொல்லறாங்க…?" கீதாம்பரிக்கு லேசாக மூச்சிரைத்தது.
"அ… அது வந்தும்மா… ரமணி கொச்சிக்குத்தான் போயிருந்தான். ஹரிஹரன் ஜெர்மனி புறப்பட்டுப் போறதுக்கு முந்தி பம்பாய்ல பிஸினஸ் பார்ட்டி ஒருத்தரை எக்ஸ்போர்ட் ஆர்டர் விஷயமா சந்திச்சுப் பேசினதுல, பேச்சு வார்த்தை முடியலை. அந்தப் பேச்சுவார்த்தையை கண்டினியூ பண்றதுக்காக ரமணி கொச்சியிலிருந்து நேரா பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனான்."
சரளமாய்ப் பொய் பேசும் கணவரைத் திலகம் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கீதாம்பரி ஈனஸ்வரக் குரலில் கேட்டாள்.
"ரமணி கொச்சியிலிருந்து பம்பாய்க்குப் புறப்பட்டுப் போனது எப்போ மாமா…?"
"இ… இன்னிக்கு… காலையிலதாம்மா…"
"மா… மாமா…"
"என்னம்மா…?"
"இ… இ… இப்படி… பக்கத்துல வாங்க…" போனார்.
கீதாம்பரி சோர்ந்த கண்களோடு உதட்டை அசைத்தாள்.
"நா… ஒண்ணு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே?"
"கேளும்மா…"
"எனக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது சந்தோஷமான விஷயம்தானே…?"
"என்னம்மா இப்படிக் கேட்டுட்டே… எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம் இது…!"
"பின்னே ஏன் மாமா… உங்க முகத்திலேயும் சரி, அத்தை முகத்திலேயும் சரி… சந்தோஷத்தோட சின்ன ரேகையைக் கூடக்
காணோம்? நேத்து வீட்டுல இருந்தப்பவும் சரி, இன்னிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கும்போதும் சரி, நீங்க ரெண்டு பேரும் ஒரு விநாடி நேரம்கூடச் சிரிச்சு நான் பார்க்கலை. எதையோ மனசுக்குள்ளே வெச்சுக்கிட்டுத் தவிக்கிற மாதிரி தெரியுது. எனக்கு அது தெரிஞ்சுடக்கூடாதுன்னு நீங்க நினைக்கிறதும் எனக்குப் புரியுது…"
மாசிலாமணி பதில் சொல்லும் முன் திலகம் தன் குரலைக் குறுக்கே நுழைத்தாள்.
"நீ நினைக்கிற மாதிரி அப்படி அதுவும் இல்லேம்மா… மாமாவுக்குக் கொஞ்சம் பிஸினஸ் டென்ஷன். எனக்கு உன்னைப் பத்தின கவலை. நீ பெத்துப் பிழைச்சா போதும்ன்னு வேண்டாத தெய்வமில்லை…"
"அத்தே…"
"என்னம்மா…!"
"எனக்கு உங்க புள்ளகிட்ட பேசணும். அதுவும் உடனே பேசணும். டெலிபோன் இருக்கிற இடத்துக்கு என்னை ஸ்ட்ரெச்சர்ல
கொண்டுபோங்க… அத்தே!…" கீதாம்பரிக்கு இப்போது மூச்சு அதிகமாக இரைத்தது.
"கொஞ்சம்… பொறும்மா!… உன்னோட உடம்பு இப்போ இருக்கிற நிலைமையில…"
"எனக்கு ஒண்ணும் ஆயிடாது அத்தே!… போன்ல அவர் குரலைக் கேட்டா, என் உடம்பு பூராவும் புதுரத்தம் ஊறிடும். என்னை டெலிபோன் இருக்கிற இடத்துக்குக் கூட்டிட்டுப் போங்க!…"
டாக்டர் மனோரஞ்சிதம் உள்ளே வந்தாள்.
"இதோ… பாரம்மா கீதாம்பரி! நீ இப்போ உன் புருஷன்கிட்ட பேசணும்… அவ்வளவுதானே? டெலிபோன் இருக்கிற ரூமுக்கு நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்… அதுக்கு மொதல்ல இந்த இஞ்செக்ஷனைப் போட்டுக்க!"
கையில் வைத்திருந்த இஞ்செக்ஷனோடு கீதாம்பரியை நெருங்கி அவளுடைய புஜத்தைப் பற்றிக்கொண்டு, பக்கத்தில் நின்றிருந்த மாசிலாமணியை ஏறிட்டாள். "நீங்க போய் பம்பாய் எஸ்.டீ.டி காலை அட்டெண்ட் பண்ணுங்க மிஸ்டர் மாசிலாமணி! நான் கீதாம்பரியைக் கூட்டிட்டு வர்றேன்."
"டா… டாக்டர்…"
மனோரஞ்சிதம் கீதாம்பரிக்குத் தெரியாமல் கண் சிமிட்டினாள். "கீதாம்பரி தன் கணவனோடு பேச ஆசைப்படறதுல எந்தத் தப்பும் இல்லை. பம்பாய் கால் பேசி முடிச்சதும் ஐ.எஸ்.டி கால் ட்ரை பண்ணுங்க! அதுக்குள்ளே நான் கீதாம்பரியைக் கூட்டிட்டு வந்துடறேன்."
மாசிலாமணி டாக்டரின் கண்சிமிட்டலைப் புரிந்து கொண்டு வெளியேற, கீதாம்பரியின் தோள்பட்டையில் இஞ்செக்ஷன் மருந்து பாய்ந்து ரத்தத்தில் சங்கமித்தது.
நிமிஷத்துக்கும் குறைவான நேரம்தான்.
கீதாம்பரியின் கண்ணிமைகள் ஷட்டர்கள் போல் இழுபட்டுக் கட்டாயமாகச் சாத்தப்பட்டன.
மனோரஞ்சிதம், திலகத்தையும் பர்வதத்தையும் ஏறிட்டாள். "இனி காலை வரைக்கும் கவலையில்லை. ஆனா, நாளைக்கும் கீதாம்பரியை இப்படி ஏமாத்த முடியாது. அதுக்குள்ளே அவ தன் புருஷன்கிட்ட பேசறதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணியாகணும். அதிர்ச்சிக்கான எந்த ஒரு விஷயத்தையும் தாங்கக்கூடிய மனப்பக்குவத்திலோ, உடல் பக்குவத்திலோ கீதாம்பரி இப்போ இல்லை. அதிர்ச்சியின் காரணமா ஃபிட்ஸ் வந்துட்டா… கீதாம்பரியை நாம இழக்க வேண்டியதுதான்."
திலகமும் பர்வதமும் உறைந்துபோய் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
**********
ரமணி டெலிபோனில் குரல் எக்கிப் பேசிக் கொண்டிருந்தான்.
"அப்பா!… நான்தான் ரமணி பேசறேன்… போனை அட்டெண்ட் பண்ண ஏம்பா இவ்வளவு நேரம்…?"
"நீ பம்பாயிலிருந்து போன் பண்றதா ஒரு நர்ஸ் வந்து கீதாம்பரிக்கு முன்னாடியே சொல்லிட்டா. கீதாம்பரி சந்தேகப்பட்டுக் கேள்விகளைக் கேட்க… தோணின பொய்களைச் சொல்லிச் சமாதானப்படுத்திட்டு வர நேரமாயிடுச்சு."
"அண்ணிக்கு டெலிவரி…?"
"ஆயிடுச்சு. ஆண்குழந்தை. வெயிட்லஸ் சைல்ட். லைட் பாக்ஸ்ல வெச்சிருக்காங்க! குழந்தை பிறந்ததுக்காக சந்தோஷப்படக்கூட முடியலை! "
"நான் பம்பாய் போனதுக்கு அண்ணிகிட்ட என்ன காரணம் சொன்னீங்கப்பா…?"
"பிஸினஸ் விஷயமா நீ கொச்சியிலிருந்து பம்பாய்க்குப் போனதாச் சொல்லியிருக்கேன்."
"அண்ணி நம்பிட்டாங்களா…?
நம்பலைன்னு நினைக்கிறேன். ஹரிஹரன்கிட்ட உடனடியா பேசியாகணும்ன்னு ஒரே அடம். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை ரமணி. அங்கே ஹரிஹரனைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?"
"இல்லை…! ஆனா, அண்ணன் ஃபோகஸ் ப்ராடக்ட் விஷயமா யாரையோ பார்க்கிறதுக்கு மலபார்ஹில்ஸ் ஏரியாவுக்குப் போயிருக்கார். இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா என்னையும் திவாகரையும் மலபார்ஹில்ஸ் ஏரியாவுக்குக் கூட்டிட்டுப் போய் அங்கே இருக்கிற எல்லா பிஸினஸ் பார்ட்டீஸ்கிட்டேயும் ஹரிஹரனைப் பத்தி விசாரிச்சார். ஆனா யாருக்குமே அண்ணனைப் பத்தி தெரியலை…"
"மேற்கொண்டு இன்ஸ்பெக்டர் என்ன நடவடிக்கை எடுக்கப் போறதா உத்தேசம்?"
"அவர் வெக்ஸ் ஆயிட்டார்! மலபார்ஹில்ஸ் பெரிய பெரிய பணக்காரர்கள் இருக்கிற இடம். விசாரணை, சோதனைன்னு சொல்லிட்டு இரண்டாவது தடவை அங்கே போக முடியாது. போனா மானநஷ்ட வழக்கு அது இதுன்னு போலீசையே கோர்ட்டுக்கு இழுத்துடுவாங்க. ஸோ, இந்த விஷயத்துல நிதானம் காட்டி, ஹரிஹரனைக் கண்டுபிடிக்க வேற மார்க்கத்தைத்தான் தேடியாகணும்ன்னு சொல்லிட்டார். இப்ப நான் போலீஸ் ஸ்டேஷனிலிருந்துதான் பேசிட்டிருக்கேன்…"
"ர… ம… ணி…" மாசிலாமணிக்குத் தொண்டைக் குழியில் அழுகை வெடித்தது.
"சொ… சொல்லுங்கப்பா!…"
"இந்த ராத்திரிப் பொழுது விடியறதுக்குள்ளே ஹரிஹரனைக் கண்டுபிடிச்சுட்டா பரவாயில்லை… இல்லேன்னா கீதாம்பரியைச் சமாளிக்க முடியாது. டெலிபோனில் ஹரிஹரன் மாதிரி இப்போ உன்னால பேசவும் முடியாது. அப்படியே பேசினாலும் கண்டுபிடிச்சுடுவா."
"நீங்க சொல்றது சரிதாம்பா… அண்ணிகிட்ட அண்ணன் மாதிரி என்னால இயல்பா பேச முடியாது. நிச்சயமா மாட்டிக்குவேன்."
"இப்ப என்ன பண்றது ரமணி?"
"அப்பா! நீங்க தைரியமா இருங்க… இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா வேற ஏதாவது ஏற்பாடு பண்ணி அண்ணனைக் கண்டுபிடிக்க முயற்சி எடுத்துக்குவார்ன்னு நினைக்கிறேன்…"
"அடுத்த பன்னிரண்டு மணி நேரத்துக்குள்ளே ஹரிஹரன், உன்னோட அண்ணிகிட்ட பேசியாகணும் ரமணி! ராத்திரி பூராவும் நான் ஹாஸ்பிடல்லதான் இருப்பேன்… நீ எப்ப வேணுமின்னாலும் போன் பண்ணலாம்."
"ச… சரிப்பா!…" கண்களில் நீரோடு ரிஸீவரை வைத்துவிட்டு, எதிரில் உட்கார்ந்திருந்த மல்ஹோத்ராவை ஏறிட்டான் ரமணி. குரல் தழுதழுத்தது.
"சார்! அங்கே அண்ணியோட ஹெல்த் கண்டிஷன் சரியில்லை. அண்ணன் இருக்கிற இடத்தை எப்படியாவது ட்ரேஸ் பண்ணி அண்ணிகிட்டப் பேச வைக்கணும்னு அப்பா சொல்றார்."
மல்ஹோத்ரா புதுப் பான் ஒன்றை வாய்க்குக் கொடுத்துவிட்டுக் கைகளை விரித்தார்.
"மிஸ்டர் ரமணி! நீங்களும் உங்க அப்பாவும் படற அவசரத்துக்கு… இது நடக்கிற காரியமில்லை. பம்பாய் ஒரு குக்கிராமம் இல்லை. மகாப்பெரிய நகரம். கிட்டத்தட்ட இரண்டு கோடி ஜனத்தொகை. இதுல ஹரிஹரனை எங்கே போய்த் தேடறது? நாளைக்குக் காலையில அசிஸ்டெண்ட் கமிஷனர்கிட்ட பேசி ஒரு போலீஸ் ஸ்க்வாட்டை நியமனம் பண்ணி, அவங்ககிட்டதான் தேடற வேலையை ஒப்படைக்கணும்."
"ச… சார்…" ரமணி பேச வாயைத் திறக்கும்முன், அந்தக் கான்ஸ்டபிள் சல்யூட்டோடு மல்ஹோத்ராவுக்கு முன்னால் வந்து நின்றார். ஹிந்தியில் சொன்னார்.
"சார்! குர்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிண்டே உங்களைப் பார்க்க வந்துட்டிருக்கார்."
நாற்காலியை எடுத்துப் போடுவதற்குள், அந்த நடுத்தர வயது ஷிண்டே அபார உயரத்தில் நரைக் கிருதாவோடு உள்ளே வந்தார்.
கைகள் குலுக்கப்பட்டதும் ஹிந்தியில் ஒரு நிமிஷ நேரக் குசல விசாரிப்புக்குப் பின், விஷயத்துக்கு வந்தார் ஷிண்டே.
"மிஸ்டர் மல்ஹோத்ரா! ஓட்டல் சில்வர்ஸாண்டில் தங்கியிருந்த ஹரிஹரன் என்கிற ஒரு நபர் நேற்றைய ராத்திரி காணாமல் போயிட்டதாகவும், அந்தக் கேஸை நீங்கதான் ஹேண்டில் பண்ணிட்டிருக்கிறதாகவும் கேள்விப்பட்டேன், உண்மையா?"
"ஆமா!"
"அந்த ஹரிஹரனைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?"
"இல்லை… அது சம்பந்தமாத்தான் இப்போ பேசிக்கிட்டிருக்கோம். இவர்தான் அந்த ஹரிஹரன் ப்ரதர் ரமணி. இது ப்ரதர் இன் லா திவாகர்."
அவர்களைப் பார்வையால் ஷிண்டே நனைத்துவிட்டு மல்ஹோத்ராவை ஏறிட்டார்.
"நீங்க சொல்ற அந்த ஹரிஹரன் காணாமல் போன நேற்றைய அதே ராத்திரியில், குர்லா பகுதியிலிருந்து மேலும் ரெண்டு பேர் காணாமப் போயிருக்காங்க. ஒரு ஆண், ஒரு பெண். ஆணோட பேர் விட்டல். பெண்ணொட பேர் நிஷா. இந்த நிஷா ஒரு பத்திரிக்கை ரிப்போர்ட்டர். நிஷா நேத்துச் சாயந்தரம் மழை வர்றதுக்கு முந்தி வீட்டைவிட்டு வெளியே போயிருக்கா. இந்த நிமிஷம் வரைக்கும் வீடு திரும்பலை. விட்டலையும் காணோம். விசாரணையில் நிஷா தமிழ்நாட்டைச் சேர்ந்த பொண்ணுன்னு தெரிய வந்ததாலே… அது ஹரிஹரனோட சம்பந்தப்பட்ட விவகாரமா இருக்கலாமேன்னு நினைச்சு உங்ககிட்ட ஒரு ஃபார்மல் என்கொய்ரிக்காக வந்தேன்."
மல்ஹோத்ரா ரமணியை ஏறிட்டார்.
"பத்திரிக்கை ரிப்போர்ட்டர் நிஷாவை உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியாது சார்!"
"விட்டல்…?"
"பேரைக் கேள்விப்பட்டதுகூட இல்லை."
"திவாகர், நீங்க…?"
"எனக்கும் தெரியலை சார்!"
ஷிண்டே தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்த நிஷா, விட்டல் போட்டோக்களை எடுத்து மேஜையின் மேல் போட்டார்.
"ஸீ த ஃபோட்டோஸ்!"
ரமணி, திவாகர் அந்த ஃபோட்டோக்களைப் பார்த்து விட்டுத் தீர்க்கமாகத் தலைகளை ஆட்டி, உதடுகளைப் பிதுக்கினார்கள்.
************
ஆர்யா பார்வையைக் கூர் சீவிக்கொண்டு பங்களாவின் இருட்டில் மசமசப்பாக வரும் உருவத்தை உற்றுப் பார்த்தாள்.
"வருவது யார்…?"
"வால் சந்தா…?"
"நிஷாவா…?"
நிதானமான நடையில் உருவம் பக்கத்தில் வந்ததும் பிடிபட்டது… கண்களுக்கு!
வால் சந்துதான்!
ஆர்யாவின் ரத்த ஒட்டம் சகஜ நிலைமைக்குத் திரும்ப, உடல் வியர்ப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது. ஜன்னலருகே
குரல் கேட்டது.
"அம்மா!"
"என்ன வால் சந்த்?"
"நீங்க சொன்ன அந்தப் பொண்ணு நிஷா, கம்பி போட்ட ரூமுக்குள்ள மயக்கமாக் கிடக்கிறா. பூட்டின பூட்டும் அப்படியே இருக்கு."
ஆர்யாவின் முகம் அதிர்ச்சிக்குப் போயிற்று. ‘டாக்டரைத் தாக்கியது நிஷா இல்லையென்றால் வேறு யார்?’
"வால் சந்த்!…"
"அம்மா!…"
"டேபிள் மேலே ஒரு பொண்ணு கிடக்கிறாளா?"
"மொட்டை அடிச்ச பொண்ணுதானே?"
"ஆமா!"
"அவளும் மரக்கட்டையாட்டம் கிடக்காம்மா!"
"அவங்க ரெண்டு பேரும் டாக்டரைத் தாக்கலைன்னா இது யாரோட வேலை?"
பயம் உடம்பின் முக்கியமான இடங்களைப் பிறாண்டியது.
"அம்மா! இந்தச் சாவிகொத்து டேபிள் மேல இருந்தது."
வால் சந்த் சாவிக்கொத்தை ஜன்னல் வழியாக நீட்ட, ஆர்யா வாங்கிப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
"வால்சந்த்! இது டாக்டரோட சாவிக்கொத்துதான். இதுல இருக்கிற பெரிய சாவியை உபயோகப்படுத்தி உட்பக்கமா பூட்டியிருக்கிற
முன்பக்கக் கதவைத் திறக்கலாம். போய்த் திற! நானும் உள்ளே வந்துடறேன்."
"சரிங்கம்மா!"
மெள்ள வால் சந்த் இருட்டில் நகர்ந்தான்!
(தொடரும்)
“